உலகக் கறுப்புப் பணம் 7லட்சம் கோடி டாலர்! இந்தியப் பங்களிப்பு 18,100 கோடி!

Business
Typography

ரோம், மார்ச் 23- வரி ஏய்ப்பு மற்றும் பணம் பதுக்கும் மதிப்பு அனைத்துலக அளவில் 7 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி மத்திய வங்கி வரி ஏய்ப்பு குறித்த புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை மூன்று பொருளாதார நிபுணர்களும் மேற்கொண்டனர். இந்த ஆய்வு குழுவில் லண்டன் பொருளாதார கல்வி மையத்தைச் சேர்ந்த அறிஞர் ஒருவரும், பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் மற்றும் டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களும் ஈடுபட்டன.

நாட்டின் கட்டுப்பாடுகள் தளர்வாக இருப்பதுதான் வரி ஏய்ப்பு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்று இத்தாலி மத்திய வங்கியின் ஆய்வு கூறி யுள்ளது.

வரி ஏய்ப்பு செய்வது மற்றும் பணப் பதுக்கலில் ஈடுபடுவதில் அனைத்துலக அளவில் இந்தியாவின் பங்கு குறித்தும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பங்கு 4 டாலரிலிருந்து 18,100 கோடி டாலர்களாக உள்ளது. இரண்டு அடிப்படையில் பணம் பதுக்கும் முறையை அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலிருந்து இந்த பணம் மறைக்கப் படுகிறது. இதன் மூலம் அனைத்துலகப்  பொருளாதார வளர்ச்சிப் பங்களிப்பில் அந்நாட்டின் பங்களிப்புக் குறைகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் அறிக்கைபடி அனைத்துலக அளவில் பணம் பதுக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்கு 2.5விழுக்காடாக உள்ளது. அதாவது 15,200 கோடி டாலர் முதல் 18,100 கோடி டாலர்களாக உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.8.9 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடியாகும். பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகள் மூலம் பணப் பதுக்கல் நடக்கிறது.

இந்த ஆய்வு வரி ஏய்ப்பு குறித்து தீவிரக் கவனம் செலுத்தியுள்ளது. மேலும் அனைத்துலக வரி ஏய்ப்புக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளது. முக் கியமாக வரி செலுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த அளவுக்கு  கருப்புப் பணம் பதுக்கப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணப் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த மாதத்தில் இந்திய அரசு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.