சென்னை, ஜூன் 11- இயக்குநனர் கவுதம் மேனனின் அடுத்த படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் பெயரில், தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளிவரவிருக்கிறது.

இவர் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையிலேயே தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் இயக்க ஆரம்பித்து விட்டார் கவுதம்.

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதுவரை கவுதம் மேனன் இயக்கிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தான் இசையமைத்து வந்த நிலையில், நடுவில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்திற்கு மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.

தற்போது கவுதம் மேனன், யுவன் சங்கர் ராஜாவுடன் புது கூட்டணி வைக்க இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

சென்னை, ஜூன் 10- இசையமைப்பாளர்கள் பலர் தற்போது நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் ஆதி. 

இதற்கு முன் விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகிய இருவரும் கமர்ஷியல் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நிலையில், இப்போது 'ஹிப் ஹாப் தமிழா' புகழ் ஆதியும் நாயகனாக அவதாரம் எடுக்கிறார்.

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆதி வெறும் நடிகராக மட்டுமல்ல, அவர் நடிக்கவிருக்கும் படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தாமே இசையமைக்கவும் உள்ளார். இவரின் படத்தைத் தயாரிக்கவிருப்பது சுந்தர்.சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதியின் படத்திற்கு முறுக்கு மீசை என பெயரிட்டிருப்பதாகவும் இதன் விவரங்கள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தான் தன் படத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பார். அவரின் சாயலில் ஆதியும் களமிறங்கவிருக்கிறார்.

சென்னை, ஜூன் 9- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து, இயக்குனர் சுந்தர் சி, அட்லீ ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘ரெமோ’படத்தில் சிவகார்த்திகேயன் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படம் ‘காதலும், நகைச்சுவையும் கலந்த ஒரு படம் என்பதால் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 

ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இதில் ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். “ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர்கள் குழு, படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. என் முதல் படத்தில், பிரசித்தி பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது, பெருமையாக இருக்கிறது” என இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனுக்கு, அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது. அவருக்கு இது, ஒரு முக்கிய படமாக இருக்கும்.

ஏனெனில் சிவகார்த்திகேயன் என்றாலே நகைச்சுவை மட்டும் செய்வார், சிரமப்பட்டு தான் நடிக்கமாட்டார் என ஒரு பேச்சு உள்ளது. இந்தக் கருத்தை முறியடிக்கும் விதத்தில் இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இதற்காக ‘ஐ’ படத்தின் மேக்கப் கலைஞரை அழைத்து வந்துள்ளார்களாம்.

சென்னை, ஜூன் 9- கபாலி படத்தின் இசை இணையதளத்தில் ஜூன் 12ஆம் தேதி வெளியாகிறது. இதன் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் ஜூன் 12ஆம் தேதி பிரம்மாண்ட விழா நடத்தி, கபாலி பட பாடல்கள் வெளியிடப்படுவதாக இருந்தது. இதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் தன் குடும்பத்தினருடன் கோடை விடுமுறையைக் கழித்து வருவதால், அவர் சென்னைக்கு திரும்பும் தேதி உறுதி செய்யப்படவில்லை.

இதனால், இசை வெளியீட்டை விழாவாக நடத்தாமல் நேரடியாக இணையதளம் மூலம் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, அதே தேதியில் இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரமலான் மாதம் என்பதால் படம் வெளியாகும் தேதி ஜூலை 1 என்பதிலும் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கபாலி படப் பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

More Articles ...