இங்கிலீஸ் பேசும் தனுஷ்!; ஹாலிவூட் படம் அடுத்த மாதம்..!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 15- இன்றைய தேதியில் பிசியான நடிகர்களில் தனுசும் ஒருவர். ஒரு பக்கம் வரிசையாக நடிக்கவிருக்கும் படங்கள், இன்னொரு பக்கம் இயக்கத்தில் கால் பதிப்பு என படு பிசியாக இருக்கும் தனுஷின் ஹாலிவூட் கனவு அடுத்த மாதம் நிறைவேற போகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அதுப்பற்றிய மேல் விவரங்கள் வெளிவரவில்லை. 

இந்நிலையில், தான் இயக்கிய பவர் பாண்டி படத்தின் வெற்றி குறித்து ரசிகர்களுடன் டிவிட்டரில் கலந்துரையாடிய தனுஷ், தான் நடிக்கவிருக்கும் ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக கூறியுள்ளார். கொடி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. அதனைத் தொடர்ந்து வடசென்னை, விஐபி 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 

இதனைக் குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தனுஷ், "கைவசமுள்ள படங்களை முடித்ததும் ஆகஸ்டில் மார்-2 படம் தொடங்கவிருக்கிறது. அப்படத்தில் நடித்து முடித்தவுடன் அக்டோபர் மாதம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கப்போகிறேன். இதற்கிடையில், அடுத்த மாதம் நான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஹாலிவூட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது" என கூறியுள்ளார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS