தமிழ் திரைப்படத்துறையில் உலக நாயகன் என வர்ணிக்கப்படுபவர் கமல்ஹாசன்.   நடிப்பு மட்டுமின்றி, திரைத்துறையின் அனைத்து  கோணங்களிலும் தமது பங்களிப்பை வழங்கி வரும்  இவர்,  சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை முன் கூட்டியே அறிந்து தெரிந்து தமது படங்களில் அறிமுகப்படுத்தி   இந்தியச் சினிமாவை  உலகளவில் இடம்பெறச் செய்தவர்களில் கமலுக்கும் முக்கியப் பங்குண்டு. 

அவரது இந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பிரான்ஸ் நாடு கமலுக்கு ஹென்றி லாங்லாய்ஸ் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.   இது குறித்து பேசிய  கமல், ‘பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருதைப் பெற்றுள்ளேன். இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு தெரியப்படுத்தியவர்” என்று கூறினார்.

ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சினிமா வரலாற்று ஆசிரியர். மேலும் இவர் ஒரு திரைப்பட ஆவணத் தொகுப்பாளரும் கூட. இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். எனவே அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஏப்ரல் 1-கடந்த ஆண்டு,  தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, 32 வயதேயான எடிட்டர் கிஷோரின் திடீர் மரணம்.  மிக சிறந்த கலைஞர் என்பதால் இவரைத் தேடி குவிந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதால்  அல்லும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது. ஓய்வின் அவசியத்தையும் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த கிஷோர்,   மூளையில் ரத்த குழாய் வெடித்து தனது எடிட்டிங் அறையிலேயே  சரிந்து விழுந்து  இறந்தார்.  

கடைசியாக அவர் எடிட் செய்த விசாரணை படத்திற்கு  தேசிய விருதும் கிடைத்துள்ளது. 

ஆடுகளம் படத்திற்கும் தேசிய விருதை வென்றவர் கிஷோர்.   இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய மகனைப் பறிகொடுத்து விட்டு நிற்கும் கிஷோரின் தந்தை தமிழ் சினிமா மீது கடும் வருத்தத்தில் உள்ளார். 

இது குறித்து, ஒரு நேர்க்காணலில் தமிழ் சினிமா மீதான தமது கோபத்தை அவர் வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளார். 

"என் மகன் இறந்து  1 ஆண்டு ஆகிவிட்டது.  ஆனால்,  அவன் பெருமை தேடித் தந்த சினிமா துறை எங்களைத் திரும்பி பார்க்கவேயில்லை.  என் மகனுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குனர் தொலைப்பேசி மூலம் அழைத்து எங்களுக்கு தெரிவித்தார். 

ஆடுகளம் படம் எடுத்த போது, தனுஷும் என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தனர். ஆனால் என் மகன் இறந்ததிலிருந்து தனுஷிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. 

சிவகார்த்திகேயன் 2 லட்சம் கொடுத்தார். சரத்குமார் 1 லட்சம் கொடுத்தார். ராகவா லாரன்ஸும், வெற்றிமாறனும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். 

ஆனால் பிரகாஷ் ராஜின் இரண்டு படங்களில் வேலை செய்ததற்கு இன்னும்  3 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.  ஆனால் அவரிடமிருந்து அதற்கு இன்னும் பதிலே வரவில்லை. அதுதான் இறந்துட்டானே எதுக்கு தரணும்னு நினைத்துக்கொண்டார்கள் போல. இந்த விருதுகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது.  இந்த விருதுகளைத் தாண்டி சினிமா எங்களுக்கு ஒண்ணும் தரல. குறைந்த பட்சம் துக்கத்தைக் கூட பகிர்ந்துகொள்ளவில்லை" என கிஷோரின் தந்தை தெரிவித்தார். 

சென்னை, மார்ச் 31- செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க புதிய படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'கான்' படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து தனது அடுத்து படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் செல்வராகவன். அப்போது தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதியை செல்வராகவன் இயக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார் செல்வராகவன். ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதால் விஜய் சேதுபதியும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

தற்போது 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படம் அடுத்தாண்டு தொடங்கப்படும் என தெரிகிறது.

 

 

 

 

பெங்களூர், மார்ச் 31-  ரஜினிகாந்துக்கு கட்அவுட்டுகள் வைத்து பாலாபிஷேகம் செய்யக்கூடாது என பெங்களூர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.  

பெங்களூரரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஐ.எம்.எஸ் மணிவண்ணன் என்பவர்  நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளதைக் கொண்டாட அவரது ரசிகர்கள் கொண்டாட   பல்வேறு இடங்களில் கட் அவுட் வைத்தும், பேனர் வைத்தும் அதற்குப் பாலாபிஷேகம் செய்தும்  வருவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவ்வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " நாட்டில் பசியால்  உணவு இல்லாமல் இறக்கிறார்கள். ஆனால் ரஜினியின் ரசிகர்களோ பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலை வீணடிக்கிறார்கள் . ரஜினி காந்த் பொறுப்பான நடிகர். அவருக்கு நாட்டின்   இரண்டாவது உயரிய விருது கிடைத்துள்ளது. அவரே வந்து தமது கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்" எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். 

ரஜினியின்  கட்அவுட்டுக்கு ஊற்ற வாங்கும் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது அவர்களே குடிக்கலாம். இது தொடர்பில் அவரது ரசிகர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 இம்மனுவை விசாரித்த நீதிபதி ரேகா, "ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது என்பதற்காக யாரும் கட் அவுட், பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இது குறித்து விளக்கம் கேட்டு ரஜினிக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார். 

More Articles ...