'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு  நடிக்க மறுத்தது ஏன்?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப் 17- பொருளாதாரம் சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களால் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தில் மேற்கொண்டு நடிக்க  நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்து விட்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் வடிவேலுவிடம் கடிதங்கள் மூலம் விளக்கம் கோரியிருந்தது.

 இது குறித்து கடிதத்துக்கு பதிலளிக்கையில் வடிவேலு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க 2016 ஜூன் மாதம் 1ஆம் தேதி ஒப்புக் கொண்டிருந்ததாகவும் 2016 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் தன்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை தான் தவிர்த்ததாகவும் எனினும் 2016 டிசம்பர் வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினார்கள் என தெரிவித்துள்ளார்.

 மேலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில்  அந்தப் படத்தில் நடித்து கொடுக்கும் நிலையில் தன்னுடைய பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நீக்கியது.

 அத்துடன் கெட்ட நோக்கத்தோடு தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு கடிதத்தை கொடுத்து அந்தக் கடிதத்தில் ஏதோ தனக்கு இந்த ஒரு படத்தின் மூலம் தான் சினிமா உலகின் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

 இதனால், தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் தன்னை வற்புறுத்தியதோடு முன்பு தன்னை நேரில் அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது.

 இதனால், பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்

BLOG COMMENTS POWERED BY DISQUS