ரிங்கிட் வீழ்ச்சி: நமது அன்னியக் கடன் தொகை ரிம.90,807 கோடியை தாவியது!

Business
Typography

 கோலாலம்பூர், மார்ச்.24- மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், அதன் வெளிநாட்டுக் கடன்களின் மதிப்பும் அதிகரித்து விட்டது. 2016ஆம் ஆண்டில் மலேசியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடன், கிட்டத்தட்ட 90 ஆயிரத்து 870 கோடி ரிங்கிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் 73 புள்ளி 9 விழுக்காட்டுக்கு இணையானது இந்தக் கடன் தொகை என்று பேங்க் நெகாரா தெரிவித்தது.

இந்தக் கடன் தொகையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அன்னிய கரன்சியில் செலுத்தப்படவேண்டிய கடன்கள். ரிங்கிட் வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெளிநாட்டுக் கடன் மதிப்பு அதிகரிப்புக்கு அப்பாற்பட்டு, இம்முறை 6 புள்ளி 2 விழுக்காடு வரையிலான வெளிநாட்டுக் கடன் புதிதாக அதிகரித்துள்ளது என்று பேங்க் நெகாரா குறிப்பிட்டது.

மலேசியாவின் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவற்கான தவணைப் பணம், அதற்கான வட்டி மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த ஆண்டில் மலேசியாவுக்குக் கிடைத்த ஏற்றுமதி வருமானத்தில் 25 விழுக்காடு வெளிநாட்டுக் கடன்களை அடைக்கவே சரியாக இருக்கும்.

மலேசியாவின் இந்தக் கடன் தொகை என்பது நம்மால் சமாளிக்கக்கூடிய ஒன்றுதான். குறிப்பாக, நாம் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடன்களில் முக்கால்வாசி ரிங்கிட்டில் செலுத்தப்படவேண்டிய கடன்கள் என்பதால் நம்மால் சமாளிக்க முடியும் என்று பேங்க் நெகாரா கூறியுள்ளது.