ஜிஎஸ்டி வரி; அழிந்துவிடும் தமிழ்ச் சினிமா - நடிகர் டி.ராஜேந்தர் கண்டனக் குரல்

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.4- உலகத்திலேயே இந்தியாவில்தான் ஜிஎஸ்டி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. இதற்கு அப்பாலும் கேளிக்கை வரி 30 விழுக்காடு விதிக்கப்படுவது தமிழ் சினிமா அழிந்துவிடும் என்று நடிகர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 2ஆவது நாளாக சினிமா அரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா டிக்கெட்டிற்கு தமிழக அரசு விதித்துள்ள 30 விழுக்காடு கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி ஜெமினி மேம்பாலம் அருகே டி.ராஜேந்தர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி சினிமா டிக்கெட்டிற்கு 28 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கேளிக்கை வரியும் 30 விழுக்காடு என்றால் மொத்தம் 58 விழுக்காடு என்பதை சிறு தயாரிப்பாளர்கள் தாங்குவார்களா? என அவர் தெரிவித்தார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, பங்கேற்கக் கூடாது என்று தான் மிரட்டப் பட்டதாகவும் ராஜேந்தர் கூறினார்.

உலகத்திலேயே இந்தியாவில்தான் 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வல்லரசு நாடுகளில் கூட வரி இந்த அளவிற்கு இல்லை. சிங்கப்பூரில் 7 விழுக்காடுதான் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரி குறைவுதான். ரஷ்யாவில் 18 விழுக்காடுதான் வரி. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் 28 விழுக்காடு என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றி வருவதால் இந்தியாவை பணக்கார நாடு என்று நினைத்து விட்டாரா? இங்கே ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாத ஏழைகள் அதிகம் உள்ளனர்.

சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. நாங்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடித்தால் அதற்கும் வரி விதிப்பது நியாயமா? மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் டி. ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS