சென்னை, மே 30- சென்னையை உலுக்கிய நுங்கம்பாக்க ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி படுகொலையை மையமாக வைத்து கதை ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சுவாதி கொலை வழக்கு என்றே பெயரிடப்பட்டுள்ளது.

உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இப்படத்தை இயக்குகிறார். விஜயகாந்தின் உதவியாளராக இருந்த எஸ்.கே. சுப்பையா படத்தைத் தயாரிக்கிறார். சுவாதி வேடத்தில் ஆயிரா என்ற புதுமுகமும், ராம்குமார் வேடத்தில் மனோ என்ற புதுமுகமும் நடிக்கிவிருக்கின்றனர். வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாம் டி. ராஜ் இசை அமைக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வனும், கதாசிரியர் ஆர். பி. ரவியும் கூறுகையில், "இந்தப் படம் சுவாதி கொலை வழக்கின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது, இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, சிரமப்படுத்தும் நோக்கத்துடனோ, எடுக்கப்பட்டதல்ல. சுவாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது வரையிலான போலீஸ் விசாரணையை அடிப்படையாக கொண்டதே இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது" என கூறினர்.

கடந்த ஆண்டு அதிகாலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற கம்யூட்டர் பொறியாளர் மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நெல்லை மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த் ராம்குமார் என்ற இளைஞர் தனது ஒரு தலை காதலை ஏற்றுக் கொள்ளாததால் சுவாதியை  கொன்றதாகவும் பின்னர் அவர் புழல் சிறை காவலில் இருந்த ராம்குமார், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் அறிவிக்கப்பட்டது.

சுவாதி கொலை, ராம்குமார் தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் இணைய தளங்களில் சூடான விவாதங்களும், இதன் பின்னால் ஜாதி பிரச்சனையும் கவுரவ பிரச்சனையும் உள்ளது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ராம்குமார் இறந்து விட்டாலும் இந்த வழக்கு தொடர்ந்து இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் சுவாதின் கொலை வழக்கை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகி உள்ளது.

சென்னை, மே 30- சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் இளையராஜா கானா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இப்பாடலை அவரின் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் அடுத்த படம் தான் 'ஏஏஏ'. பல வெற்றி பாடல்களைக் கொடுத்த சிம்பு- யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. 

படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பாடல் வெளியீட்டு விழாவை ஜூன் இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. படத்தில் இசைஞானி இளையராஜா 'ரோட்டுல வண்டி ஓடுது' எனும் பாடலைப் பாடியுள்ளார். இதனை 'ஸ்பிரிச்சுவல் கானா' என வகைப்படுத்தியுள்ளனர். 

வரும் ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவர் பாடிய பாடலை மட்டும் முதலில் வெளியிட சிம்புவும் யுவனும் திட்டமிட்டுள்ளனராம். மூவரின் கலவையில் 'சிலம்பாட்டம்' படத்தில் ஒலித்த மச்சான் மச்சான் பாடல் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மும்பை, மே 30- பாலிவுட் நடிகை கீதா கபூரை அவரது மகன் ராஜா அடித்து துன்புறுத்தியதுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எங்கோ சென்று விட்டார்.

பகீஜா படப் புகழ் பாலிவுட் நடிகை கீதா கபூருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். இருப்பினும் அவர் தாம் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டார். இந்நிலையில் அவரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. கீதா கபூரின் மகன் ராஜா என்பவர் தனது அம்மாவை மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாகக் கூறி சென்றவர் வரவே இல்லை.

அவரது தொலைபேசிக்கு பலமுறை தொடர்புகொண்டும் பலனில்லை. சரி அவரது மகளையாவது தொடர்பு கொள்ளுவோம் என்றால் அவரோ தொலைபேசி எடுக்கவில்லை. இதைனையடுத்து இருவரும் வராததால் மருத்துவமனையில் நடிகை கீதா கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கான செலவை ரூ. 1.5 லட்சம் சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கீதா தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டது பாலிவுட் நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன் தம்மை முதியோர் இல்லத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டார் என்பதை அவர் மறுத்துள்ளார். தம்மை தன் மகன் அடித்து உதைத்ததாகவும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை உணவு அளித்து அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளதாகவும், இதனால் தான் தன் உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தன் மகன் ஓடிவிட்டார் என அவர் கூறியுள்ளார்.

சென்னை, மே.30- பாகுபலியைப் மிஞ்சும் அளவிற்கு ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருகிறது ‘சங்கமித்ரா’ திரைப்படம். இது ஶ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 101ஆவது படமாகும். இந்த படத்தில் முக்கிய கதாப்பாதிரமான சங்கமித்ராவாக நடிக்கவிருந்த ஸ்ருதி ஹாசன் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.

ஶ்ரீ தேனாண்டாள் டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இப்படத்தின் அறிமுக விழா கடந்த மே 20ஆம் தேதியன்று பிரான்ஸில் 70வது ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடந்தது. அறிமுக விழா முடிந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கமித்ரா படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது, ஆனால் படக்குழுவினரிடமிருந்து முறையான திரைக்கதையும் படப்பிடிப்பிற்கான தேதிகளும் கிடைக்கப் பெறாததால் அவரால் இந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இருக்கிறது என ஸ்ருதியின் நிர்வாகி அறிக்கை விடுத்தார்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் படத்திலிருந்து விலகியதால், சங்கமித்ரா கதாப்பாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளை தேடி வருகிறது படக்குழு.

 

More Articles ...