நட்சத்திர கலை விழா: ரஜினி வருவது உறுதி; 2.0 டீசர் வெளியீடா?

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஜன.4- இவ்வார சனிக்கிழமையன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் 'நட்சத்திர கலை இரவு 2018' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது, இந்நிகழ்ச்சியின் போது 'ரோபோ 2.0' திரைப்படம் குறித்த இன்ப அதிர்ச்சி தகவல் ஒன்றை அவர் தனது ரசிகர்களுடன் பகிரவிருக்கிறார் என்று தென் இந்திய நடிகர் சங்கப் பொருளாளரான நடிகர் கார்த்தி சிவக்குமார் கூறினார். 

"ரோபோ 2.0 திரைப்படம் குறித்து ரஜினி சார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்கவிருக்கிறார். இது குறித்து வேறு எந்தத் தகவலையும் என்னால் பகிர்ந்துக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, இந்நிகழ்ச்சியின் போது மேலும் பல 'அதிர்ச்சிகள்' மலேசிய ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன" என்று கார்த்தி சொன்னார். 

இவரின் பேட்டியின்படி ரஜினியின் அடுத்த படமான எந்திரன் 2.0 படத்தின் டீசர் மலேசியாவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

6-ஆம் தேதியன்று நடைப்பெறவிருக்கும் இந்த நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் மலேசிய நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்ளவிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், மற்றும் பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். 

மை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலை இரவு நடைபெறவிருக்கிறது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைப்பெறும்.  

இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க ரசிகர்கள் ரிம.10 தொடங்கி ரிம.30-க்குள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 30,000 டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக மை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுவின் (MyEvents International Group) தலைமை செயல்முறை அதிகாரி ஷாஹூல் ஹமீட் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS