Top Stories

Grid List

கோலாலம்பூர், அக்.1- டாமான்சாராவில் மெனாரா மில்லின்னியமில் உள்ள உணவுக்கடைகளின் வரிசைக்குள் திடீரென புகுந்தது ஆடம்பரக் கார் ஒன்று. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லாததால் யாரும் காயமடை யவில்லை.

விலையுயர்ந்த ஆடம்பரக் காரான பென்ட்லி ரகக் காரை ஓட்டிவந்த ஒரு வழக்கறிஞரான 51 வயதுடைய நபரும் இந்த விபத்தில் காயமடையவில்லை. கார் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறிய வேளையில், பார்க்கிங் கார்டை எடுத்து பயன்படுத்த முனைந்த போது அந்தக் கார்டு கை நழுவி காருக்குள்ளேயே கீழே விழ, அதை எப்படியாவது எடுத்துவிடலாம் எனக் காரை ஓட்டியவர் முயற்சித்த போது தவறுதலாக எண்ணெய் பெடலை அவர் அழுத்தி விட்டார்.

எதிரே இருந்த தடுப்பையும் மீறி அந்தக் கார் பாய்ந்து சென்று உணவுக் கடைகளுக்குள் புகுந்தது. நல்லவேளையாக அந்தப் பகுதி யில் வாடிக்கையாளர்கள் யாரும் உணவருந்திக் கொண்டிருக்கவில்லை.

இது குறித்து போலீசார் புலன்விசாரனை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துரைத்த போக்குவரத்துத் துறைப் போலீஸ் அதிகாரி, சம்பந்தப்பட்டவரிடம் தாங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். சிசிடிவி கேமிராவின் பதிவைக் கட்டட நிர்வாகத்திடமிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்திருப்பதாக அவர் சொன்னார்.

 

 

கோலாலம்பூர், அக்.1- கழிப்பறைத் தொட்டிக்குள் கை சிக்கிக் கொண்ட நிலையில் கையை வெளியே எடுக்கமுடியாமல் பெரும் அவதிக்கு உள்ளான மூத்த ரேலா தோண்டூழியப் படையைச் சேர்ந்த பெண்மணியை முடிவில் தீயணைப்பு, மீட்புப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீட்டனர். 

கோலாலம்பூர், ஜாலான் ஹங் லெகியுவிலுள்ள அஞ்ஜூங் சிங்கா அடுக்குமாடி வீட்டின் 3ஆவது மாடியில் வசித்து வந்த அந்தப் பெண்மணி, தம்முடைய பல் செட் தவறுதலாக கழிவுத் தொட்டிக்குள் விழுந்து விட்ட போது அதனை எடுப்பதற்காக கையை உள்ளே விட்டார். ஆனால் கையை அவரால் வெளியே எடுக்கவே முடியாமல் போனது.

உடனடியாக தீயணைப்பு, மீட்ட்புப் படைப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ஜாலான் ஹங்துவா தலைமையகத்தில் இருந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்மணியின் கையை மீட்கும் முயற்சியில் இறங்கினர் என்று தலைமை அதிகாரி சம்சோல் மாரீப் சைபானி சொன்னார்.

அந்தப் பெண்மணி ஒரு இனிப்பு நீர் நோயாளியாவர். அவருடைய கையில் இரத்த ஓட்டம் சரிவர செல்லாவிடில் கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த மீட்புப் படை வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டனர். கிட்டத்தட்ட 3 மணிநேரப் போராட்ட த்திற்குப் பின்னர் கழிப்பு தொட்டியில் சிக்கியிருந்த அந்தப் பெண்மணியின் கையை மீட்டனர்.

 

 

கோலாலம்பூர், அக்.1- சட்டவிரோதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளின் சொத்துக்களைக் கைப்பற்றவும் வங்கிக் கணக்குகளை முடக்கவும் வகைசெய்யும் புதிய சட்டம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது. 

இந்தச் சட்டத்தை முதலாளிகள் கடைபிடிப்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இன்று முதல் சட்டத்தை மிகக் கடுமையாக அமல்படுத்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் முனைப்புக் காட்டுவர் என்று அதன் தலைமை இயக்குனர் முஸ்தபார் அலி சொன்னார்.

