கோலாலம்பூர், நவ.22- தோட்டத்தையே உயிராக நினைத்து வாழ்ந்த மக்களின் பழைய நினைவுகளை மீண்டும் துளிர்க்க செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது மலேசியத் திரைப்படம் தோட்டம்.

இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ இயக்கத்தில் இவ்வாரம் வெளிவரவிருக்கும் மலேசியத் திரைப்படம் தோட்டம். மலேசிய இந்தியர்களின் ஆணிவேராக கருதப்படும் தோட்டத்தினைப் பின்புலமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கான சிறப்பு பிரத்தியேக காட்சி, நேற்று முன்தினம் தலைநகரில் உள்ள பிஜே ஸ்டேட் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார். படத்தில் நடித்த நடிகர்கள் உட்பட பல உள்ளூர் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொதுமக்களும் பிரத்தியேக காட்சியைக் கண்டு களித்தனர்.  

பல தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்த தோட்டம் மேம்பாட்டாளர்களால் வாங்கப்படும்போது அதனால் பாதிக்கப்படும் தோட்டத்து மக்களின் துயரங்களை அழகாக காட்டியுள்ளார் இயக்குனர். தோட்டம் எங்கள் வீடு அல்ல உயிர் என்பது போன்ற வசனங்களுக்கு ஏற்றார்போல் படம் முழுக்க தோட்டத்தின் வாசனை தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்தப் பின் பேசிய துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தோட்டம் படம், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தங்களின் தோட்ட வாழ்க்கை ஞாபகம் வரும் என்றார். மேலும், இம்மாதிரியான மலேசியத் திரைப்படங்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது தாம் சிந்திப்பதாகவும் கூறினார். 

மலேசியப் படங்களை மொத்த மலேசிய இந்தியர்களின் 10 விழுக்காட்டு பேர் திரையரங்களில் வந்து பார்த்தாலும் படத் தயாரிப்பாளர்கள் நன்மை பெற்று, மீண்டும் தரமான படங்களை தயாரிக்க முடியும் என்றும் கூறினார்.

பட இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ பேசுகையில், இப்படம் வழி தாம் கடந்து வந்த தோட்டத்து வாழ்க்கை சம்பவங்களையும் அந்த இனிமையான தருணங்களையும் பதிவு செய்ய நினைத்தது நிறைவேறிவிட்டதாக கூறினார். படத்தின் இறுதிக் காட்சியானது, மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமையவேண்டும் என்பதால் தன்னுடைய ஆசையை காட்சியாக காட்டியதாகவும் அதனைத் தெரிந்து கொள்ள மக்கள் வரும் வியாழக்கிழமை முதல் திரையங்கில் தோட்டம் படத்தைப் பார்க்கலாம் என தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சிக்கு படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்த மூத்த கலைஞர் கே.எஸ்.மணியம், முன்னணி கலைஞர்களான ஹரிதாஸ், சசி மற்றும் தோட்டம் பட கலைஞர்களும் வருகை தந்திருந்தனர். 

 கோலாலம்பூர், நவ.15- மலேசியாவின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராரான டத்தோ லீ சோங் வெய்யின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளம் நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து மிகவும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட நடிகருக்கான தேர்வில் 13 வயதுடைய ஜேக் எங்கும் 22 வயதுடைய டோஷ் சானும் வெற்றி கண்டுள்ளனர்.'தி ரைஸ் ஆஃப் லெஜெண்ட்' (Rise Of The Legend) என்ற திரைப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரவிருக்கிறது.

இந்தப் படத்தில் லீ சோங் வெய்யின் தீவிர ரசிகர்களான ஜேக் எங்கும் டோஷ் சானும் நடித்துள்ளனர். தங்களுக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தது அதிர்ஷ்ட வசம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இவர்களில் சிலாங்கூர், சுங்கை புசார் என்ற இடத்தைச் சேர்ந்த ஜேக் எங், ஶ்ரீபெடெனா இடைநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அதேவேளையில் ஜொகூர் பாருவைச் சேர்ந்த டோஷ் சான், முன்பு ஜோகூர், ஜெயா-1 இடைநிலைப் பள்ளியில் படித்து விட்டு தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

'முதலில், இந்தப் படத்தில் நடிக்க நான் தேர்வு பெறவில்லை என்று படத்தின் இயக்குனர் டெங் பீ குறிப்பிட்ட போது, நான் சற்று மனம் தளர்ந்து போனேன். ஆனால் வெகு நேரத்திற்குப் பின்னர் நான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதை இயக்குனர் சொன்ன போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்' என்று ஜேக் எங் சொன்னார். 

சின்ன வயதில் லீ சோங் வெய்யின் முகம் வட்டமாக இருந்தது எனவே, அதற்குப் பொருத்தமான முகம் ஜேக் எங்கிடம் இருந்ததால் அவரைத் தேர்வு செய்ததாக இயக்குனர் டெங் பீ தெரிவித்தார்.

ஆனால், 22 வயதுடைய டோஷ் சானை பொறுத்தவரை, இளம் லீ சோங் வெய்யின் முகத்தோற்றம் அவருக்கு இருந்ததால் படத்தில் நடிக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் படத்தில் லீ சோங் வெய் பாத்திரத்தில் நடிக்கும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததில் தாங்கள் பெருமை கொள்வதாக இவர்கள் கூறினர்.

மேலும், இவர்கள் இருவருமே பேட்மிண்டன் ஆட்டக்காரர்கள். படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட நாள் முதலல் இரண்டு வாரங்களுக்கு மேல் இவர்களுக்கு முன்னாள் வீரர் சான் சோங் மூலம் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் மெர்டாஜாம், கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஜுலை முதல் செப்டம்பர் இறுதிவரை படப்படிப்பு நடத்தப்பட்டது.

 

கோலாலம்பூர், நவ.8- அண்மையில் பிரிமியர் திரையீடாக வெளிவந்த உள்ளூர் திரைப்படமான 'ஜாங்கிரி' நாளை 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மலேசியத் திரையரங்குகளில் திரைக்கு வருகிறது. 

கிட்டத்தட்ட 22 திரையரங்குகளில் திரையீடு காணும் 'ஜாங்கிரி' படம், இளைய திரைக் கலைஞர்களின் முயற்சியில் உருவெடுத்துள்ளது. 

'ஜாங்கிரி' ஒரு 'காமெடி' திரைக்கதை என்பதால், மலேசிய ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும், திரையரங்குகளைக் கலகலக்கும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி 'வணக்கம் மலேசியா'விடம் கருத்துரைத்தார். 

"எங்களுடைய கடும் உழைப்புக்கும், முயற்சிக்குமான வெற்றி, இப்போது மலேசியர்களின் கைகளில்தான் உள்ளது. ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கக்கூடிய வகையிலான படம் இது என்பதை இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்றார் அவர். 

'ஜாங்கிரி' படத்தைக் காண வருகின்ற ரசிகர்கள், திரையரங்கை விட்டு வெளியேறும் போது, தங்களின் மனச் சுமைகள் அனைத்தும் இறங்கிவிட்டது போன்ற சந்தோஷத்துடன் தான் செல்வார்கள் என்பது உறுதி என்று தயாரிப்பாளர் நந்தினி கூறினார். 

கோலாலம்பூர், நவ.2- விகடகவி மகேன் தயாரிப்பில் “OUTLAW”வின் கெத்து ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் தாமான் புக்கிட் பந்தாயிலுள்ள சீனப் பள்ளி மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கூட்டரசுபிரதேச துணையமைச்சர் செனட்டர் டத்தோ லோகபாலா, மலேசிய மன்னின் மைந்தர்கள், மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர்.

நான் இந்த ஆல்பத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்டேன். அவர்கள் அற்புதமாக பாடி இசையமைத்துள்ளனர். ஆகவே, இந்த ஆல்பத்தை என்னுடை நிறுவனத்தில் கீழ் வெளியிட முடிவு செய்தேன். இதற்கு செனட்டர் டத்தோ லோகபாலா அவர்கள் எனக்கு மிகவும் ஊக்கமளித்தோடு அவரால் இயன்ற உதவியை நல்கினார் என்று விகடகவி மகேன் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் கலைஞர்களுக்கு மக்களின் ஆதரவு மிக முக்கியம் என கூறிய மகேன், அதே நேரத்தில் கலைஞர்களே மற்ற கலைஞர்களுக்கு உதவும் நிலைக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த இசை தொகுப்பு ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக பாடகர்கள் கூறினர். 

இந்நிகழ்ச்சியை தி.எச்.ஆர்.ராகாவின் அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அகிலா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.

More Articles ...