டிஜிட்டல் நாணயங்கள் சட்டப்பூர்வம் அல்ல; -பேங்க் நெகாரா!

Business
Typography

கோலாலம்பூர், டிச.15- டிஜிட்டல் கரன்ஸிகளை (இலக்கியல் நாணயங்கள்) நாட்டில் உபயோகப்படுத்த சட்டபூர்வமாக எவ்வித ஒப்பந்தமும் இதுவரை செய்யப்படவில்லை. அவை சட்டப்பூர்வமானதல்ல என்று தேசிய வங்கியான பேங்க் நெகாரா எச்சரித்துள்ளது. 

இந்த நாணயங்களை நாட்டிலுள்ள எந்த நிறுவனமும் தங்களின் வணிகத்திற்கு உபயோகிப்பதில்லை என்றும் பேங்க் நெகாரா தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வியாபார உடன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அந்த வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நாணய வணிகத்தில் அதீத ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கின்றன. இணையத்தின் வாயிலாக, இந்த நாணய வியாபாரத்திற்கு தாக்குதல் ஏற்படலாம். அதுமட்டுமல்லாது, சந்தைகளில் இந்த நாணயத்திற்கு பற்றாக்குறை கூட நேரலாம் என்ற அடிப்படையில், இந்த நாணிய வணிகத்தில் ஈடுபடுவோருக்கு பேங்க் நெகாரா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நாணய வணிக பரிமாற்றங்களால் ஒருவருக்கு நஷ்டம் அல்லது பிரச்சனைகள் ஏதும் நேர்ந்தால், வங்கிகளின் சட்டத்திட்டத்தின் கீழ், அவருக்கு உதவிகள் ஏதும் வழங்கப்படாது.நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு வணிகத்திற்கு உட்படுத்தப்படும் கரன்ஸிகளை மட்டுமே பேங்க் நெகாரா ஆதரித்து வருகிறது.  

2001-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் பயங்கரவாத நிதி எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த நாணயங்களை விற்பனைக்கோ அல்லது வாங்குதலுக்கோ உட்படுத்துவோர் குற்றஞ்சாட்டப்படலாம்.