சட்டவிரோதத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது, அவர்களுக்குப் புகலிடம் தருவது போன்ற செயல்களில் முதலாளிகள் ஈடுபடுவதை நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவொரு மோசமான குற்றச்செயலாகும் புதிய சட்டத்தின் கீழ் முதலாளிகளுக்கு எதிராக சொத்துக்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்பாக முழுவீச்சில் விசாரணை நடத்தப்படும் என்று முஸ்தபார் அலி கூறினார். 

 

 

 

 

கங்கார், அக்.1- அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மசீச ஈடுபட்டுள்ளது. தேசிய முன்னணியின் தலைவர் நஜிப்புடன் இது குறித்து விவாதித்த பின்னர் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவர் என்று மசீச இளைஞர் தலைவர் செனட்டர் சோங் சின் வூன் தெரிவித்தார்.

வேட்பாளாராகக் கூடியவர்கள் எனக் கருதப்படுவோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மசீச தலைமைத்துவம் அது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.

14ஆவது பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வியூகங்களில் நாங்கள் முன்கூட்டியே இறங்கியுள்ளோம் அடையாளம் காணப்பட்ட தொகுதிகளில், முன்மொழியப்படும் வேட்பாளர்கள் பரிசீலனையும் இதில் அடங்கும்.

'ஒன்றுபட்டோம், வலுப்பெற்றோம்' என்ற கோட்பாட்டின் கீழ் கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு ள்ளோம். இப்போது மசீசவுக்குள் 'ஏ-டீம் பி-டீம்' என எதுவும் இப்போது இல்லை என்று செனட்டர் சோங் சின் வூன் சொன்னார்.

 

 

 

ஷாஆலம், அக்.1- பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் மீண்டும் பாஸ்கட்சியை கொண்டு வருவதற்கான முயற்சியில் எல்லா எதிர்க் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி  கூறினார்.

இதுவொரு கூட்டு முற்சியாக அமையவேண்டியிருக்கும். அனைத்து கட்சிகளும் தனிப்பட்ட தலைவர்களும் மீண்டும் பேச்சு வார்த்தை மேஜையில் அமரவேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் எது சிறந்தது என்பதை நாம் விவாதிக்க வேண்டும் என்று அவர் நிருபர்களிடம் பேசிய போது தெரிவித்ததார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் பாஸ் கட்சி மீண்டும் இடம் பெறக்கூடிய  சாத்தியம் இருக்கிறது என பெர்சத்து மலேசியா கட்சியின் தலை வரான டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு தங்களின் பக்கம் பாஸ் கட்சியை ஈர்க்கக்கூடிய சக்தியாக பெர்சத்து கட்சி விளங்கமுடியும் என்றார் மொகிதீன்.

எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் பணி நம்மில் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று அஸ்மின் அலி சுட்டிக்காட்டினார். 

அதேவேளையில் பாஸ் கட்சிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக மொகிதீனால் செயல்பட முடியும் என்று சிலாங்கூர் பாஸ் கட்சியின் தலைவர் இஷ்கந்தார் அப்துல் சமாட் குறிப்பிட்டார்.

 

 

 

கோலாலம்பூர், அக்.1- பயங்கரவாத இயக்கங்களுக்கு பணம் திரட்டுவதற்காக ஆள் கடத்தல்களில் ஈடுபட்டு பணம் பறிக்கும் குற்றக் கும்பல்களின் செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று குற்றவியல் ஆய்வு நிபுணரான பி.சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.

பிலிப்பைன்சில் செயல்படும் அபு சயாப் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பிணைப் பணத்திற்காக கடத்தும் கும்பல்களிட மிருந்து புதிய மிரட்ட ல்கள் உருவெடுக்கும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் ஆய்வாளரான சுந்தரமூர்த்தி குறிப்பி ட்டார்.

மலேசிய மற்றும் இந்தோனிசியாவைச் சுற்றிய கடல் பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள முக்தாடில் சகோதரர்கள் கும்பல், அண்மையில் முற்றாக துடைத்தொழிக்கப் பட்டிருக்கும் நிலையில் ஆள்கடத்தல் குறையும் என்று எதிபார்க்க முடியாது. புதிய கும்பல்கள் உருவெடுக்கலாம் என்றார் அவர். 

பிலிப்பைன்ஸ் இராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் முக்தாடில் சகோதரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 6 சகோதரர்களைக் கொண்ட இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே சிறையில் இருந்து வருகிறார். மேலும் இருவர் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டனர்.

இந்த முக்தாடில் சகோதரர்கள் கொல்லப்பட்டதால் இப்போதைக்கு ஒரு ஆள் கடத்தல் கும்பல் ஒழிக்கப்பட்டது எனலாம். ஆனால், இது அதிகாரிகளுக்கு தற்காலிக நிவாரணம் தான். முக்தாடில் சகோதரர்களுடன் தொடர்பு வைத்திருந்த மற்ற கும்பல்கள் அந்த இடத்தைப் பிடிக்க முயற்சிக்கும் என்று சுந்தரமூர்த்தி தெளிவுபடுத்தினார்.

குற்றவுலகில் பணம் பண்ணுவதுதான் அடிப்படை. எனவே இப்பகுதிலுள்ள இதர கும்பல்கள் ஆள் கடத்தலில் இறங்கும். முக்தாடில் கும்பலுக்கு அபு சயாப் பயங்கரவாத இயக்கம் பாதுகாப்புத் தந்து வந்தது போல, அடுத்து வரும் புதிய கடத்தல் கும்பல்களும் தீவிரவாதிகளின் அரவணைப்பில் செயல்படும் என்றார் அவர்.

 

கோலாலம்பூர்,  அக்டோபர் 1- நம் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக   தொடக்கப் பள்ளி முதல்   இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்காக  கூடுதல் வகுப்புக்களை வழிநடத்தி வரும் ஶ்ரீ முருகன் நிலையம், முதல்முறையாக  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான   தேசிய நிலையிலான பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக   தேசிய நிலையில் பூப்பந்து போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

மூன்று மண்டலங்களாக நடைபெறும் இப்போட்டியின், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பகாங் மாநிலத்திற்கான முதல் மண்டலச் சுற்று இன்று தொடங்கியது.   

இதனைத் தொடர்ந்து எதிர்வரும்  அக்டோபர் 8-ஆம் தேதி,  ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானிலும், அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி, கெடா, பினாங்கு மற்றும் பேரா ஆகிய மண்டலங்களில் நடைபெறும். 

நாட்டில், தேசிய நிலையில் அதிகமான இந்திய பூப்பந்து விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  இந்த பூப்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மற்றும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு என மூன்று பிரிவாக இப்போட்டி நடைபெறுகிறது. 

இன்று நடைபெற்ற முதல் மண்டலச் சுற்றில் சிலாங்கூர் மாநிலத்திற்கான போட்டி, பெட்டாலிங் ஜெயா, சேலஞ்சர் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. 

இன்றைய போட்டியின் சிறப்பு விருந்தினராக சக்கர நாற்காலி பூப்பந்து போட்டிகளில் பல பதக்கங்களைக் குவித்து பெருமை சேர்த்த முன்னாள் பூப்பந்து விளையாட்டாளரான மாரியப்பன் பெருமாள் கலந்துகொண்டார். 

கடந்த 1981-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான  பூப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டது தொடங்கி 50 பதக்கங்களை வென்றுள்ளார். 

இதுவரை ஹாங்காங், பார்சிலோனா, சியோல் , மான்செஸ்டர்,  அட்லாண்டா, பேங்காக்,  சிட்னி, மெல்பர்ன், ஏதென்ஸ், துபாய், மணிலா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 

இவ்வாறான விளையாட்டாளர்களை அறிமுகம் செய்வது மூலம்,  இளம் தலைமுறையினரிடையே பூப்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை மேலோங்கச் செய்யும் முயற்சியில் ஶ்ரீ முருகன் நிலையம் ஏற்பாடு செய்து வருகிறது. 

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 1000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

இப்போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும்  நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும். மாபெரும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 5000 ரிங்கிட் ரொக்கம், பரிசுக் கேடயம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். 

வெற்றியாளரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில், மலேசிய பூப்பந்து சங்கம் அவர்களுக்கு மூன்று மாத இலவச பயிற்சியையும் வழங்கும். 

ஶ்ரீ முருகன் நிலையத்தினரின் இந்த தேசிய நிலையிலான பூப்பந்து போட்டியில் மொத்தம் 141 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்சிலோனா, செப்.30- பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்தியானோ ரொனால்டோவுக்குச் சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்பு ள்ள ஜெட் விமானம் பார்சிலோனா நகரிலுள்ள எல் பிராட் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக் குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த யாரும் கடுமையாகக் காயமடையவில்லை. தரையிறங்குவதற்கான கியரில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது அந்த விமானத்தில் ரொனால்டோ பயணம் செய்யவில்லை. அவர் சாம்பியன்ஸ் லீக போட்டிக்காக ஜெர்மனியில் இருந்தார்.

விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து சிறிது நேரம் விமானநிலையம் மூடப்பட்டது. விமானி சிறைய காயங்களுக்கு உள்ளானதால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 31 வயதுடைய ரொனால்டோ கடந்த வருடம் இந்த விமானத்தை வாங்கினார். இதனை அவர் சில வேளைகளில் வாடகைக்கு விடுவதுண்டு. 

அவ்வாறு வாடகைக்கு விட்டிருந்த வேளையில், இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. பெரும்பாலும் தம்முடைய காதலியுடனும் குடும்பத்தினருடனும் உல்லாசப் பயணங்களுக்கு ரொனால்டோ இந்த விமானத்தைப் பயன்படுத்தி வந்தார்.

 

 

 

சிப்பாங், செப்.30- ஞாயிறன்று நடைபெறவிருக்கும் மலேசியன் கிரேண்ட் ஃபிரி கார் பந்தயத்திற்கான முதலாவது பயிற்சிப் போட்டி யின் போது பந்தயக் கார் ஒன்றில் தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரெனால்ட் காரை ஓட்டிய டென்மார்க் வீரர் கெவின் மாக்னஸ்சென், இந்தப் பயிற்சிப் பந்தயத்தின் போது ஒரேயொரு சுற்று மட்டுமே  ஓடினார். பின்னர் அவர் டையர்கள் மாற்றும் 'பிட் லேன்' பகுதிக்கு விரைந்து வந்து காரை நிறுத்திய மறுகணமே, கார் தீப்பற்றியது. 

உடனடியாக காரிலிருந்து தாவிக் குதித்து வெளியேறினார். அவருடைய காரின் இயந்திரப் பகுதியில் இருந்து தீப்பரவியது.

அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். எரிபொருள் கசிந்து கொண்டே இருந்ததால் தீயணைப்ப தில் கடும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் வேறு வழியின்றி நடந்து கொண்டிருந்த பயிற்சிப் போட்டி நிறுத்தப்பட்டது.

நிலைமை சரியான பின்னர், 15 நிமிடங்கள் கழித்துப் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ரெனால்ட் கார் அணியைச் சேர்ந்த ஊழியர்கள் புகையினால் பாதிக்கப் பட்டவர்களாகக் காணப்பட்டனர்.

 

 

லண்டன், செப்.28- இங்கிலாந்தின் தேசிய கால்பந்துக் குழு நிர்வாகியாக சேம் அல்லார்டைஸ் பொறுபேற்ற 67-ஆவது நாளிலேயே அந்தப் பதவியிலிருந்து விலகினார். பத்திரையாளர்கள் மேற்கொண்ட இரகசிய உளவு நடவடிக்கை ஒன்றின் போது இவரது சில தவறான நடவடிக்கைகள் அம்பலமானதன் விளைவாக அப்பொறுப்பிலிருந்து அவர் விலக நேர்ந்தது.

ஒரு கிளப்பிலிருந்து இன்னொரு கிளப்பிற்கு கால்பந்து வீரர்கள் மாறும் போது விதிமுறைகளை எவ்வாறு ஏமாற்றுவது என்பது தமக்குத் தெரியும் என்றும் இதற்கான ஆலோசனைகளை தாம் வழங்கியுள்ளதாகவும் சேம் அல்லார்டைஸ் தெரிவித்திருப்பதை பத்திரிகை ஒன்றின் நிருபர்கள் அம்பலப்படுத்தியால் அவரது நிர்வாகி வேலை பறிபோனது.

வர்த்தகரைப் போல பாவனை செய்து, இந்த நிருபர்கள் அவரை அணுகிப் பேசி இந்த விவகாரத்தை இப்போது அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சந்திப்பு, அவர் இங்கிலாந்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்று முதலாவது குழு பயிற்சிக்கான பணியைத் தொடங்குவதற்கு முன்பு நடந்திருக்கிறது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமிராவில் இந்த உரையாடல்கள் பதிவாகியுள்ளன.

இங்கிலாந்து கால்பந்து சங்கமும் சேம் அல்லார்டைசும் பரஸ்பர இணக்கத்தின் பேரில் பதவி விலகல் முடிவை எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்முடைய செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டதாக இங்கிலாந்து கால்பந்து சங்கம் தெரிவித்தது. 

அவருக்குப் பதிலாக நடப்பு துணை நிர்வாகியான கெரெத் சவுத்கேட் இங்கிலாந்து குழுவின் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்து குழுவின் நிர்வாகி பொறுப்பு என்பது தலைமைத்துவ முன் உதாரணத்திற்குரிய ஒரு பொறுப்பாகும். எல்லா காலங்களிலும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நிர்வாகி விளங்க வேண்டும் என்று சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

கால்பந்து வீரர்கள் வெவ்வேறு கிளப்புகளுக்கு மாறுவது தொடர்பான விதிமுறைகளை எப்படி ஏமாற்றுவது என்பது தமக்குத் தெரியும் என்றும் அத்தகைய செயலில் ஈடுபட்டுவரும் ஏஜெண்டுகளையும் தமக்குத் தெரியும் என்றும் சேம் அல்லார்டைஸ் அந்தச் சந்திப்பின் போது கூறியுள்ளார். 

மேலும் இந்த உரையாடலின் போது முன்னாள் இங்கிலாந்து நிர்வாகி ரோய் ஹோட்ஜன் எப்படி பேசுவார் என்பது குறித்து இவர் எக்கச்சக்கமாகக் கிண்டல் அடித்திருக்கிறார். யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக விளையாட முடியாமல் சரிவு கண்டதால் கடந்த ஜுலையில் ஹோட்ஜனுக்குப் பதிலாக புதிய நிர்வாகியாகசேம் அல்லார்டைஸ் நியமிக்கப்பட்டார்.

 

 

கோலாலம்பூர், செப்.27- நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறும் பேட்மிண்டன் பயிற்சிக்காக கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் வி.பூபதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவில் அந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றார் பூபதி.

எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை இந்தப் பயிற்சி தோக்கியோவில் நடைபெறவுள்ளது. மலேசியாவிலிருந்து 10 வயது முதல் 12 வயது வரையிலான இளம் பேட்மிண்டன் வீர்ர்கள் 30 பேரை இதற்காக தேர்வு செய்யும் பணி மேற்கொ ள்ளப்பட்டது. 

நாடு தழுவிய அளவில் நடந்த இந்தத் தேர்வில் 3,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் சிறந்த ஆட்டக்காரர்கள் 30 பேர் தேர்ந்தெடு க்கப்பட்டனர். அந்த 30 பேரில் ஒருவராக ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார் பூபதி.

இந்த இளம் வீரர்களின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் தேசிய பேட்மிண்டன் வீரரான வோங் சூன் ஹான், ஜப்பான் பயிற்சி செல்லும் சிறந்த வீரருக்குரிய தேர்வுச் சான்றிதழைப் பூபதிக்கு வழங்கினார்.

இதனிடையே இந்தத் தேர்வில் வென்ற பூபதிக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன் தம்முடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

இந்தத் தகவலை அறிந்த பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத்துறைகளைச் சேர்ந்த பலரும் பூபதிக்கு தங்களின் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் கூறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

hi among the 30 students selected

நீலாய் செப் 27 – இந்திய இளைஞர்களின் கால்பந்துத் திறனைப் புலப்படுத்தும் வகையில் எம்.ஐ.எஸ்.சி -மிஃபா அணி, எப்.ஏ.எம் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதியை எட்டிய நிலையில், நேற்று முன்தினம் ஏர் ஆசியா அணியோடு நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் மிஃபா அணி 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையை கண்டுள்ளது.

அடுத்து நடைபெறவிருக்கும் 2ஆவது சுற்று அரையிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைக்கும் என மிஃபாவின்  தலைவர் டத்தோ டி.மோகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். 

அடுத்த ஆட்டம் (2ஆவது அரையிறுதி) வருகின்ற 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஷா அலாம் திடலில் மாலை 4.15 மணியளவில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்டத்தில் மிஃபா வெற்றியைப் பதிவு செய்வதன் வழி, பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் தகுதியை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் 2ஆவது அரையிறுதியில் வென்றால் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் இந்தியர் குழு என்ற வரலாற்றைப் படைக்க முடியும். அந்த வகையில் ஞாயிறன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என்றூ டத்தோ மோகன் கூறினார்.

முதல் சுற்று ஆட்டத்தின் போது இரண்டு குழுக்களுமே சிறப்பாக விளையாடின. முற்பகுதி ஆட்டத்தில் ஏர்ஆசியா 1 கோல் அடிக்க, ஆட்டம் சூடு பிடித்தது.  அதனைத் தொடர்ந்து பிற்பகுதி ஆட்டத்தில் மீஃபா அணியின் சார்பில் தீபன்ராஜ் ஒரு கோலைப் புகுத்தியதால் ஆட்டம் சமநிலையானது. 

மிஃபா அணி வீரர்கள் வெற்றிக் கோலை அடிக்க கடுமையாகப் போராடினர் என்றாலும் முடிவில் ஆட்டம் சமநிலை கண்டது. 

ஈப்போவில் நடைபெற்ற எப்.ஏ.எம். கிண்ண மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் பெல்க்ரா எப்.சி அணியும், பி.கே.என்.பி அணியும் 0-0 என்ற நிலையில் சமநிலை கண்டுள்ளன. 

 

இஸ்லாமாபாத், அக்.1- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலின் எதிரொலியாக, இந்தியத் திரைப்படங்கள் தனது திரையரங்குகளில் திரையிடப் படமாட்டாது எனப் பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. பெரும்பாலான திரையரங்குகள் உடனடியாக இந்தியப் படங்களைக் காட்சிகளில் இருந்து அகற்றின.

குறிப்பாக, லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்தியப் படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, இந்தியத் திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பதற்கு இந்திய படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

காஷ்மீரில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 17 இந்திய இராணுவ வீரர்கல் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்தியா தனது எல்லையை ஒட்டிய  பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டுப் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடித் தாக்குதல்களை நடத்தி முகாம்களை அழைத்தது.

இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் போதெல்லாம் முதலில் பாதிப்படைவது இருநாடுகளுக்கும் இடையிலான திரைப்படத் தொழில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் போலிவுட் திரைப்படங்கள், பாகிஸ்தானில் எப்போதுமே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வருவது வழக்கமான ஒன்றாகும். உள்ளூர்த் திரைப்படங்களின் வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக நிலவுகின்றன.

குறைந்தபட்சம், நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும் வரையில் இந்தியத் திரைப்படங்களை திரையிடுவதில்லை என்று பாகிஸ்தானின் முன்னணி திரைப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதேவேளையில், இந்தத் தடையினால் தங்களது வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

 

சென்னை, அக்டோபர் 1- தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, வெளிநாட்டிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 

முதல்வர் ஜெயலலிதா கடந்த  செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட  முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்  அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைப் புரிந்து  ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

பெங்களூர்,  செப்டம்பர் 30-   பெலகாவி மாவட்டம் கானாபூர், அருகே நந்தகடா போலீஸ்  எல்லைக்கு உட்பட்ட அரளு கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 24).  இவர்,    தனது வீட்டுத் தோட்டத்திற்குச் சென்ற போது, இவரைப் பாம்பு தீண்டியதாக நம்பப்படுகிறது. ஆனால் அதனை உணராத  ருத்தரப்பா வீட்டிற்குத் திரும்பிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதனால், அவரது உறவினர்கள் உடனடியாக அவரை கானாபூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் ருத்ரப்பாவை பாம்பு கடித்ததை உறுதி செய்த மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர்.  அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆயினும், அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டார். 

இந்நிலையில், பாம்பு பிடிப்பவர் ஒருவர்  ருத்ரப்பாவின் குடும்பத்தாரைச் சந்தித்து, பாம்பு தீண்டி இறந்தவரைத் தம்மால் 12 மணி நேரத்திற்கு பிழைக்க வைக்க முடியும். அதற்கு ருத்ரப்பாவின்  உடல் மீது உப்பை போட்டு மூடினால், அவர் 12 மணி நேரத்திற்குள் உயிர் பிழைத்து விடுவார் என கூறியுள்ளார்.  இதனை உண்மை என்று  குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் ருத்ரப்பாவின் உடலை வைத்தனர். முகம் தவிர, உடலின் எல்லா பகுதிகளும் உப்பால் மூடப்பட்டது.  45 நிமிடங்களுக்கும்  மேல் அவரது உடல் உப்பால் மூடப்பட்டிருந்தது. ருத்ரப்பா எப்படியும் பிழைத்து விடுவார் என நம்பி அவரது குடும்பத்தினர்  உப்பால் மூடப்பட்ட சடலத்தின் அருகிலேயே காத்திருந்தனர்.  

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  "பாம்பு கடித்து பலியான ருத்ரப்பா மீண்டும் உயிர் பிழைத்து வர வாய்ப்பில்லை.  யாரோ சொன்னதையெல்லாம் நம்ப வேண்டாம் என அறிவுரை கூறியதும் தான் குடும்பத்தினர், ருத்ரப்பா இனி மீண்டு வர மாட்டார் என்பதை உணரத் தொடங்கினர்.  

அதன் பிறகு அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதன் பிறகு  ருத்ரப்பாவின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இச்சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மும்பை, செப்டம்பர்  30 - காஷ்மீர், உரி  தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான உறவில் விரிசல் விழுந்துள்ளதால், பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியத் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்படுவதாக இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் ஆ,கிய இரு நாடுகளுக்குமிடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்க தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.  மேலும்,  பாகிஸ்தான் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தடை பொருந்தும் எனக் கூறப்படுகிறது.  

இந்த தீர்மானம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக, உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால், உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நிகழ்த்தியது. இதனிடையே பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பஞ்சாப்  மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லை கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

சண்டிகர்,   செப்டம்பர் 29-  இந்திய  விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்பட க்கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில்  உள்ள எல்லையோர கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிரு க்கின்றனர் . 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், புகுந்து இந்தியா நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி வரலாம் என எதிர்பார்க்க ப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து எல்லை முழுவதும்  இராணுவம் தீவிர கண்காணிப்பில் உள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் அனைத்திலும் மக்கள் வெளியேற்றப்பட்டும் கிராமமே காலியாக்கப்பட்டு வருகிறது.  

எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மக்கள் அனைவரும்  வெளியேற்றப்படுவதால், பதற்றம் நிலவி வருகிறது. 

பீகார்,  செப்டம்பர் 29-  பீகார் மாநிலத்தில்  பிரேத பரிசோதனைக்காக இறந்த உடலை பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்பதாக கங்கை நதியில் மூழ்கி உயிரிழந்த ஒருவரைப் பல நாட்களுக்குப் பின் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உடலை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால், 24 மணி நேரமாக இறந்த உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அருகிலுள்ள பாகல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.  

எனினும் இறந்த உடலை கொண்டு செல்ல பணம் இல்லாததால், ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு உறவினர்கள் கேட்டுள்ளனர். 

ஆனால் அதற்கும், மருத்துவமனையில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.  இதனையடுத்து வேறுவழியின்றி, பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இன்றைய நாள்

 
 

 

 

Advertisement 1

Advertisement 2

Advertisement 3

Advertisement 4

Top Stories

Grid List

சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மஹாளயம் என்று பெயர். 

நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.

நம் தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப் படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில்; அவர்கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும்.

மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும். முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள்.

அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும்.

யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாகச் செய்து மூதாதையரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம்! 

டார்ம்ஸ்டாட், (ஜெர்மனி) செப்.30- வால் நட்சத்திரம் தொடர்பாக பன்னிரெண்டு ஆண்டுகால ஆய்வுப் பயணத்திற்குப் பின்னர் ரோசெட்டா விண்கலம் மரணத்தை தழுவுகிறது. சொல்லப் போனால் இதுவொரு தற்கொலை என்லாம். எந்த வால் நட்சத்திரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்ததோ, அதே வால் நட்சத்திரத்தின் மீது மோதி உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறது ரோசெட்டா.

2004ஆம் ஆண்டில் 100 கோடி பவுண்ட் செலவில், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தினால், அனுப்பப்பட்ட ரோசெட்டாவின் ஆயுள்காலம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 'சூர்யூமோவ் -ஜெராசிமெங்கோ' எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்தி ரத்தை ஆராய்வதற்காக ரோசெட்டா அனுப்பப்பட்டது.

பத்து ஆண்டு காலத்திற்கு மேலாக, அந்த வால் நட்சத்திரத்தை விரட்டிக் கொண்டே சென்ற ரோசெட்டா, பின்னர் 2014ஆம் ஆண்டில் தன்வசம் இருந்த 'பிலே' என்ற சிறிய விண் ஆய்வு வாகனத்தை அந்த வால் நட்சத்திரத்தின் மீது இறக்கிவிட்டது.

பூமியின் தோற்றம் பற்றிய பூர்வீகத்தைக் கண்டறிய இந்த வால் நட்சத்திர ஆய்வு மிக அவசியமானதாகும். ரோசெட்டாவின் ஆய்வுப்பணிகள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. தான் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த வால் நட்சத்திரத்தின் மீது அடுத்த சில மணி நேரங்களில் ரோசெட்டா வால் நட்சத்திரத்தின் விழுந்து மோதவிருக்கிறது.

சுமார் 4 கிலோமீட்டர் அகலத்தைக் கொண்டது இந்த ஐஸ் வால் நட்சத்திரம். ஆகக் கடைசியாக அது வால் நட்சத்திர த்தின் மோதி மடியும் போது ஏற்படும் தாக்கத்தின் விளைவுகளைப் பதிவுசெய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். கிட்டத்த ட்ட 19 கிலோமீட்டர் உயரத்தி லிருந்து அது கீழ்நோக்கி இறங்கிச் சென்று முடிவில் மோதுறும். மலேசிய நேரப்படி இன்று மாலை 7மணிக்கும் பிறகு ரோசெட்டாவின் மோதலும் மரணமும் நிகழக்கூடும். தன்னுடைய 12 ஆண்டுகாலப் பயணத்தின் போது ஒரு லட்சத்து 16ஆயிரம் புகைப் படங்களை ரோசெட்டா எடுத்து அனுப்பி யுள்ளது.

"ரோசேட்டா தனது மரணத்தை நெருங்கிவிட்டது. நாங்கள் ஒரு நண்பனை இழப்பது போல் சோகம் அடைந்துள்ளோம். இந்த விண்கலத்தை வெகுகாலமாகவே நாங்களும் பின் தொடர்ந்தே சென்று கொண்டிருந்தோம். இனி அது முடிவுக்கு வரப்போகிறது" என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

 

 

 

 

 

ரியாத், செப்.30- நியூயார்க் உலக வாணிப மைய இரட்டைக் கட்டடத்திற்கு எதிராக செப்.-11-இல் நடத்தப்பட்ட விமானத் தற்கொலைத் தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்குத் தொடுக்கக்கூடும் என்பது குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுப்பதை, அமெரிக்க அதிபர் ஒபாமா தமது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்து இருந்தார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றம் அதிபரின் இந்தத் தடையை அகற்றும் தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது.

தம்முடைய ரத்து அதிகாரத்தை மீறும் வகையில் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வழக்கத்திற்குப் புறம்பான ஒரு நடைமுறை என்று அதிபர் ஒபாமா சாடினார். 

உலக வாணிப மையக் கட்டடத் தாக்குதலில் 3 ஆயிரம் பேர் மாண்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்குத் தொடுக்கக்கூடும் என்று அந்நாடு அச்சம் தெரிவித்தது.  

பயணிகள் விமானங்களைக் கடத்தி, உலக வாணிப மையக் கட்டடங்கள் மீது மோதி பேரழிவை ஏற்படுத்திய அந்தப் பயங்கர வாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட 19 தீவிரவாதிகளில் 15 பேர் சவுதி அரேபிய பிரஜைகள் ஆவர். 

சவுதி அரேபியாவுக்குக்கு இதுவரை இருந்து வந்த வழக்குக்கு எதிரான பாதுகாப்பு இப்போது இல்லாமல் போய்விட்டது. அமெரிக்கா உள்பட பல நாடுகளை இது பாதிக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

 

 

 

 

 

திருப்புவனம், செப்டம்பர் 30- தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான  நடிகர் தனுஷ்தான் சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என திருப்புவனத்தைச் சேர்ந்த தம்பதியர் ஒருவர்  பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். 

திருப்புவனத்தைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாள் எனும் இத்தம்பதியருக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு கலையரசன் என்கிற மகன் பிறந்ததாகவும், பிளஸ்-1 படிக்கும் போது, தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும், "தனுஷ்" என தனது பெயரை மாற்றிக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், அதன் பிறகு தங்களை வந்து பார்க்கவே இல்லை என்றும் இத்தம்பதியர் கூறுகின்றனர். 

சென்னைக்குச் சென்று தனுஷைச் சந்திக்க முயன்றால், கஸ்தூரி ராஜா  குடும்பத்தினர் தங்களைத் தடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

"என் மகன் படித்துக்கொண்டிருந்தான். திடீரென படிக்க பிடிக்கவில்லை என்று  சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். பலவாறு இது குறித்து புகார் செய்துவிட்டோம். என் மகன் தான் தனுஷ்" என மீனாள் கூறுகிறார். 

 

Advertisement