திரைப்படம்: லீ சோங் வெய் பாத்திரத்தில் நடிக்கும்  இரு இளசுகள்!

மலேசியச் சினிமா
Typography

 கோலாலம்பூர், நவ.15- மலேசியாவின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராரான டத்தோ லீ சோங் வெய்யின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளம் நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து மிகவும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட நடிகருக்கான தேர்வில் 13 வயதுடைய ஜேக் எங்கும் 22 வயதுடைய டோஷ் சானும் வெற்றி கண்டுள்ளனர்.'தி ரைஸ் ஆஃப் லெஜெண்ட்' (Rise Of The Legend) என்ற திரைப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படத்தில் லீ சோங் வெய்யின் தீவிர ரசிகர்களான ஜேக் எங்கும் டோஷ் சானும் நடித்துள்ளனர். தங்களுக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தது அதிர்ஷ்ட வசம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இவர்களில் சிலாங்கூர், சுங்கை புசார் என்ற இடத்தைச் சேர்ந்த ஜேக் எங், ஶ்ரீபெடெனா இடைநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அதேவேளையில் ஜொகூர் பாருவைச் சேர்ந்த டோஷ் சான், முன்பு ஜோகூர், ஜெயா-1 இடைநிலைப் பள்ளியில் படித்து விட்டு தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

'முதலில், இந்தப் படத்தில் நடிக்க நான் தேர்வு பெறவில்லை என்று படத்தின் இயக்குனர் டெங் பீ குறிப்பிட்ட போது, நான் சற்று மனம் தளர்ந்து போனேன். ஆனால் வெகு நேரத்திற்குப் பின்னர் நான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதை இயக்குனர் சொன்ன போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்' என்று ஜேக் எங் சொன்னார். 

சின்ன வயதில் லீ சோங் வெய்யின் முகம் வட்டமாக இருந்தது எனவே, அதற்குப் பொருத்தமான முகம் ஜேக் எங்கிடம் இருந்ததால் அவரைத் தேர்வு செய்ததாக இயக்குனர் டெங் பீ தெரிவித்தார்.

ஆனால், 22 வயதுடைய டோஷ் சானை பொறுத்தவரை, இளம் லீ சோங் வெய்யின் முகத்தோற்றம் அவருக்கு இருந்ததால் படத்தில் நடிக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் படத்தில் லீ சோங் வெய் பாத்திரத்தில் நடிக்கும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததில் தாங்கள் பெருமை கொள்வதாக இவர்கள் கூறினர்.

மேலும், இவர்கள் இருவருமே பேட்மிண்டன் ஆட்டக்காரர்கள். படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட நாள் முதலல் இரண்டு வாரங்களுக்கு மேல் இவர்களுக்கு முன்னாள் வீரர் சான் சோங் மூலம் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் மெர்டாஜாம், கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஜுலை முதல் செப்டம்பர் இறுதிவரை படப்படிப்பு நடத்தப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS