வேதத்தில் கூறப்பட்ட “சரஸ்வதி நதி” எங்கே?: கோடி கோடியாய் கொட்டித் தேடும் இந்தியா

Vaasagar padaippu
Typography

இந்துக்களின் புண்ணிய நதி எது என கேட்டால் அனைவரும் சொல்வது கங்கா, யமுனா, சரஸ்வதி. காசிக்குப் போனால் கங்கையைக் காணலாம், தாஜ்மகாலுக்குச் சென்றால் யமுனையைக், வேதத்திலும், மகாபாரதத்திலும் கூறப்படும் சரஸ்வதி எங்கே?
 சரஸ்வதி நதி  வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தில் அனைத்து நதிகளிலும் சிறப்பானதாக சரஸ்வதி நதி புகழப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க புண்ணிய நதி 4000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.  
 ஆனால் இந்தியாவின் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, மாயமாகிப் போன சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சரஸ்வதி நதியைத் தேடும் படலத்தில் தற்போது ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் களமிறங்கியுள்ளன.
 இதற்கான முதல் கட்ட முயற்சியாக, ராஜஸ்தான் மாநிலம் மத்திய அரசாங்கத்திடமிருந்து 70 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ளது.
காணாமல் போன சரஸ்வதி நதியைத் தேடுவதற்காக,  ராஜஸ்தான் மாநிலம் வடிகால், நீர் திட்டமிடல் ஆணையத்தை அமைத்துள்ளது (RRBWRPA) .
இதனிடையே ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் வெளியிட்ட வரைபடத்தில், சரஸ்வதி நதி அமைந்திருந்ததாக கருதப்படும் இடத்தில் நிலத்தடி நீர் சுரப்புக்கான தடங்கள் காணப்படுவதை உறுதி செய்துள்ளது. எனினும், இந்த நிலத்தடி நீர் சுரப்பு தடங்கள் தான் காணாமல் போன சரஸ்வதி நதி என்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தான் அரசாங்கம், சரஸ்வதி நதி மீதான தேடலில் இதுவரை கிடைத்த தகவல்களை அடுத்த ஆறு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என RRBWRPA ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜஸ்தானைப் போன்று ஹரியானா மாநிலமும் சரஸ்வதி நதி தேடலுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அரியானா சரஸ்வதி பாரம்பரிய அபிவிருத்தி சபையை உருவாக்கியுள்ளது. இச்சபை ஐ.நா-வின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ மற்றும்  ASI எனப்படும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கூடத்துடன் இணைந்து செயலாற்றும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே வற்றிவிட்டதாகவும்,காணாமல் போனதாகவும் கூறப்படும் சரஸ்வதி நதி தற்போது கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் உள்ளதா என பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம். ஆனால், சாத்தியங்கள் இருப்பதாகவே காட்டுகின்றன இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.
கடந்த 2003-ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் ASI எனப்படும் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம்,  ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை இணைக்கும் 10 இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
 இது வரை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே பாயும் “கக்கார் நதி” தான் பண்டைய இந்திய இலக்கியங்களிலும், வேத இதிகாசங்களிலும் கூறப்படும் சரஸ்வதி நதி என்ற கணிப்பும் நிலவுகிறது.
ஆனால் இந்த கணிப்பு ஒன்றும் புதியது அல்ல.
கிழக்கு நோக்கிய கிளைநதியான கக்கார் நதி, அப்போதைய காலக்கட்டத்தில் “சர்ஸ்சுதி” என்றே அழைக்கப்பட்டுள்ளதாகவும், சரஸ்வதி என்ற சொல்லின் திரிபு தான் “சர்ஸ்சுதி” என்றானதாகாவும்,  1880-ஆம் ஆண்டு இந்த கக்கார் நதி குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த மார்க் ஆவ்ரல் ஸ்டேயின் என்கிற தொல்பொருள் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.
 இந்த கணிப்புக்கு மேலும் நம்பிக்கையளிக்கும் வகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு  “The Lost River; On the Trail of Saraswati’ எனும் புத்தகத்தில், பிரஞ்சு அறிஞர் மிக்கேல் டானினோ, சரஸ்வதி நதி என்பது  கற்பனை அல்ல என்றும் கக்கார் நதியுடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இவ்வாண்டு மே மாதம், ஹரியானா மாநிலம், சரஸ்வதி நதியைத் தேடுவதற்கான பணியைத் தொடங்கிய போது ஆற்றுப்படுகையில் சில நீர்க்குளங்களை அடையாளம் கண்டது. ஆனால் அதன் பின்னர், மற்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சரஸ்வதி நதி புண்ணிய நதியாக வேதகாலத்தினின்றே புகழப்படுகிறது. ரிக்வேதத்தின் பாடலில் சரஸ்வதியானவள் அம்பிதமே, நாதிதமே, தேவிதமே சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். இதன் பொருள் “சிறந்த நதி, சிறந்த பெண் கடவுள்” என பொருள்படுகிறது.

முற்றிலும் காணாமல் போன ஒரு நதியைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு எத்தனைக் காலம் தேவைப்படும் என்றே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால்,மோடி தலைமையிலான அரசாங்கம் காணாமல் போன நதியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சரஸ்வதி நதி தேடல் வசமாகுமா? காத்திருப்போம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS