இந்திய பஜாஜ் மோட்டார் சைக்கிள் கெடா குருணில் உருவாகப் போகிறது!

Business
Typography

 கோலாலம்பூர்,அக்.2- உலகிலேயே 3ஆவது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்களான இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தனது தனது மோட்டார் தயாரிப்[பு தொழில் கூடத்தை மலேசியாவில் அமைக்கிறது.

தென்கிழக்காசியாவின் விற்பனைச் சந்தையை இலக்காக வைத்து ஊடுருவும் நோக்கில் கெடாவின் குரூணில் உள்ள தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் பொருத்தும் திட்டம் மேற்கொள்ளப் படவிருப்பதாக அதன் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைவர் ரகேஷ் சர்மா தெரிவித்தார்.

தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்களைப் பொருத்தும் பகுதியை உருவாக்கும் தொழில்நுட்பங்களை பஜாஜ் வழங்கும் பணியைத் திட்டம் ஏற்கெனவே தயார்நிலையில் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த வாகனங்கள் பொருத்தும் தளம், அடுத்த 6 மாதங்களுக்குள் தனது பணியைத் தொடங்கிவிடும். இங்குள்ள அந்தத் தொழிற்சாலை மலேசியாவின் டிஆர்பி-ஹைகோம் நிறுவனத்தின் ஒரு பிரிவான மோடெனாஸுக்கு சொந்தமானது. இதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் பஜாஜ் கையெழுத்திட்டுள்ளது என்று ரகேஷ் சர்மா தெரிவித்தார்.

இந்தியாவின் புனே நகரில் பாஜாஜ்-மோடெனாஸ் வினியோகஸ்தர்களுக்கான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகேஷ் சர்மா இதனைத் தெரிவித்தார்.

மோடேனாஸ் தொழிற்சாலையில் பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படும். மோடேனாஸ் எங்களின் உற்பத்தி மையமாக விளங்கும் என்றார் அவர். 

ஏற்கெனவே பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்குள் பிரவேசித்து விட்டது. அடுத்து தாய்லாந்து மற்றும் வியட்னாமிற்குள் ஊடுருவ திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவின் சிறந்த வர்த்தகச் சுற்றுச் சூழலே தங்களது பிராந்திய மையத்தை மலேசியாவில் அமைக்க முடிவெடுத்தற்குக் காரணம் என்று ரகேஷ் சர்மா விளக்கினார்.