சென்னை, டிச.12- நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளிடப்பட்டது. இதனை தனுஷ் தனது டிவிட்டரில் வெளியிட்டார்.

நடிகர் ரஜினியின் பிறந்தநாள் இன்று 12/12/2017 தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதனாலேயே இவரின் பிறந்தநாள் அன்று சிறப்பு அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடுவதை பட நிறுவனங்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றன. 

அவ்வகையில், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. 

காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் கம்பெனி சார்பாக அதன் தயாரிப்பாளர் தனுஷ் இந்த போஸ்டரை தனது டிவிட்டரில் வெளியிட்டார்.

அதில் 'சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

பாட்னா, நவ.28- பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'பத்மாவதி'க்கு  பீஹார் மாநிலத்தில்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். 

ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அப்படத்திற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர் மனோஹர் லால் ஷர்மாவின் மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில்,  உடனடியாக பீஹார் இந்த தடையை அமல்படுத்தியது.

இப்படம் திரைக்கு வராத பட்சத்தில், அதைத் தடை செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகளோ அல்லது முக்கியப் பதவிகளை வகிப்பவர்கள் கருத்து வெளியிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அலட்சியப் படுத்தும் வகையில் முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 'பத்மாவதி' படத்திற்கு தடை விதித்துள்ளார். 

இதனிடையில், பா.ஜ.க உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும், பீஹார் சட்டமன்ற வாசலில், இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோஷம் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இத்திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட வாரியத்தின் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே வேளையில் மனோஹர் ஷர்மாவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,தடை செய்யும் அதிகாரம் மத்திய திரைப்பட வாரியத்திற்கு தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது. அநாவசியமாக 'பத்மாவதி' திரைப்படம் குறித்து அரசியல்வாதிகள் கருத்துரைத்ததால் தான் அப்படத்திற்கு எதிர்ப்பு வலுவாகியதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியது. 

 

 

 

 

சென்னை, நவ.23- தமிழ் சினிமாவில் ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் அறிமுகமாகி, கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ‘மச்சான்ஸ்' என்று ரசிகர்களை அழைத்து, அவர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை நமீதாவிற்கு நாளை காலை 5.30 மணிக்கு திருப்பதி கோவிலில் திருமணம் நடைப்பெறவிருக்கிறது. தனது காதலரும், தயாரிப்பாளரும், அறிமுக நடிகருமான வீரேந்திர சவுத்ரியை அவர் மணக்கவிருக்கிறார். 

இதனிடையில், நேற்று திருப்பதியில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில், நமீதாவின் 'மெஹெந்தி' நிகழ்ச்சியும், அவரின் நிச்சயதார்தமும் விமரிசையாக நடந்தன. இதில் நமீதா மற்றும் வீரேந்திராவின் பெற்றோர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், கலந்துக் கொண்டனர். 

நடிகர் பிரசன்னா மற்றும் அவரின் மனைவி நடிகை சினேகா, பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த நமீதா திட்டமிட்டிருக்கிறார். 

மும்பை, நவ.20- நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படமான பத்மாவதிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தீபிகாவினை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மதவாத அமைப்பு ஒன்று அறிவித்ததை அடுத்து இந்தி திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி நிலை உண்டாகியுள்ளது. 

நடிகை தீபிகா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி எனும் படத்தில் நடித்தார். இப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரிய எதிர்ப்பு உருவாகியது.

இந்த நிலையில், உ.பியில், பரேலி உள்ள அகில இந்திய பாரதீய சத்ரிய மகாசபா என்ற அமைப்பினர் பத்மாவதி படத்திற்கு எதிராக பெரிய ஊர்வலத்தை நடத்தினர். மேலும் தீபிகா மற்றும் இயக்குனரின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

அதன் பின் கூட்டத்தில் பேசிய அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர் சிங், "நடிகை தீபிகாவை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்" என அறிவித்தார். இதனால் இந்தி திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

More Articles ...