சென்னை, ஏப்ரல் 3- இரண்டாண்டு ஒருமுறை நடக்கும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 478 ஓட்டுகள் பெற்று வெற்றி வாகை சூடிய விஷால், சங்கத்திற்கு இனிமேல் பொற்காலம் தான் என கூறினார். இதனால் படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடுட்டு வந்த 'பைரசி'யர்களுக்குக் கெட்டக் காலம் தான் என்கின்றனர் ரசிகர்கள். 

நேற்று தனியார் கல்லூரியில் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடந்தது. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 27 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 

தற்போதைய நிர்வாக பொறுப்பில் இருக்கும் எஸ். தாணு அணியினர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து அவரை எதிர்த்து விஷால் அணியினர் தேர்தலில் குதித்தனர். விஷால் அணியில், கௌதம் வாசுதேவன் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த தேர்தலில் ரஜினி, கமல்ஹாசன், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், டி.ராஜேந்திரன் உட்பட பலர் வாக்களித்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டன. 

முடிவில், நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் 478 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் அணியின் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அடுத்த இரண்டாண்டுகள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலம் தான்" என்று கூறினார். 

சென்னை, ஏப்ரல் 1- பாகுபலி படம் இம்மாதம் இறுதியில் வெளிவரவிருக்கும் நிலையில் அப்படத்தினைப் பற்றிய விசயங்கள் கசியத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்று, பாகுபலி 2-இல் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லையாம், அதற்கு பதிலாக பெரிய செட்டுகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டதாம்.

இப்படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றிய சாபு சிரில் வழங்கிய பேட்டி ஒன்றில் சில விசயங்கள் தெரியவந்துள்ளன. பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகமாக திருப்பங்கள் இருக்குமாம். இது ரசிகர்களை இருக்கையில் நுனி வரை உட்கார வைக்கும் என கூறப்படுகிறது. படமும் திகில் நிறைந்ததாகவும் விறுவிறுப்பாகவும் இருக்குமாம்.

அதேநேரத்தில் இரண்டாம் பாக காட்சி அமைப்புகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவாகவும் அதற்கு பதிலாக நிஜமாகவே பெரிய பெரிய செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸில் முக்கிய காட்சிக்காக ஆந்திராவில் உள்ள நிஜ கல் குவாரியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம். மற்றும் படத்தின் 90 விழுக்காடு படங்கள் செட்டுக்குள் தான் நடந்ததாம். 

சென்னை, மார்ச் 31- தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுமா என்ற நீண்ட கால சர்ச்சைக்குத் தீர்வு ஒன்று பிறந்துள்ளது. ரஜினி, கமல்ஹாசன், நாசர், விஷால் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க சங்க கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனியாக கட்டிடம் ஏதும் இல்லை. அண்மைய தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பிற்கு வந்த பிறகு சங்கத்திற்கு கட்டிடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி, சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்ட உரிய அனுமதி பெறப்பட்டது. 

இன்று காலை அவ்விடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கட்டிடம் கட்டுவதற்கான முதல் கல்லை விஷாலும் நாசரும் எடுத்து வைத்தனர். அவரைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் கல்லை எடுத்து வைத்தனர்.

நடிகர் ரஜினி பிரதமர் நஜிப்பைச் சந்தித்தால் தாமதமாகவே விழாவிற்கு வந்தார். அதேபோல் கமல்ஹாசனும் லண்டனிலிருந்து இன்று தான் சென்னை திரும்பியதால் அவரும் நண்பகலில் தான் கலந்து கொண்டு கல்லை நாட்டினர்.

சுர்யா, சிம்பும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, என நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டவேளை, விஜய், அஜித், தனுஷ் போன்றோர் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

சென்னை, மார்ச் 31- தற்போது சென்னையில் இருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு ரஜினியுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பிரதமர் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.  

ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று மதியம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு அவரைச் சந்தித்தார்.

      ### ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருடன் பிரதமர் நஜிப்

சிறிது நேரம் அளவளாவிய பிரதமர் பின்னர் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

     ### பிரதமருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அதில், "தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நட்பான இதமான ஒரு சந்திப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

More Articles ...