Top Stories

 புத்ராஜெயா, மே.24- சீனாவைச் சேர்ந்த ஷிஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனம் மலேசியாவின் புரொட்டோன் ஹோல்டிங்ஸ் கார் நிறுவனத்தின் 49.9 விழுக்காடு பங்குகளை வாங்குகிறது என அறிவிக்கப்பட்டது.

இந்தப் பங்குகளை இதுவரை வைத்திருந்த டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து இப்போது சீன நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.

அதேசமயத்தில், இந்த வர்த்தக இணக்கத்தின் ஒரு பகுதியாக, லோட்டஸ் கார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனமே வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளது.

நஷ்டத்தில் புரொட்டோன் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் பங்குகளை கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதன் வழி புரொட்டோன் புது உந்துதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தின் முடிவில் புரொட்டோன் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் வரையில் இழப்பை அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பங்கு விற்பனைக்கான உடன்பாடு காணப்பட்டிருக்கிறது. அடுத்த ஜூலை மாதம் இதற்கான உடன்பாடு திட்டவட்டமாக கையெழுத்தாகும் என்று டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் தெரிவித்தது.

 

 

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.21- பங்குச் சந்தை நிலவரம் தொடர்ந்து மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலை நீடிக்குமானால் தொழிலாளர் சேமநிதியான இபிஎப் வாரியம் தனது உறுப்பினர்களுக்கு வழங்கும் இலாப ஈவு இவ்வான்டில் கூடுதலாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

கடந்த இரண்டுகளாக, அதாவது 2015 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளிலும் குறைவான இலாப ஈவையே இபிஎப் வழங்கியது.  ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டில் 6.75 விழுக்காடு வரை இலாப ஈவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாகவே பங்குச் சந்தையில் தரமான முதலீடுகளைச் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக குறைந்த இலாப ஈவு வழங்கப்பட நேர்ந்தது.

ஆனால், இவ்வாண்டில் பங்குச் சந்தை நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படத்தொடங்கி விட்டது. இந்நிலை இவ்வாண்டு இறுதிவரை நீடிக்குமானால் இலாப ஈவை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று இபிஎபின் தலைமை நிர்வாகச் செயல் அதிகாரி டத்தோ ஷாரில் ரிட்ஸா ரிடுவான் சொன்னார்.

 

தோக்கியோ, ஏப்ரல்.12- உலகின் பிரசித்திபெற்ற மின்னியல் நிறுவனமான டொஷிபா, தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளமுடியாத இக்காட்டில் இருக்கிறது. நிறுவனத்தின் நிதிநிலை கணக்கறிக்கை இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மின்னியல் சாதனங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் வரை பரந்து காலூன்றி இருக்கும் டொஷிபா, உலகப் பெருநிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்ட போதிலும், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பரை வரையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் 480 கோடி அமெரிக்க டாலராகும்.

இந்த இழப்பைக் காட்டும் கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமல் இருமுறை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் கணக்குத் தணிக்கை அதிகாரிகள் இதை அங்கீகரிக்க மறுத்து வருவதே இதற்குக் காரணமாகும். 

இதன் விளைவாக, தோக்கியோ பங்குச் சந்தையிலிருந்து டொஷிபா நீக்கப்படும் ஆபத்தில் உள்ளது. இது குறித்துக் கருத்துரைத்த அதன் தலைவர் சட்டோஷி சுனாகாவா, தங்களது நிறுவனம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளுக்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் நிதி அறிக்கையை கணக்குத் தணிக்கையாளர்கள் அங்கீகரிக்காமல் இருப்பது பெரும் கவலையைத் தருகிறது என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பல மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விலக நேர்ந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டு காலத்திற்கு மேலாக நிறுவனத்தின் இலாபத்தை வேண்டுமென்றே உயர்த்திக் காட்டியது மீதான ஊழல் காரணமாக அவர்கள் விலகினார்கள்.

அதேபோன்ற நெருக்கடி ஒன்று இவ்வாண்டு ஜனவரியில் உருவானது. டொஷிபாவின் அமெரிக்கத் துணைநிறுவனமான வெஸ்ட்டிங் ஹவுஸ் நிறுவனம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மார்ச்சில் திவாலில் வைக்கப்பட்டது. இதனைத் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

டொஷிபாவின் கணினி சிப்ஸ் வர்த்தகப் பிரிவை தைவானின் மின்னியல் நிறுவனமான 'ஃபோக்ஸ்கோன்' வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளது. அதற்காக 270 கோடி டாலர் தரவும் அது தயாராகவுள்ளது என்றாலும் அந்த விற்பனை வருமானம் டொஷிபாவை தூக்கி நிறுத்தப் போதுமானது அல்ல என்றே கருதப்படுகிறது. 

 

கோலாலம்பூர், மார்ச்.24- தங்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலைகளைக் கொண்ட வீடுகளை வாங்குவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விடிவு வராது என்று தெரியவந்துள்ளது.

குறைந்த விலை வீடுகளின் கட்டுமானம் குறைவாக இருக்கிறது. இந்த ஆண்டில் இது இன்னும் மேலும் மோசமடையும் என்று பேங்க் நெகாராவின் நிதி நிலைத்தன்மை மற்றும் பணப் பட்டுவாடா முறை மீதான 201ந்ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.

மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற மலிவான வீடுகள் உள்நாட்டு சொத்துடமைச் சந்தையில், போதுமான அளவில் இல்லை. சப்ளை குறைவாக இருக்கும் நிலையில் மக்களிடையே தேவை மிக அதிகமாகிக் கொண்ட போகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்தே மக்களின் வருமானநிலை அதிகரிக்கவில்லை. ஆனால் வீடுகளின் விலைகள், மக்களின் வருமான வரம்பையெல்லாம் மிஞ்சிச் சென்று கொண்டிருக்கிறது.

சராசரியாக வீட்டு விலைகள் பெரும்பாலான மலேசியர்களுக்கு எட்டாத அளவுக்குப் போய்க்கொண்டே இருக்கும். இதற்குக் காரணம், அத்தகைய வீடுகளின் சப்ளைக்கும் மக்களின் தேவைக்கும் இடையே நிலவும் இடைவெளியைச் சுட்டிக்காட்டலாம். மக்களின் எதிர்பார்ப்பும் வீடமைப்பாளர்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டுவரையில் மக்களின் தேவைக்கு அதிகமாகவே வாங்கும் திறன்கொண்ட வீடுகள் சந்தையில் இருந்தன. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் நிலைமை தலைகீழாகி, விலைகள் கண்ணை மூடிக்கொண்டு விண்ணைத் தொட்டன.

வாங்கும் திறன் கொண்ட வீடுகளின் சப்ளை குறைவினால் உருவான பாதிப்பு மிகவும் தீவிரமடைந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய குடும்ப வருமானம் மிகவும் மந்தகதியில் அதிகரித்ததுதான். அதாவது ஒரு குடும்பத்தின் வருமானம் என்பது 12 புள்ளி 4 விழுக்காடு அதிகரித்த வேளையில் வீட்டு விலை மட்டும் 17 புள்ளி 6 விழுக்காடாக அதிகரித்தது என்று பேங்க் நெகாரா அறிக்கைச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 கோலாலம்பூர், மார்ச்.24- மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், அதன் வெளிநாட்டுக் கடன்களின் மதிப்பும் அதிகரித்து விட்டது. 2016ஆம் ஆண்டில் மலேசியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடன், கிட்டத்தட்ட 90 ஆயிரத்து 870 கோடி ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் 73 புள்ளி 9 விழுக்காட்டுக்கு இணையானது இந்தக் கடன் தொகை என்று பேங்க் நெகாரா தெரிவித்தது.

இந்தக் கடன் தொகையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அன்னிய கரன்சியில் செலுத்தப்படவேண்டிய கடன்கள். ரிங்கிட் வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெளிநாட்டுக் கடன் மதிப்பு அதிகரிப்புக்கு அப்பாற்பட்டு, இம்முறை 6 புள்ளி 2 விழுக்காடு வரையிலான வெளிநாட்டுக் கடன் புதிதாக அதிகரித்துள்ளது என்று பேங்க் நெகாரா குறிப்பிட்டது.

மலேசியாவின் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவற்கான தவணைப் பணம், அதற்கான வட்டி மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த ஆண்டில் மலேசியாவுக்குக் கிடைத்த ஏற்றுமதி வருமானத்தில் 25 விழுக்காடு வெளிநாட்டுக் கடன்களை அடைக்கவே சரியாக இருக்கும்.

மலேசியாவின் இந்தக் கடன் தொகை என்பது நம்மால் சமாளிக்கக்கூடிய ஒன்றுதான். குறிப்பாக, நாம் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடன்களில் முக்கால்வாசி ரிங்கிட்டில் செலுத்தப்படவேண்டிய கடன்கள் என்பதால் நம்மால் சமாளிக்க முடியும் என்று பேங்க் நெகாரா கூறியுள்ளது.

 ஜொகூர்பார், மார்ச்.13- பொருளாதாரச் சூழல் அவ்வளவு நன்றாக இல்லை. இருந்தாலும், தனது கிளைகளை மூடுவதற்கோ அல்லது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவோ திட்டமிடவில்லை என்று பேங்க் சிம்பானான் நேஷனல் (பி.எஸ்.என்) அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய திட்டங்களை அமல் படுத்துவதன் வழி வைப்புத் தொகையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வங்கியின் பொருளாதார நிலையை வலுப்படுத்தப் போவதாக பிஎஸ்என் வங்கியின் தலைமைச் செயல்நிலை நிர்வாகி டத்தோ அடினான் மானிங் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலுமாக மொத்தம் 403 கிளைகளை அது கொண்டுள்ளது வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய 7,200 ஊழியர்களை அது பெற்றிருக்கிறது.

பிஎஸ்என் வங்கியின் ஜொகூர் தலைமையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ அடினான் மானிங், இதனைத் தெரிவித்தார். கிடத்தட்ட 99 லட்சத்து 90 ஆயிரம் பேர் இந்தச் சேமிப்பு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். இவ்வாண்டு ஜனவரி வரையில் வங்கியிலுள்ள சேமிப்புத் தொகை 1,500 கோடி ரிங்கிட் முதல் 2,000 கோடி ரிங்கிட் வரையாகும்.

நகர்ப்புறங்களிலும், புதிதாக வளர்ச்சி கண்ட பகுதிகளிலும் செயல்பட கூடுதலான பிஎஸ்என் முகவர்களை நியமிப்பதோடு தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக டத்தோ அடினான் சொன்னார்.

 கோலாலம்பூர், மார்ச்.13- மலேசியாவின் இஸ்லாமிய கூட்டுறவு வங்கியான பேங்க் ராக்யாட்டை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளீயாகியுள்ளன.

மலேசியாவின் நிதித்துறையை வலுப்படுத்தும் தனது மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக பேங்க் நெகாரா தற்போது பேங்க் ராக்யாட்டின் மீது கவனம் செலுத்துகிறது. என அந்தத் தகவல் தெரிவித்தது.

பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.பி) எனப்படும் அரசு முதலீட்டு நிறுவனம், பேங்க் ராக்யட்டை வாங்க முனைந்திருக்கிறது. மற்றொரு உள்நாட்டு வங்கியும் இதற்குக் குறிவைத்திருப்பதாக நிறுவனத்துறை வட்டரங்கள் கூறுகின்றன. 

மலேசியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக விளங்கி வரும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் தனது முதலீட்டின் மூலம் பேங்க் ராக்யாட்டை வாங்குவதன் வழி தனது நிறுவனத்துறை மதிப்பை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஓர் இஸ்லாமிய கூட்டுறவு வங்கியான பேங்க் ராக்யாட் தற்போது இலாபகரமான வங்கியாக திகழ்ந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் மொத்தம் 147 கிளைளை அது கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்திய கணக்கெடுப்பின்படி பேங்க் ராக்யாட்டின் சொத்து மதிப்பு 9,930 கோடி ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.

இந்த வங்கி உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டுத் துறை அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது குறி[ப்பிடத்தக்கது.

 

 

 லண்டன், மார்ச்.4- பிரிட்டனில் மெர்ஸிடிஸ் பென்ஸ் கார்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் இங்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமான பென்ஸ் கார்களை திரும்பப் பெறவிருப்பதாக டாய்ம்லெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 51 கார்கள் இத்தகைய தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இவற்றில் பென்ஸ் நிறுவனத்தின் வெவ்வேறுகள் வகையான கார்கள் அடங்கும். இந்தத் தீப்பிடிப்பு சம்பவங்கள் தொடர்பாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து உலகளவில் சுமார் ஒரு மில்லியன் கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

பிரிட்டனில் உள்ள இந்த 75 ஆயிரம் கார்களும் அதில் அடங்கும். இருப்பினும், இதுவரை தீப்பிடிப்பு சம்பவங்களால் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் கூறியது.

மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் ஏ,பி,சி மற்றும் இ-கிளாஸ் கார்கள் மற்றும் அதன் சிஎல்ஏ, ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி ஆகிய வாகனங்களில் உள்ள ஃபுயூஸ்களில் பாதிப்புகள் ஏற்படுவதால் ஏற்பட்டிருப்பதால் தீப் பிடிக்கும் சம்வங்கள் நிகழ்வதாக அது குறிப்பிட்டது.

சில தனிப்பட்ட சூழலில் ஃபுயூஸ்கள் அதிக சூடு அடைகின்றன.

காரை ஓட்ட 'ஸ்டார்ட்' செய்யும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாக ஜெர்மனின் கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன.

 

 

ஷாஆலாம், மார்ச் 2- சீனீயின் விலை கிலோ ஒன்றுக்கு 11 காசுகள் உயர்த்தப்படும் என்று மலேசிய மளிகை வியாபாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.  

விலை அதிகரிப்பு தொடர்பான இந்தத் தகவலை அவருக்கு புலனம் வாயிலாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்ததாகவும் ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வக் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று சங்கத்தின் தலைவர்  ஹொங் சீ மெங் சொன்னார்.

2013-ஆம் ஆண்டிற்கு பிறகு சீனி விலையேற்றம் காணுவது இதுவே முதல் முறை என்றும், இந்தக் காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது விலையேற்றம் மிகக் குறைந்த ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சந்தையில் இப்போது ஒரு கிலோ சீனியின் விலை 2.95- ரிங்கிட் ஆக விற்கப்படுகிறது.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என பஹாவ் சட்டமன்ற உறுப்பினர் சியூ செ யொங் கூறினார். சம்பந்தப்பட்ட அமைச்சிடமிருந்து கிடைத்த தகவலின்படி இது உண்மையே என்றும் சில வியாபாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் பிறகே விலையை ஏற்ற காத்திருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

ரோம், மார்ச் 23- வரி ஏய்ப்பு மற்றும் பணம் பதுக்கும் மதிப்பு அனைத்துலக அளவில் 7 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி மத்திய வங்கி வரி ஏய்ப்பு குறித்த புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை மூன்று பொருளாதார நிபுணர்களும் மேற்கொண்டனர். இந்த ஆய்வு குழுவில் லண்டன் பொருளாதார கல்வி மையத்தைச் சேர்ந்த அறிஞர் ஒருவரும், பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் மற்றும் டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களும் ஈடுபட்டன.

நாட்டின் கட்டுப்பாடுகள் தளர்வாக இருப்பதுதான் வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்று இத்தாலி மத்திய வங்கியின் ஆய்வு கூறி யுள்ளது.

வரி ஏய்ப்பு செய்வது மற்றும் பணப் பதுக்கலில் ஈடுபடுவதில் அனைத்துலக அளவில் இந்தியாவின் பங்கு குறித்தும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பங்கு 4 டாலரிலிருந்து 18,100 கோடி டாலர்களாக உள்ளது. இரண்டு அடிப்படையில் பணம் பதுக்கும் முறையை அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலிருந்து இந்த பணம் மறைக்கப் படுகிறது. இதன் மூலம் அனைத்துலகப்  பொருளாதார வளர்ச்சிப் பங்களிப்பில் அந்நாட்டின் பங்களிப்புக் குறைகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் அறிக்கைபடி அனைத்துலக அளவில் பணம் பதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு 2.5விழுக்காடாக உள்ளது. அதாவது 15,200 கோடி டாலர் முதல் 18,100 கோடி டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.8.9 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடியாகும். பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகள் மூலம் பணப் பதுக்கல் நடக்கிறது.

இந்த ஆய்வு வரி ஏய்ப்பு குறித்து தீவிரக் கவனம் செலுத்தியுள்ளது. மேலும் அனைத்துலக வரி ஏய்ப்புக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளது. முக் கியமாக வரி செலுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த அளவுக்கு  கருப்புப் பணம் பதுக்கப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணப் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த மாதத்தில் இந்திய அரசு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.

மும்பை, மார்ச் 17-  பிரபலத் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் பிஷர் நிறுவனத்தின் அலுவலக் கட்டிடம் ஏலத்திற்கு விடப்படு கிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் நிதி மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

வங்கிகள் மற்றும் கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி வருகின்றன. இந்த நிலை யில், வங்கிகள் அளித்த கடனுக்காக மும்பை யில் உள்ள கிங்பிஷர் இல்லத்தை ஏற்கெனவே எஸ்பிஐ கேப் டிரஸ்டி நிறுவனம் கையகப்படுத் தியிருந்தது. 2,401.70 சதுர மீட்டர் கொண்ட அந்த கட்டிடம் இன்று ஏலம் விடப்படுகிறது. 

ஆன் லைன் மூலம் இந்த கட்டிடம் ஏலம் விடப்படுகிறது. கட்டிடத்தின் மதிப்பு  கிட்டத்தட்ட ரூ.150 கோடி எனவும், ஏல அடிப்படை மதிப்பு ரூ.150 கோடி எனவும் கூறியிருந்தது. ஏலத்துக்கான முன்வைப்பு தொகை ரூ.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏல கேட்பு தொகை ரூ.5 லட்சமாக அதிக ரிக்கும். இந்தக் கட்டிடம் கிங் பிஷர் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகமாக செயல்பட்டது. 

புதுடில்லி, மார்ச் 12-ஐ.எம்.எப். எனப்படும் அனைத்துலக செலாவணி நிதியத்தில் (ஐஎம்எப்) இந்தியாவின் வாக்கு உரிமையை அதிகப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.

நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த ஒதுக்கீட்டு சீர்திருத்தத்தை ஐஎம்எப் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் அனைத்துலக நிதியத்தின்  அதிக முதலீட்டை கொண்டுள்ள 10 உறுப்பினர்கள் பட்டியலுக்குள் வந்துள்ளன.

ஐ.எம்.எப். ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.எம்.எப்.பில் இந்தியாவிற்கு வாக்குரிமை 2.34 விழுக்காடாக இருந்து வந்தது. புதிய முதலீட்டின் மூலம் 2.44 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement