கோலாலம்பூர், மார்ச்.30- மலேசியத் தமிழ்த் திரையுலகில் நன்கு அறிமுகமான இளம் நடிகை சங்கீதா கிருஷ்ணமூர்த்தி, தாம் நடித்து அண்மையில் வெளிவந்த adiwira ku மலாய்த் திரைப்படத்தின் வெற்றி தம்மை ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்கிறார்.

மலாய் திரைப்பட உலகம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அங்கு தமக்கு கிடைத்த அனுபவம், திரையுலகில் நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.

மலேசியத்தமிழ்த் திரையுலகில் 'வெண்ணிற இரவுகள்', 'விளையாட்டு பசங்க', 'மறவன்' ஆகிய படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கி மலேசிய ரசிகர்களைக் கவர்ந்த சங்கீதா, 'வணக்கம் மலேசியா'வுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தமது அனுபவங்களை மிகச் சுவராஸ்யமாக பகிர்ந்து கொண்டிருப்பதை இங்கே காணலாம்.

மலாய்த் திரையுலகம் மாறுபட்ட கதையம்சங்களில் படம் எடுப்பதில் இப்போது தீவிரம் காட்டி வருகிறது. உதாரணமாக, ஒரு கிராமத்து மலாய் பள்ளியில் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியரான ஒரு இந்தியப் பெண்ணின் கதைதான் Adiwira ku. இதுவொரு உண்மைக் கதை.

இனங்களுக்கு அப்பால், இதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து அதிலும் மலாய் திரையுகத்தினால் வெற்றி முத்திரையை பதிக்க முடிகிறது என்றால் அது உண்மையான மலேசியாவை பிரதிபலிப்பதாக இருக்கிறது அல்லவா என்கிறார் சங்கீதா.

இந்தப் படத்தில் மலாய் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தரும் ஒரு இந்திய ஆசிரியராக சங்கீதா நடித்துள்ளார். இதுபற்றி கருத்துரைத்த அவர், இது போன்ற சமுதாயச் செய்திகளைச் சுமந்து வரும் திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைத்தது தமக்கு மிக மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக சொன்னார்.

மேலும், மலேசியத் தமிழ்ப்படங்களில் தாம் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகவும் அடுத்து தயாராகும் 'வெடிகுண்டு பசங்க' படத்தில் மீண்டும் நாயகன் டெனிஸுடன் ஜோடி சேர்ந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும் சங்கீதா சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், மார்ச் 28- அச்சப்பன்... இந்த பெயரைச் சொன்னவுடனே பலருக்கு தானாகவே சிரிப்பு வந்துவிடும் அன்று தனது நகைச்சுவையால் அனைத்து இன மக்களையும் சிரிக்க வைத்தவர் இன்று வாய்ப்புகள் குறைந்து வீட்டு சமையலறையில் பழைய நினைவுகளை அசைப்போட்டப்படி சமைத்துக் கொண்டிருக்கிறார். 

இந்தியர்களுக்கு மட்டுமல்ல மலாய்காரர்களுக்கும் மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் அச்சப்பன் சாமிநாதன். 35 வருட சினிமா வாழ்க்கையில் 37 மலாய் படங்களில் நடித்த பெருமைக்குரியவர் இவர். இவர் நடித்த ராகம் பெமண்டு, ஜண்டா மெலுத்துப், செஜாத்தி ஆகிய படங்கள் இன்று பார்த்தாலும் நகைச்சுவை ததும்பும். படங்கள் தவிர்த்து இவர் மேடையேறிய நிகழ்ச்சிகள் எண்ணில் அடங்கா. இவர் கையில் 'மைக்கை' எடுத்தால் நகைச்சுவைக்கு குறையிருக்காது.

தமிழ்ப்படங்களில் இவர் நடித்தது குறைவு தான் என்றாலும் அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளியேறும் தமிழ் நிகழ்ச்சிகளில் குறிப்பாக, பெஸ்தா தீபாவளி போன்ற நிகழ்ச்சிகளில் இவரின் ஆதிக்கம் அதிகம். இவரின் மலாய் கலந்த நகைச்சுவை ரசிக்க அன்று தொலைக்காட்சி முன் காத்திருந்தவர்கள் உண்டு.

80-களின் தோற்றத்தையும் துடுக்குத்தனமான பார்வையும் இன்று கொண்டுள்ள அச்சப்பனுக்கு வருத்தமெல்லாம், முன்பு போல நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை என்பது தான். ஆக கடைசியாக இவர் நடித்தது மாமாக் கப்கேக் எனும் படத்தில் தான் அதுவும் இரு வருடங்களுக்கு முன். 

நடிக்க வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த சமையல் வேலையில் இறங்கி விட்டார் அச்சப்பன். "சமையல் செய்வது எனது புதிய வேலை. அது என்னுடைய புத்தாக்க சிந்தனையை அதிகரிக்கிறது. புதுப்புது உணவைச் சமைப்பதை ரசித்து செய்கிறேன்" என்கிறார் அவர்.

தற்போது 61 வயதை நெருங்கிவிட்ட அச்சப்பனுக்கு முழு உதவியாக இருப்பது அவரின் குடும்பம் தான். மனைவி யோகேஸ்வரி (வயது 50) மற்றும் மூன்று பிள்ளைகள் இவருக்கு துணையாக இருக்கின்றனர். இவரின் மூத்த மகன் விக்கினேஷ்வரன் (வயது 30) தற்போது சிட்னியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காற்பந்து விளையாட்டாளரான அச்சப்பன் தனது கடந்த காலத்தைச் சற்று நினைவு கூறினார். "முன்பு பெட்டாலிங் ஜெயா பழைய திடலில் வேலை முடிந்த பிறகு பந்து விளையாடுவேன். அப்போது அந்த திடல் ஓரம் நடந்து செல்லும் இன்றைய என்னுடைய மனைவி அன்றைய என் காதலி, என்னை தினமும் பார்த்துக் கொண்டே போவார். காற்பந்தின் மூலமாக தான் அவரை நான் 'கரெக்ட்' பண்ணேன்" என்றார் மகிழ்ச்சியோடு. 

அச்சப்பன் தனது அன்பு மனைவியை கரம்பிடித்தபோது அவருக்கு வயது 26, யோகேஸ்வரிக்கோ வயது 17. 

குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தாலும் நடிக்க வாய்ப்பு இல்லை என்பது அச்சப்பனுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் இன்னும் மக்களை ரசிக்க வைக்க முடியும் என கூறும் அச்சப்பன், தொலைக்காட்சி நிறுவனங்கள் தன்னைப் போன்ற மூத்த கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பினாங்கு, மார்ச் 25- நடிகர் அரவிந்த்சாமி தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பினாங்கு வந்துள்ளார். நேற்றே துவங்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு, பினாங்கு கடலோரம் அவர் நடந்துபோகும் காணொளியை மலேசியர்கள் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

90-களில் மிகவும் பிரபலமான நடிகர் அரவிந்த்சாமி. ஆணழகன் என்று பெண்களால் அழைக்கப்பட்ட இவர், சிறிது காலம் திரைத்துறையை விட்டே விலகி இருந்தார். ஏறக்குறைய 15 வருடங்கள் கழித்து இவர் தனி ஒருவன் படத்தின் வழி மறுபிரவேசம் செய்தார்.

போகன் உட்பட பல படங்களில் வில்லத்தனம் காட்டி வரும் அரவிந்த்சாமி, தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் மலேசியாவிற்கு வந்துள்ளார். படத்தின் முக்கியமான காட்சிகள் பல கோலாலம்பூரிலும் பினாங்கிலும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று பினாங்கு வந்தடைந்த அரவிந்த்சாமி அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது கடற்கரையில் அவர் நடந்து செல்லும் காட்சியை முகநூல் பயனர் ஒருவர் படமெடுத்து அதனை தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு, திரிஷா, மதுபாலா ஆகியோரின் படங்களையும் இணைத்துப் பதிவேற்றம் செய்துள்ளார்.

பினாங்கு பத்து பெரிங்கி கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த காணொளியைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். சதுரங்க வேட்டை 2 படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், மார்ச்.24- பலப் பிரச்சனைகளைத் தாண்டி மார்ச் 30ஆம் தேதியில் மலேசியா முழுவதும் திரையிடப்படவிருந்த  ‘பியூட்டி ஆண்ட் தி பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மலேசியாவில் திரையிடாமல், ஒட்டுமொத்தமாக தடைச் செய்யவேண்டும் என்று 3 அரசு சார்பற்ற இயக்கங்கள் நேற்று போலீஸ் புகார் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரினச் சேர்க்கை காட்சி, மலேசிய மக்களுக்கு பாதகத்தை விளைவிக்கும். அந்தக் காட்சியினால் நம் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்தவொரு நன்மையும் இல்லை. அதனால் இந்தப் படத்தை இங்கு திரையிடாமல் முழுவதுமாக தடை செய்வதில் யாருக்கும் நஷ்டமில்லை என்று புகார் அளித்த மர்தாபாட் ஜாலினான் முஹிப்பா அமைப்பின் தலைவர் அப்துல் ரானி குலுப் கூறினார்.

உள்துறை அமைச்சு தக்க நடவடிக்கையாக இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

More Articles ...