'மெர்சல்' உள்ளிட்ட தீபாவளி படங்களின் கதி என்ன? 

இந்தியச் சினிமா
Typography

  சென்னை, அக்.5– சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட உள்ளாட்சி வரிக்கு எதிராக 6 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் மற்றும் சென்னையில் உள்ள பேரங்காடி திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

இதனால் தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி மற்றும் உள்ளாட்சி வரி என இரட்டை வரி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் மதுரை, ராமனாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் உள்ளாட்சி வரி விதிப்பை நீக்காவிட்டால் 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூடுவது என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்படி 18 விழுக்காடு மற்றும் 28 விழுக்காடு வரிச் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்ளாட்சி கேளிக்கை வரியாக 10 விழுக்காடு, 20 விழுக்காடு விதிப்பது சரியல்ல. இதை முழுவதுமாக நீக்க வேண்டும். 

இல்லையென்றால் வருகிற 18- ஆம் தேதி (புதன்கிழமை) தீபாவளி திருவிழா முதல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகள் காலவரையின்றி இயங்காது. எங்கள் கோரிக்கை குறித்து அரசு வெகு விரைவாக முடிவு எடுக்க கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளனர். 

சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலும் தியேட்டர்கள் மூடப்படும் என்று தெரிகிறது. உள்ளாட்சி வரி விதிப்பை அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால் தீபாவளி தினம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS