சென்னை மே 23 - சாதி பெயரைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. 

பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாடி பாலாஜி, தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார். இவரது மனைவி பெயர் நித்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் மாதவரத்தில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களுக்குள் சமீப காலமாகவே நிஜத்திலும் மோதல் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது போலீஸ் நிலையம் வரை இவர்களது மோதல் வந்து விட்டது. மாதவரம் காவல் நிலையத்தில் பாலாஜி மீது நித்யா திடீரென பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் கொடுமை செய்கிறார் என்று நித்யா பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.

நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்துள்ள இந்த பரபரப்பான புகாரால் சின்ன திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சாதியைச் சொல்லி பாலாஜி திட்டுவதாக அவரது மனைவி கூறியிருப்பதால் இந்த விவகாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளையும் இருவருக்கும் வேண்டியவர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 22- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சால் சினிமா மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது. பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ரஜினியின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். 

நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களைச் சந்திக்க ஆர்வம் கொண்டு ஐந்து நாட்கள் ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், சந்திப்பின்போது தான் அரசியல் பிரவேசம் செய்யவிருப்பது போன்று தோன்ற கூடிய வகையில் உரையாற்றினார். ரஜினியின் ரசிகர்கள் அதனை ஆதரித்தாலும் அரசியல்வாதிகள் பலர் பகிரங்கமாகவே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் (ரஜினி) தமிழக அரசியலில் ஈடுப்படக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை எனும் கும்பல் இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் வீடு முன்பு போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் பரவியது. 

இதனையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சென்னை, மே 22- பாகுபலி 2 வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் அப்படத்தை பாராட்டி வருகின்றனர் திரை பிரபலங்கள். இதில் புதிதாக இணைந்துள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தைப் பார்த்த ரஹ்மான் படத்தைப் பாராட்டியதோடு, இசையமைப்பாளர் மரகதமணியைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

நேற்று படத்தைப் பார்த்த ஏஆர்.ரஹ்மான் தனது முகநூலில் கூறியதாவது, "ராஜமௌலி காரு, கீரவாணி காரு மற்றும் பாகுபலி 2வின் அனைத்து குழுவினருக்கும்... சென்னையில் இப்போது தான் படத்தைப் பார்த்து முடித்தேன். பாக்ஸ் ஆபிசில் இப்படம் 2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறேன். தென்னிந்திய மொழிப் படங்களுக்கு உலக அளவிலான வாசனை வெள்ளமென திறந்திருக்கிறீர்கள், அதோடு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்" என பதிவேற்றம் செய்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மௌலி, "மிக்க நன்றி சார், உங்களது பாராட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தின் இசை அனைவருக்கும் பிடித்துப் போக, ஆஸ்கார் நாயகனும் இயக்குனரோடு இசையமைப்பாளர் மரகதமணியின் பெயரான கீரவாணியின் பெயரைக் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்திருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

சென்னை, மே 19- 'பாகுபலி, தேவசேனா, பல்வாள்தேவா, கட்டப்பா' என்று எந்நேரமும் பாகுபலி படத்தினைப் பற்றி பேச்சு தான் சினிமா ரசிகர்களிடம். படம் வெளிவந்த மூன்றே வாரங்களில் ரூ.1500 கோடி வசூலைப் பெற்றுவிட்டது ஜெய் மகிழ்மதி.

மூன்று வாரங்கள் ஆகியும் கூட பாகுபலியின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இன்னும் சில தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார நாட்களில் 1500 கோடி ரூபாய் வசூலைப் படம் பெற்றுவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று வரை பாகுபலி, இந்தியாவில் மட்டும் 1225 கோடியும், வெளிநாடுகளில் 275 கோடியும் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரம் கூறுகிறது. 

இதுவரை எந்த இந்திய திரைப்படமும் வசூலிக்காத ஒரு தொகையை பாகுபலி 2 வசூலித்துள்ளது. தற்போது 1500 கோடியைக் கடந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்கள் இப்படம் ஓடினால் 2000 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது. 

More Articles ...