Top Stories

Grid List

கோலாலம்பூர், மே.27- நாட்டின் புகழ்பெற்ற மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.பாலாவின் ‘ஆர்.ஐ.பி? (R.I.P?)’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி தலைநகரில் உள்ள திரையரங்கத்தில் இன்று திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியைக் காண பத்திரிக்கையாளர்களும் சிறப்பு பிரமுகர்களும் அழைக்கபட்டிருந்தனர்.

ஒன்றரை மணி நேரம் உள்ள இத்திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பிண்ணனியை மையமாக கொண்டது. ஒருவர் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பின்னரும், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அபிப்ராயம் எப்படி மாறுகிறது. அந்த மாற்றத்தை அவரின் ஆத்மா எப்படி எதிர்கொள்கிறது என்பதே இப்படத்தின் கதைக்களம்.

மனிதர்களின் வாழ்வியலை அழகாக சித்தரித்ததாக இயக்குனரை பாராட்டினர் இத்திரைப்பட சிறப்புக் காட்சியைக் கண்டு களித்த பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும்.

ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் மலேசிய திரையரங்குகளில் திரையிடப்படும் இந்த ‘ஆர்.ஐ.பி? (R.I.P?)’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று கண்டு களித்து, அதில் உள்ள நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும்படி இயக்குனர் எஸ்.டி.பாலா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

கோலாலம்பூர், மே 18- கலைஞர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் நஜிப் மேடையில் நின்று கொண்டிருந்த போது நடிகர் ஒருவர் தயாரிப்பாளரை திடீரென அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு புத்ராஜெயாவில் நடந்த TN50 எனும் தேசிய உருமாற்ற திட்டத்தில் திரைப்படக் கலைஞர்களுடனான கலந்துரையாடலில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மலாய் படங்களைத் தயாரித்துள்ள டேவிட் தியோ மேடையில் பேசும்போது அரங்கத்தில் பின்பகுதியில் அமர்ந்திருக்கும் கலைஞர்களை நிகழ்ச்சியின் நெறியாளர் ரோஸ்யாம் நோர் கண்டுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.

  ## காணொளி: நன்றி Amicom TV

பிரதமர் நஜிப் மேடையில் இருந்தபோது இந்த குறைக் கூறலை டேவிட் விடுத்தபோது கீழே அமர்ந்திருந்த மாட் ஓவர் என அழைக்கப்படும் நடிகர் சுலைமான் யாசின் சட்டென்று மேடை மீது ஏறி டேவிட்டை நோக்கி காரசாரமாக பேசினார். சில வினாடிகளில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தயாரிப்பாளரை சுலைமான் அறைந்தார். அருகில் இருந்த பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து மேடையிலிருந்து கீழே இறக்கினர்.

பிரதமர் முன்பு இச்சம்பவம் நிகழ்ந்ததால் அரங்கமே சிறிது நேரம் சலசலப்புக்கு ஆளானது. பின்னர் நிகழ்ச்சி நெறியாளர் ரோஸ்யாம் நோர் நடந்த சம்பவத்திற்காக நஜிப்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

கோலாலம்பூர், மே 10- குங்பூ வீரர் புருஸ் லீயின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் ஜூலை மாதம் முதல் படமாக்கப்படவிருக்கிறது. இப்படம் புருஸ் லீயின் மகள் ஷான்னோன் லீயின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

'லிட்டல் டிராகன்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படம் புருஸ் லீயின் ஆரம்பக் கால வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. 1950ம் ஆண்டுகளில் ஹாங்காங்கில் வாழ்ந்தபோது புருஸ் லீ சந்தித்த விசயங்களைப் பற்றி இப்படம் பேசும் என படத்தினை இயக்கவிருக்கும் சேகர் கபூர் கூறினார். 

புருஸ் லீயிடம் இருந்த மனதளவிலான ஆளுமை மற்றும் அவர் மேற்கொண்ட கட்டொழுங்கு விசயங்களே அவரை உலகறிய செய்தன என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளரான திம் வோக்."என் அப்பாவின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் படமாக்கவேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. அவரின் மனிதத்தையும் வீரத்தையும் இதன்வழி மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்" என மகள் ஷான்னோன் லீ கூறினார். 

புருஸ் லீயின் ஆரம்பக் கால தோற்றத்திற்கு ஏற்ற நடிகரை தற்போது படக்குழு தேடி வருகிறது. தேர்வு நடந்தப்பிறகு ஜூலை மாதம் முதல் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, மே 25- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத் தலைப்பின் அறிவிப்பை தனுஷ் தனது தயாரிப்பு நிறுவன டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தும் ரஜினியும் இந்த இரண்டாவது படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்படும் என்று நேற்றே தனுஷ் டிவிட்டரில் கூறியிருந்தார். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு படத்தின் தலைப்பும் அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டன.

படத்தைத் தயாரிக்கும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. எந்திரன், கோச்சடையான் என ரஜினி படங்களின் பெயர்கள் உயரிய நிலையில் இருந்தபோது, இயக்குனர் பா.ரஞ்சித் கபாலி என்று சாதாரண பெயரை வைத்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரும் ரஜினி இணையும் இந்த படத்தின் பெயரும் அவ்வாறு தான் இருக்கும் என்று பலரும் முன்கூட்டியே ஆருடம் கூறியவேளை, கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமாக காலா என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தியிலும் படத்தின் பெயர் இடம்பெற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பையில் வசிக்கும் தாதா பற்றிய கதையாக இப்படம் உருவாகுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சென்னை, மே 25- கபாலிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் இணையும் அடுத்த படத்தை அவரின் மருமகன் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருப்பது அறிந்த விசயம் தான். ரஜினியின் 161வது படமான இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொண்டர்பார் பிலிம்ஸ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "வொண்டர்பார் பிலிம்ஸ் வழங்கும்.. சூப்பர்ஸ்டார் ரஜின்காந்த்தின் 'தலைவர் 161' படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று நண்பகல் 12.30 மணிக்கு )  அறிவிக்கப்படும்" என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எந்திரன், கோச்சடையான் என ரஜினி படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில் கபாலி என்று பெயர் வைத்தவர் ரஞ்சித். ரஜினி இமேஜை விட படத்தின் கதை தான் முக்கியம் என்பதில் குறிப்பாக இருக்கும் ரஞ்சித்தின் அடுத்த பட தலைப்பு எப்படி தான் இருக்கும்?

கபாலி படம் கொடுத்த தாக்கம் இன்னமும் மறையாமல் இருக்க, அதே கூட்டணி மீண்டும் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி போயுள்ளது. இம்மாதம் இறுதியில் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கோலாலம்பூர், மே 24- "பாகுபலி காய்ச்சல்" இன்னும் அடங்கவில்லை சமூக வலைத்தளத்தில். இன்னமும் பலர் பாகுபலி 2 படத்தின் பாடல்களையும் வரிகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் பாகுபலியின் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் ஸ்டிக்கர்கள் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

முகநூலில் பாகுபலி ஸ்டிக்கரா? அட ஆமாங்க. பாகுபலி, கட்டப்பா, சிவகாமி, தேவசேனா, பல்வாள்தேவன், பிங்கலதேவன் மற்றும் காளக்கேயர் ஆகியோரின் சித்திரங்கள் அசைவுகளோடு உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாகுபலி 2-இல் இறுதிக் காட்சியில் பிரபாஸ் தன் மீது திருநீற்றை பூசிக் கொள்ளும் காட்சியும் சிவகாமி தேவியின் பிரபல வசனமான "இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்" என்ற ஸ்டிக்கரும் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகின்றன.

1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் பாகுபலியின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அது சரி... எங்கப்பா அவந்திகா பாத்திரத்தில் நடித்த தமன்னாவை ஸ்டிக்கரில் காணோம். 

குளுவாங், மார்ச் 18:- ஓரின சேர்க்கைக் காட்சியை நீக்கி விட்டு பியூட்டி அன் பீஸ்ட் படத்தைத் திரையிடலாம் என்று உள்துறை துணை அமைச்சர் வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம்அறிவுறுத்தியிள்ளார்.

டிஸ்னி, மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஏற்ப ஓரின சேர்க்கைக் காட்சியைநீக்கிவிட்டால் மட்டுமே இந்த படத்தைத் திரையிட டிஸ்னிக்கு அனுமதி வழங்கப்படும் என உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமது கூறினார்.

டிஸ்னி படத்தில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என உள்துறை அமைச்சு ஒரு முறையீட்டு தாக்கலை வியாழக்கிழமை அறிவித்தது. இந்தப் படத்தில் உள்ள ஓரின சேர்க்கைக் காட்சியைநீக்கினால் மட்டுமே மலேசியாவில் திரையிட முடியும் எனப் படத் தணிக்கை வாரிய தலைவர் டத்தோ அப்துல் ஹலிம் அப்துல் ஹமீத் மற்றும் அமைச்சரவையும் முடிவெடுத்துள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 14- ஆங்கில பட விரும்பிகள் இவ்வாண்டு அதிகம் எதிர்ப்பார்த்த படம் பியூட்டி அண்ட் தே பீஸ்ட். இப்படத்தை மலேசியாவில் திரையிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்டாலும் படம் எப்போது திரைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

நடிகை எம்மா வாட்சன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் முன்னதாக இம்மாதம் 16ம் தேதி திரைக் காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்திடம் சென்ற இப்படத்தை வாரியக் குழு மலேசியாவில் திரையிடுவதற்கு தடை விதித்தது. 

இதற்கு படத்தில் ஓரினக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக காரணம் கூறியது வாரியம். ஆயினும், வாரிய உறுப்பினர்கள் கலந்தாலோசித்து படத்தில் இடம்பெறும் சம்பந்தப்பட்ட சர்ச்சைகுரிய காட்சியினை நீக்கி விட்டு படத்தை திரையிடலாம் என நேற்று கூறியது. 

இந்நிலையில், வாரியம் பச்சை கொடி காட்டிவிட்டாலும் மலேசியாவில் படம் எப்போது வெளிவரும் என்ற கேள்வி குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த தணிக்கை வாரியத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம், "தணிக்கை செய்வது மட்டுமே எங்களின் பணி. படத்தின் கதையையும் அதன் காட்சிகளையும் கண்டு அந்த படம் மலேசியாவில் வெளியிடலாமா என்று முடிவு செய்வது மட்டுமே எங்களின் வேலை. வெளியீட்டு தேதியை நிர்ணயிப்பது நாங்கள் அல்ல" என்று கூறினார். 

மலேசியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள அலபாமாவிலும் ஓரினக் காட்சியினால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 லாஸ் ஏஞ்சலிஸ், மார்ச்.11- கடந்த 2009ஆம் ஆண்டில் வெளிவந்து உலகத் திரைப்பட ரசிகர்களை அசத்திய ஆங்கிலத் திரைப்படமான 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளிவராது என அதன் இயக்குனர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அவதார் படம் நான்கு பாகங்கள் வெளிவரவிருப்பதாக அதன் இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் முன்பே அறிவித்துள்ளார்.

அதன் இரண்டாம் பாகம் இவ்வாண்டில் வெளிவரும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் 201ந்ஆம் ஆண்டில் கூட அது வெளிவரும் சாத்தியம் இல்லை என்று ஜேம்ஸ் கெமரூன் இப்போது அறிவித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டில் வெளிவந்த அவதார் திரைப்படம், உலகளாவிய அளவில் ரசிகர்களை ஈர்த்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.  'டைட்டானிக்' உள்ளிட்ட வசூல் வரலாற்றில் இடம் பிடித்திருந்த பல படங்களின் சாதனைகளை இது முறியடித்தது கிட்டத்தட்ட 280 கோடி டாலர் வரை வசூலை வாரிச் சுருட்டியது.

இதன் காரணமாக அவதார்Avatar 2 மேலும் நான்கு பாகங்கள் வெளிவரும் என்று இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டில் கூட வெளிவர வாய்ப்பில்லை என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Advertisement