நடிகை திவ்யா உன்னிக்கு 2-ஆவது திருமணம்! 

Cinema
Typography

டெக்ஸாஸ் , பிப்.6- சமீபத்தில் விவாகரத்துப் பெற்றுக் கொண்ட பிரபல மலையாள நடிகை திவ்யா உன்னி, திடீரென்று அமெரிக்காவில் பொறியியலாளராக பணிப்புரியும் அருண் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் புரிந்துக் கொண்டுள்ளார். 

பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து திவ்யா உன்னி பிரபலமடைந்தார். கடந்த 2002-ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் சுதீஷ் சேகரனை திருமணம் செய்துக் கொண்ட அவர், அதன் பின்னர் சினிமாவிற்கு முழுக்குப் போட்டு விட்டு, அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் திவ்யா உன்னி நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திவ்யா உன்னிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். 

விவாகரத்து கோரி அவ்விருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்குச் சமீபத்தில்தான் விவாகரத்து கிடைத்தது. இவ்வாறான சூழ்நிலையில், திவ்யா உன்னி திடீரென்று இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இவர்களின் திருமணம் நடந்தது. 

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இது காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமா என்று தெரியவில்லை.   

 

BLOG COMMENTS POWERED BY DISQUS