கிளைகளைக் குறைக்க பிஎஸ்என் திட்டமா? -டத்தோ அடினான்

Business
Typography

 ஜொகூர்பார், மார்ச்.13- பொருளாதாரச் சூழல் அவ்வளவு நன்றாக இல்லை. இருந்தாலும், தனது கிளைகளை மூடுவதற்கோ அல்லது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவோ திட்டமிடவில்லை என்று பேங்க் சிம்பானான் நேஷனல் (பி.எஸ்.என்) அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய திட்டங்களை அமல் படுத்துவதன் வழி வைப்புத் தொகையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வங்கியின் பொருளாதார நிலையை வலுப்படுத்தப் போவதாக பிஎஸ்என் வங்கியின் தலைமைச் செயல்நிலை நிர்வாகி டத்தோ அடினான் மானிங் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலுமாக மொத்தம் 403 கிளைகளை அது கொண்டுள்ளது வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய 7,200 ஊழியர்களை அது பெற்றிருக்கிறது.

பிஎஸ்என் வங்கியின் ஜொகூர் தலைமையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ அடினான் மானிங், இதனைத் தெரிவித்தார். கிடத்தட்ட 99 லட்சத்து 90 ஆயிரம் பேர் இந்தச் சேமிப்பு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். இவ்வாண்டு ஜனவரி வரையில் வங்கியிலுள்ள சேமிப்புத் தொகை 1,500 கோடி ரிங்கிட் முதல் 2,000 கோடி ரிங்கிட் வரையாகும்.

நகர்ப்புறங்களிலும், புதிதாக வளர்ச்சி கண்ட பகுதிகளிலும் செயல்பட கூடுதலான பிஎஸ்என் முகவர்களை நியமிப்பதோடு தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக டத்தோ அடினான் சொன்னார்.