சென்னை, மே 25- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத் தலைப்பின் அறிவிப்பை தனுஷ் தனது தயாரிப்பு நிறுவன டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தும் ரஜினியும் இந்த இரண்டாவது படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்படும் என்று நேற்றே தனுஷ் டிவிட்டரில் கூறியிருந்தார். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு படத்தின் தலைப்பும் அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டன.

படத்தைத் தயாரிக்கும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. எந்திரன், கோச்சடையான் என ரஜினி படங்களின் பெயர்கள் உயரிய நிலையில் இருந்தபோது, இயக்குனர் பா.ரஞ்சித் கபாலி என்று சாதாரண பெயரை வைத்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரும் ரஜினி இணையும் இந்த படத்தின் பெயரும் அவ்வாறு தான் இருக்கும் என்று பலரும் முன்கூட்டியே ஆருடம் கூறியவேளை, கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமாக காலா என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தியிலும் படத்தின் பெயர் இடம்பெற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பையில் வசிக்கும் தாதா பற்றிய கதையாக இப்படம் உருவாகுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சென்னை, மே 25- கபாலிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் இணையும் அடுத்த படத்தை அவரின் மருமகன் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருப்பது அறிந்த விசயம் தான். ரஜினியின் 161வது படமான இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொண்டர்பார் பிலிம்ஸ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "வொண்டர்பார் பிலிம்ஸ் வழங்கும்.. சூப்பர்ஸ்டார் ரஜின்காந்த்தின் 'தலைவர் 161' படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று நண்பகல் 12.30 மணிக்கு )  அறிவிக்கப்படும்" என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எந்திரன், கோச்சடையான் என ரஜினி படங்களுக்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில் கபாலி என்று பெயர் வைத்தவர் ரஞ்சித். ரஜினி இமேஜை விட படத்தின் கதை தான் முக்கியம் என்பதில் குறிப்பாக இருக்கும் ரஞ்சித்தின் அடுத்த பட தலைப்பு எப்படி தான் இருக்கும்?

கபாலி படம் கொடுத்த தாக்கம் இன்னமும் மறையாமல் இருக்க, அதே கூட்டணி மீண்டும் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி போயுள்ளது. இம்மாதம் இறுதியில் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கோலாலம்பூர், மே 24- "பாகுபலி காய்ச்சல்" இன்னும் அடங்கவில்லை சமூக வலைத்தளத்தில். இன்னமும் பலர் பாகுபலி 2 படத்தின் பாடல்களையும் வரிகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் பாகுபலியின் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் ஸ்டிக்கர்கள் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

முகநூலில் பாகுபலி ஸ்டிக்கரா? அட ஆமாங்க. பாகுபலி, கட்டப்பா, சிவகாமி, தேவசேனா, பல்வாள்தேவன், பிங்கலதேவன் மற்றும் காளக்கேயர் ஆகியோரின் சித்திரங்கள் அசைவுகளோடு உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாகுபலி 2-இல் இறுதிக் காட்சியில் பிரபாஸ் தன் மீது திருநீற்றை பூசிக் கொள்ளும் காட்சியும் சிவகாமி தேவியின் பிரபல வசனமான "இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்" என்ற ஸ்டிக்கரும் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகின்றன.

1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் பாகுபலியின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அது சரி... எங்கப்பா அவந்திகா பாத்திரத்தில் நடித்த தமன்னாவை ஸ்டிக்கரில் காணோம். 

சென்னை, மே 23- நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைதாணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாத காரணத்தால் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத கைதாணையைப் பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

More Articles ...