நடிகர் சங்க நில மோசடி: சரத்குமார்- ராதாரவி மீது நடிகர் விஷால் போலீசில் புகார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, அக்.9- நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவில் அனுமதி பெறாமல் விற்பனை செய்த நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை, சங்கப் பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர்கள், ராதாரவி, சரத்குமார் உட்பட, நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். 

அப்போது நடிகர் விஷால் பேசியதாவது: நாங்கள் கொடுத்த வாக்குறுதியிலும் விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்தவொரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது, நல்லதை மட்டுமே காணமுடியும். 

அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் கட்டடம் கட்டப்படும். கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 40 சதவீதம் வரி செலுத்தி சினிமா தொழில் நடத்த முடியாது.

கேளிக்கை வரியை அரசு தரப்பில் இருந்து ரத்து செய்ய நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முயற்சிக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் மட்டுமே சினிமா தொழில் நன்றாக இருக்கும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 2 வரிகள் விதிக்கப்படுகின்றன. மேற்கண்டவாறு நடிகர் சங்கச் செயலாளர் விஷால் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS