கோலாலம்பூர், மார்ச் 21- பெரும் சர்ச்சைகளுக்குப் பிறகு ஒருவழியாக பியூட்டி அண்ட் தி பீஸ்ட் ஆங்கில படம் மலேசியாவில் வெளியீடு காண்கிறது. வரும் மார்ச் 30ம் தேதி மலேசியா முழுதும் இப்படம் திரைக்காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு சர்ச்சைக்குரிய காட்சியால் படத்தை முழுமையாக வெளியிட முடியாது, சில காட்சிகளை நீக்கவேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்ததை அடுத்து, மலேசியாவில் இப்படம் வெளியாகுமா என்ற கேள்விக்குறி உண்டானது. 

இந்நிலையில் படத்தில் எந்த காட்சியினையும் நீக்க முடியாது என படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி கூறியவேளை, தற்போது இப்படத்தை மலேசியாவில் திரையிடவிருப்பதாக இன்டஸ்திரி இன்சைடர் கூறியுள்ளது.

அதில், படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாறாக, பெற்றோர்களின் கண்காணிப்பில் சிறுவர்கள் பார்க்கும் படமாக PG13 என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், மார்ச் 17- ‘பியூட்டி ஆண்ட் தி பீஸ்ட்’ படத்தில் இடம்பெறும் ஓரினச் சேர்க்கை காட்சியை நீக்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி டிஸ்னி நிறுவனம் கோரிக்கை வைத்தது. 

இதற்குமுன் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கினால் அப்படத்தை மலேசியாவில் திரையிட விடமாட்டோம் என்று அந்நிறுவனம் அறிக்கை விடுத்திருந்தது. அந்த முடிவுக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அஜிஸ் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது திடீரென டிஸ்னி நிறுவனம் அப்படத்திலுள்ள காட்சிகளை நீக்காமல் அப்படியே திரையிட கோரியுள்ளது பலருக்கு அதிர்ச்சியளித்தது. 

முன்னதாக மார்ச் 16ஆம் தேதியில் வெளியிடுவதாக இருந்த இப்படம் தற்போது இந்த விவகாரத்தினால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹரி போட்டர் படத்தில் நடித்து புகழ் பெற்ற எம்மா வாட்சன் நடிக்கும் இந்த படத்தை மலேசியா, சிங்கப்பூர், மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த சர்ச்சை விவகாரத்திற்காக விமர்சித்தும் தடை கோரியும் வருகின்றனர்.

 பூச்சோங், மார்ச்.17–உள்ளூர் கலைஞர் டெனிஸின் சொந்த நிறுவந்த்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘வெடிகுண்டு பசங்க’ (உருமி மேளம்) திரைப்படத்தின் பூஜை பூச்சோங் பெருமாள் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த படப் பூஜையில் மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன், வெளியுறவுத்துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை, மஇகா தேசிய இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

உள்ளூர் படைப்புகள் முன்பை விட எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் நமது கலைஞர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

உள்ளூர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் தருவாயில் மட்டுமே நல்ல படைப்புகள் வெளிவரும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

'விளையாட்டுப் பசங்க', 'வெட்டிப் பசங்க' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வீடு' நிறுவனம் 'வெடிகுண்டு பசங்க' படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநராக டாக்டர் விமலா பெருமாள், ஒளிப்பதிவாளராக பி.சிதம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். 

டெனிஸுடன் அபிமான உள்ளூர்க் கலைஞர்கள் சீலன், கலைவாணி, சங்கீதா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். வித்தியாசமான கதைக் களத்தோடு 'வெடிகுண்டு பசங்க' படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் எல்லா அம்சங்களும் இடம்பெறும் என இந்தப் படத்தின் நாயகன் டெனிஸ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 16- 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' படத்தின் எந்த காட்சியினையும் நீக்க முடியாது என டிஸ்னி நிறுவனம் கூறியது சரி தான் என சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஶ்ரீ நஜ்ரி அஜிஸ் கூறினார். படத்தின் காட்சிகள் ஏதும் நீக்காமல் வெளியிடும் டிஸ்னிக்கு தனது ஆதரவை வெளியிட்டார் நஜ்ரி.

நடிகை எம்மா வாட்சன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் முன்னதாக இன்று திரைக் காணும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்திடம் சென்ற இப்படத்தை வாரியக் குழு மலேசியாவில் திரையிடுவதற்கு தடை விதித்தது. 

இதற்கு படத்தில் ஓரினக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக காரணம் கூறியது வாரியம். ஆயினும், வாரிய உறுப்பினர்கள் கலந்தாலோசித்து படத்தில் இடம்பெறும் சம்பந்தப்பட்ட சர்ச்சைகுரிய காட்சியினை நீக்கி விட்டு படத்தை திரையிடலாம் என கடந்த திங்கட்கிழமை வாரியம் கூறியது.

இந்நிலையில், மலேசியாவில் திரையிடுவதற்காக பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தில் எந்த காட்சியை நீக்க முடியாது என டிஸ்னி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனைக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் படத்தின் காட்சிகளை நீக்கி விட்டால் அதன் திரைக்கதையைப் புரிந்து கொள்ள முடியாது என கூறினார்.

மேலும், "அடுத்த முறை மலேசியக் கலைஞர்கள் யாரேனும் மேடையில் ஏறி திருநங்கைகள் போன்று பாத்திரங்கள் ஏற்று நடித்தால் அவர்களையும் தடை செய்யுங்கள். பிறகே இது சீராகும்" என்று கூறினார்.

More Articles ...