88 கிலோ அளவுக்கு உடலமைப்பை தான் மாற்றியதன் காரணம் குறித்து நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. அண்மையில் மேலும் தனது உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிந்தார். அவருடைய உடலமைப்பு மாற்றத்தால் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இது எப்படி சாத்தியமானது? ஏன் இந்த மாற்றம்? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, "ராகவ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் பழங்குடியினர் வேடத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பழங்குடியினர் வேடத்திற்காக 88 கிலோ அளவிற்கு உடலமைப்பை மாற்றினேன். சுமார் 6 மாதங்கள் நாள் முழுக்க உடற்பயிற்சி கூடத்திலேயே இருந்து இந்த அமைப்பை கொண்டு வந்திருக்கிறேன். வேடத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பை மாற்றுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும்" என்று கூறினார்.

மீண்டும் காதல் நாயகன் வேடம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடலாம். சைக்கிளிங் மற்றும் சில உடற்பயிற்சிகள் மூலம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடலாம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை" என்றார் ஆர்யா.

 

 

சென்னை, ஏப்ரல் 26- பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே. படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை வெளிவந்த நிலையில் படத்தின் காட்சிகள் பற்றிய படங்களோ வீடியோக்களோ வெளிவராதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் கபாலி படத்தின் முதல் டீசர் வரும் மே1 தொழிலாளர் தினத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், படத்தின் டீசரை தயார் செய்து விட்டதாகவும் நல்ல நாளில் அதனை வெளியிட எத்தனித்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.

அடிப்படையில் பட இயக்குனர் பா.ரஞ்சித் கம்யூனிட்டு கொள்கைகளை ஆதரிப்பவர் என்பதால் தொழிலாளர் தினத்தன்று பட டீசரை வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரம் கூறுகின்றது.

மே1 நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோவை,  25 ஏப்ரல் - ஒரு காலத்தில் மகாத்மா காந்தியை விமர்சனம் செய்த கூட்டத்திற்குப் பின்னால் இருந்த நான், பின்னாளில் காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன் என்று உலக நாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார்.  

"காந்தியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. அகிம்சையைப் பின்பற்றுவது வீரம் ஆகும். அதை யாராலும் எளிதாகப் பின்பற்ற முடியாது. ஆனால், முயற்சி செய்தால் அகிம்சைக் கொள்கையைப் பின்பற்ற முடியும்" என கோவை சப்னா புத்தக நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட   மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை"  புத்தகத்தை வெளியீட்டப் பின் பேசுகையில் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். 

"ஹேராம் திரைப்படத்தைத் தயாரிக்கும் போதுதான் காந்தி குறித்து பல அரியத் தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.  காந்தி தன் எளிமையான வாழ்க்கை முறையால் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது. சமுதாயத்தின் நோயாக அரசியலும் மதமும் திகழ்கிறது" என கமல் தெரிவித்தார். 

 சென்னை, ஏப்ரல் 24-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கும் படம் "கபாலி" அண்மையில் தான் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்தன. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை  ரஜினி ஒரே வாரத்தில் முடித்துக்கொடுத்து விட்டதாக படக்குழு வட்டாரம் கூறுகிறது.  

கடந்த வாரம் தொடங்கிய படத்தின் டப்பிங் பணிகளை  ஒரே வாரத்திற்குள் முடித்து விட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் மற்ற  நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் "கபாலி" ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

More Articles ...