பட்ஜெட் 2018: இந்திய வர்த்தகர்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் -கென்னத்

Business
Typography

கோலாலம்பூர், அக்.26- நாளை தாக்கல் செய்யபடவிருக்கும் 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்திய சமுதாய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

நாட்டின் வளர்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சமூகத்தின் பங்கு குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்பில் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அச்சமேளனத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர இந்திய குத்தகையாளர்களை நாட்டின் முக்கிய திட்டங்களில், குறிப்பாக இரயில் சேவை மற்றும் எம்.ஆர்.டி போன்ற பொதுப் போக்குவரத்து திட்டங்களில், ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இத்தகைய பொதுப் போக்குவரத்து திட்டங்களில் ஈடுபடும் தகுதி மற்றும் தேவையான நிதி நிலைத்தன்மை இந்திய குத்தகையாளர்களுக்கு உண்டு என்று அவர் கூறினார். 

இதனிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 'சீட்' எனப்படும் இந்திய தொழில் முனைவர் நிதி திட்டத்தின் கீழ் இந்திய தொழில் முனைவர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய பிரதமருக்கு இவ்வேளையில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.