மும்பை, மார்ச் 31 – அண்மையில் பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கிறிஸ்தோபர் நோலனைச் சந்தித்துப் பேசிய உலக நாயகன் கமலஹாசனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தார் இயக்குனர் நோலன்.

நோலன் தயாரித்திருக்கும் டங்கிரிக் படம் மிகப் பிரபலமானதாகும். இந்தச் சந்திப்பின் போது கமலஹாசன், தான் டங்கிரிக் படத்தைப் பார்த்து ரசித்ததாகவும்,  ஆனால், அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்க்காமல் வீடியோவில் பார்த்ததற்காக மன்னித்து விடுங்கள் என்றும்  கூறினார்.

மேலும் அதற்குப் பதிலாக தாம் நடித்த 'ஹேய் ராம்' படத்தின் சிடியை கொடுத்து,  'நீங்கள் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் படத்தை பாருங்கள், என்று ஆர்வத்துடன் கூறினார் கமல்!

ஆனால், நோலன், சொன்ன பதில் கமலை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"யார் சொன்னது உங்கள் படங்களை நான் பார்த்தது இல்லை என்று ஆகக் கடைசியாக நான் 'பாபநாசம்' பார்த்தேன்" என்று நோலன் சொன்னார்.

இந்தச் சந்திப்பு மும்பையில் ஒரு விருந்து நிகழ்ச்சியின் போது இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மார்ச். 22-  எதிர்ப்புகள் காரணமாக மணப்பெண்ணை தேர்வு செய்வதில்  நடிகர்  ஆர்யாவுக்கு  சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது.  இவருக்கு மட்டும் இன்னும் மணப்பெண் அமையவில்லை. 

பெற்றோர்கள், நண்பர்கள் மூலம் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் தொலைக்காட்சி வழி வந்து பெண் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், பதவி, குடும்ப விவரங்களைப் பதிவு செய்யும்படி ஆடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். 

ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 16 பேரைத்  தேர்வு செய்து தொலைப்பேசி நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர்களிடம் பழகி தன்னை கவரும் பெண்ணை இறுதியாக மணப்பெண்ணாக தேர்வு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். ஆர்யாவின் முயற்சியை சிலர் பாராட்டுகிறார்கள். 

இன்னும் சிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். மணப்பெண் தேர்வில் கலந்து கொண்டுள்ள சில பெண்கள் தங்களை பற்றிய இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.

ஒரு பெண் தனக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கூறினார். இன்னொரு பெண் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இது ஆர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆர்யாவின் பெண் தேடும் அணுகுமுறை கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்று பெண் அமைப்புகளும் எதிர்க்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர். இதனால் ஆர்யாவின் பெண் தேடலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணப்பெண்ணை அவர் தேர்வு செய்வாரா,  மாட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிடுகின்றனர்.

சென்னை, மார்ச். 19- நடிகை  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின்  வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநிதி’ என்ற பெயரில் தயாராகிறது.  தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக இயக்கி இருக்கிறார். இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சால்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிக்கை நிருபராக வருகிறார். 

சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபும் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 9- ஆம் தேதி வெளியீடு காணும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக படத்தை மார்ச் 29-ஆம் வெளியிட   படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், திரையுலகில் நடக்கும் போராட்டத்தால் படத்தின் வெளியீடு  தள்ளிப்போனது.

 

மும்பை, மார்ச். 18- அண்மையில் துபாயிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிர்நீத்த 'சூப்பர் ஸ்டார்' ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக பிரபல போலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா அறிவித்துள்ளார்.

அதேவளையில் ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை ஓர் ஆவணப்படமாக எடுக்க அவருடைய கணவரும் போலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ஶ்ரீதேவியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து போலிவுட் திரைப்படத்தைத் தயாரிக்க இயக்குனர் ஹன்சல் மேத்தா திட்டமிட்டிருக்கும் வேளையில் ஶ்ரீதேவி பாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஶ்ரீதேவையை வைத்து நானொரு படமெடுக்க நினைத்திருந்தேன். ஆனால் இப்போது ஶ்ரீதேவி  இல்லவே இல்லை என்றாகி விட்டது.  எனவே, அவரது வாழ்க்கையைப்  படமாக்கி அவருக்கு சமர்ப்பனம் செய்வேன் என்று ஹன்சல் மேத்தா சொன்னார்.

அந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஶ்ரீதேவியாக வித்யாபாலன் நடிப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று இப்போதே பலர் விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். ஶ்ரீதேவிக்கு இருப்பது போன்ற அழகான பெரிய கண்கள் வித்யாபாலனுக்கு இல்லை. ஶ்ரீதேவியை திரையுலக உச்சத்திற்குக் கொண்டு வந்த அந்த 'மயிலு' பாத்திரம் வித்யா பாலனுக்கு பொருந்தாது  என்பதுதான்  அவர்களின் குறைகூறலில் மிக முக்கியமான ஒன்றாகும்.

 

More Articles ...