மும்பை, மார்ச்31- பிரபல பாலிவுட் நடிகை பிபாசா பாசு, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி, தொலைக்காட்சி நடிகரான கரண் சிங்கை மணக்கிறார்.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் மட்டுமே நடித்தார். பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். தூம்-2, ராஸ், ஜிஸ்ம், ரேஸ், க்ரியேச்சர், அலோன் என பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் பிரேம், ஹேட் ஸ்டோரி -3, அலோன், உள்ளிட்ட படங்களில் நடித்த சினிமா மற்றும் டிவி நடிகருமான கரண் சிங் கிரோவருக்குமிடையே தான் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. பிபாசா பாசுவை விட கரண்சிங் நான்கு வயது இளையவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜோன் ஆப்ரகாமை காதலித்த பிபாசா, அவருடனான காதல் முறிவுக்குப் பிறகு அலோன் படத்தில் நடித்த வேளையில் கரணுடன் காதல் மலர்ந்து தற்போது திருமணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி மருதாணி வைபவம் இடம்பெறும். அடுத்த நாள் ஏப்ரல் 29-ஆம் தேதி பிரபலத் தங்கும் விடுதியில் வரவேற்பு வைபவம் நடைபெறும். ஏப்ரல் 30ஆம் தேதி பாலிவுட் சினிமா நண்பர்கள், முக்கியஸ்தர்கள் புடைசூழ திருமணம் நடைபெற விருக்கிறது.

 

சென்னை, மார்ச் 30- தனுஷ் நடிப்பில் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ், கவுதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. 

கவுதம் மேனனுக்கு ஏற்கெனவே பெரிய ஹிட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானையே இந்த படத்திற்கு இசையமைப்பாளராக போட்டுவிடலாமா? என்ற பரிசீலனையில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றும் படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருவனந்தபுரம், மார்ச் 30- பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம் நீடித்து வரும் நிலையில், அவரது உடல் உறுப்புக்கள் இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே பிரேத பரிசோதனை அறிக்கை, கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகள் இரசாயன பரிசோதனை ஆகியவற்றின் முடிவுகள் பெறப்பட்டு உள்ளன. அதில் கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக தெரிகிறது.

அதன் அடிப்படையில், கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்கு  கலாபவன் மணியின் மனைவி நிம்மி ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். 

அதில் தனது கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை விரிவாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த நிலையில் கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய பரிசோதனை கூடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகள் கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவியாக இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.

 

வாட்ஸ்-அப் வந்தாலும் வந்தது... ஏகப்பட்ட பொய்கள் உண்மை மாதிரியே உலா வருகின்றன. இன்னும் சிலர் எப்போதோ வந்த செய்திகளை புதுசு மாதிரியே உலா வர வைத்து ‘பொரித்து’ தள்ளுகிறார்கள். சில தினங்களாக என்டிடிவி கருத்துக் கணிப்பு என்ற பொய்யான சமாச்சாரத்தை, செம்மையாக போட்டோஷாப் வேலை செய்து ஏகப்பட்ட வாட்ஸ்ட்-அப்பில் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்றும் இன்றும் வாட்ஸ்-அப்பில் பரபரவென சில படங்களை 'ரஜினி கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். அவருக்கு பாதிரியார் ஞானஸ்தானம் செய்யும் காட்சி' என்ற பட விளக்கத்தோடு பகிர்ந்து வருகின்றனர். 

2 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான சமாச்சாரம் இது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினியை அவர் வீட்டில் சந்தித்த கிறிஸ்தவ பாதிரியார் சாமி தங்கையா, ஒரு சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். 

ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பாதிரியாரே முன்வந்து நடத்திய பிரார்த்தனை அது. அந்தப் படங்கள் ஏற்கெனவே செய்தியாகவும் வந்தவைதான். ஆனால் இப்போது அதற்கு வேறு மாதிரி சாயம் அடித்து, ரஜினி மதம் மாறிவிட்டார் என்றே புரளி பரப்பி வருகின்றனர். எப்படிப்பா கிளப்புராஙக இப்படி எல்லாம் புரளியை..!

More Articles ...