'ஏர் ஆசியா'வில் இருந்து பதவி ஓய்வா? 'நகைப்புரிய வதந்தி' என்கிறார் டோனி 

Business
Typography

கோலாலம்பூர், டிசம்.14- பிரசித்திப் பெற்ற மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான 'ஏர் ஆசியா'வில் இருந்து தாம் ஓய்வுப் பெறப் போகிறார் என்று வெளியான தகவலை அதன் தலைமைச் செயல்நிலை நிர்வாக அதிகாரியான டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ்  நிராகரித்தார்.

இங்கு நடந்த நிருபர்களின் சந்திப்பின் போது இந்தத் தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது. உடனடியாக இந்தத் தகவலை அவர் மறுத்தார்.

"நான் பதவி விலகவில்லை. நான் பதவியிலிருந்து ஓய்வு பெறவும் போவதில்லை" என்று டான்ஶ்ரீ டோனி தெளிவுப் படுத்தினார். இதற்கு முன்பே அவர் தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தமது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

''நான் பதவி ஓய்வுப்பெறப் போவதாக வந்த வதந்தி நகைப்புக்குரிய ஒன்று'' என அவர் பதிவிட்டுள்ளார். ''ஏர் ஆசியாவின் எதிர்காலத்தை வரையறுக்கும் வகையில் நான் பல்வேறு புதிய நியமனங்களைச் செய்து, அறிவித்து வருவது மிக உற்சாகமானதாக இருக்கிறது'' என்று டிவிட்டர் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

''நான் வேறெங்கும் போகப்போவதில்லை, உற்சாகமான எதிர்காலம் என்முன் நிற்கிறது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர் ஆசியா விமானச் சேவை நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை டான்ஶ்ரீ டோனி அறிவித்து வரும் நிலையில் அவர் பதவி விலகுகிறார்.., ஓய்வுபெறப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியுள்ளன.

முன்பு ஏர் ஆசியாவின் நிர்வாகச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்து வந்த அய்ரின் ஒமார், தற்போது டிஜிட்டல், உருமாற்றம், மற்றும் நிறுவனச் சேவை குழுமத்தின் துணை சி.இ.ஓ. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அவர் வகித்த சி.இ.ஓ. பதவிக்கு 46 வயதுடைய ரியாட் அஸ்மாட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நடப்பு இயக்குனரான டான்ஶ்ரீ அஸ்மாட் கமாலுடினின் புதல்வரே ரியாட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரியாட் மற்றொரு முக்கிய நிறுவனமான நாஷா கார்ப்பரேட் ஹோல்டிங் நிறுவனத்தில் திட்ட, வியூக மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இயக்குனராக இருந்து வருகிறார்.