மலேசியப் பொருளாதார வளர்ச்சி  மேல்நோக்கி பயணிக்கிறது! -பிரதமர் 

Business
Typography

 கோலாலம்பூர், அக்.24- மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மதிப்பீட்டு ஆய்வொன்றை வெளியிட்ட உலக வங்கி, நாட்டின் பொருளாதாரம் 5.2 விழுக்காடாக வளர்ச்சி அமையக்கூடும் என்று இரண்டாவது முறையாக மதிப்பீடு செய்துள்ளது. 

மலேசிய அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படுவதையே இது குறிக்கின்றது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால் சில நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிக் கண்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும் என்று 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்  அறிவிப்பிற்கு முன் வெளியிடப்பட்டுள்ள தனது 80 அம்ச பொருளாதார தூரநோக்கத் திட்ட அறிக்கையில் அவர் கூறினார். 

2009-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றப் பின்னர், நஜிப் பொருளாதார உருமாற்றத் திட்டத்தை அமல்படுத்தினார். அத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. 

"2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமராக நான் பதவி ஏற்றேன். அப்போது உலக நாடுகள் 1930-ஆம் ஆண்டிலிருந்த பொருளாதார பின்னடைவைக் காட்டிலும், இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதாரம் தொய்வு கண்ட நிலையில் இருந்தது" என்று நஜிப் நினைவு கூர்ந்தார். 

"உலகப் வாணிபத்தை அடிப்படையாகக் கொண்ட மலேசியா, அந்த பொருளாதார பின்னடைவால் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. நம் ஏற்றுமதி 20 விழுக்காடு தொய்வு கண்டது. 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பொருளாதாரம் 6.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டது" என்றார் அவர். 

2009-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை தேசிய ஒட்டுமொத்த உற்பத்தி வருமானம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. 2.26 மில்லியன் வேலை வாய்ப்புகளும் இக்காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஏழு வருடங்களில், மலேசியாவில் உருவாக்கப்பட்ட 2.26 மில்லியன் வேலை வாய்ப்புகளில், 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் அதிக வருமானத்தைத் தரக்கூடிய வேலை வாய்ப்புகளாகும். 

இதனிடையே, இவ்வருடம் மார்ச் மாதத்தில்மலேசியாவின் ஏற்றுமதி 82.63 பில்லியனாக உயர்வு கண்டுள்ளதாக நஜிப் தெரிவித்தார். இதுவே நாட்டின் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட மாதாந்திர ஏற்றுமதி உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.