ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: பாதியில் வெளியேறிய இந்திக்காரர்களுக்கு பதிலடி!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜுலை.14- கடந்த 8ஆம் தேதி லண்டனில் நடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதியிலேயே 'வெளிநடப்பு' செய்த இந்திகாரர்களை தென்னிந்தியர்கள் வசைப் பாடி வருகின்றனர். இதனால் டிவிட்டர் அகப்பக்கத்தில் போர் களமே நடந்து கொண்டிருக்கிறது.

இம்மாதம் 8ஆம் தேதி லண்டனில் உள்ள வெம்ளி அரங்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் நடந்த இந்த இசைநிகழ்ச்சியின் போது தமிழ் பாடல்களும் இந்தி பாடல்களும் கலந்து படைக்கப்பட்டன.

ஆனால், இந்தி பாடல்களை விட தமிழ்ப்பாடல்களே அதிகம் என குறை கூறி நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே அரங்கத்தில் இருந்த இந்திகாரர்கள் கூச்சல் போட்டு வெளியேறினர். வெளியேறியது மட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றி கடுமையாகவும் எழுதியுள்ளனர்.

அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி ரசிகர்களை ஏமாற்றி விட்டதாகவும் இசை நிகழ்ச்சி முழுவதும் தமிழ் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சிலர் ஒருப்படி மேலே போய், எங்களைத் திருப்தியாக்காத இசை நிகழ்ச்சி கட்டணத்தை திரும்ப கொடுங்கள் என்றும் பிரச்சனை செய்துள்ளனர். 

இதனால் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் இந்திகாரர்களை வறுத்தெடுத்துள்ளனர். நிகழ்ச்சியின் பெயரே 'நேற்று இன்று நாளை'.. பின்னர் தமிழில் பாட்டு பாடாமல் ஸ்பானிஷ் மொழியிலா பாடவேண்டும் என்று கேட்டுள்ளனர். 

மேலும், சில நெட்டிசன்கள் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தமிழன்டா என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலரோ காலங்காலமாக டூர்டஷன் தொலைக்காட்சியில் இந்தி கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் பாடியவுடன் இந்திக்காரர்கள் கொந்தளித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். 

சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு மறுநாள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஏறக்குறைய 17 தமிழ்ப்பாடல்களும் 11 இந்தி பாடல்களும் பாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பகிர்ந்த ஒரு ரசிகர் "11 பாடலைக் கேட்டு விட்டு கட்டணத்தை திரும்ப கேட்டவன் எவன், அவனைப் பார்க்கவேண்டும்" என்று பதிவேற்றம் செய்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS