''ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில், தொழில் ரீதியான பாடகர்கள் பங்கேற்பதை தாங்கள் ஒரு போதும் தடுத்ததில்லை. விரும்பினால் எஸ்.ப். பாலா கூட இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்று விஜய் டிவி. பதில் கூறியிருக்கிறது. அண்மையில் நடந்த சூப்பர் சிங்கர் 'சீசன் - 5'இல் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

 

இவர், 'நீர்ப்பறவை', 'ஆரோகணம்', 'அன்னையும் ரசூலும்', 'மதயானைக் கூட்டம்', 'பத்து எண்றதுக்குள்ள' என பல்வேறு திரைப்படங்களில் பாடல்களைப் பாடியவர் என்பதுதான், 3 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சை. நிகழ்ச்சியின் சர்ச்சைகள் குறித்து, 'சூப்பர் சிங்கர் - 5' நிகழ்ச்சியின் தலைவர் பிரதீப் மில்ராய் பீட்டர் அளித்தப் பேட்டி வருமாறு.

''அரவிந்தாக்ஷன் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை?"


எங்களுக்குப் போட்டியாளர்களின் பின்புலத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை. எங்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின், பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று பாடியிருக்கிறார் என்றால் அதுதான் எங்கள் நிகழ்ச்சிக்கான வெற்றி. தவிர, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே அரவிந்தாக்ஷன் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை!

 

''இப்படி மறைப்பதால், உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களையும், அவர்களின் நம்பிக்கையும் ஏமாற்றுவதாக இருக்காதா?"

 

கண்டிப்பாக இருக்காது. இதற்குமுன் அவர்கள் செய்த சாதனைகளைப் பற்றியோ அல்லது மற்ற ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றதைப் பற்றியோ நாங்கள் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனந்த் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் தெரியும்

 

தவிர, ஆனந்த் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்பதைச் சொன்னால், மக்களின் ஓட்டும் அபிப்ராயமும் அவருக்கே கூடுதலாக இருக்கும். அதற்கு நாங்களே வழிவகை செய்ததாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், ஆனந்த் அரவிந்தாக்ஷன் பற்றிய பின்புலத்தைச் சொல்லவில்லை.


‘’’
சூப்பர் சிங்கர்' என்றாலே, தமிழகத்தின் புதிய திறமைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகத்தான் மக்களால் பார்க்கப்படுக்கிறது. இதில் ஒரு பின்னணிப் பாடகரை கலந்துகொள்ளச்செய்வது நிகழ்ச்சியின் அடிப்படையே ஆட்டம் காணுமே?"

 

முதலில், நாங்கள் புதிய திறமைகளைத்தான் வெளிக்கொண்டுவருகிறோம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே. ‘தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல்' என்றுதான் சொல்கிறோம். தவிர, புதிய திறமைகளோடு இங்கே யாரும் வரமாட்டார்கள். யாருக்கு எங்களுடைய 'சூப்பர் சிங்கர்' பட்டம் பெரிதாகப் படுகிறதோ, அவர்கள்தான் வருவார்கள்.

 

''அடுத்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலா, ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகர்கள் பங்கேற்க விரும்பினால்?"

 

எங்கள் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' டைட்டிலைப் பெரிதாகக் கருதி, யார்வந்தாலும், அவர் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் டைட்டிலைத் தவிர இதற்கு முன் எந்த 'டைட்டிலை' வென்றவாரக இருந்தாலும், அவர்களைப் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்! அது எஸ்.பி.பாலசுப்ரமணியமாக இருந்தாலும் சரி... ஸ்ரேயா கோஷலாக இருந்தாலும் சரி!

 

''அப்படியென்றால், ஏற்கெனவே மக்களுக்குத் தெரிந்த பாடகர்களைத்தானே நீங்கள் முன்னிலைப் படுத்துவதாக அமையும்?"

 

நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எங்களை மதித்து, போட்டியில் கலந்துகொள்பவரை நாங்கள் சேர்த்துக்கொள்வோம். அவ்வளவுதான்! ஒரு பாடகர், தான் ஏற்கெனவே சில படங்களுக்குப் பிண்ணனி பாடிவிட்டு மீண்டும் என் நிகழ்ச்சிக்கு வந்து 'சூப்பர் சிங்கர்' டைட்டிலுக்காக மல்லுக்கட்டுகிறார் என்றால், எங்களுக்குப் பெருமைதானே? அப்படி வருகிறவர்களை நாங்கள் ஏன் தடுக்கவேண்டும்?

 

''இந்த சீஸனில் வெற்றி பெற்றவர்கள்கூட அடுத்த சீசனில் பங்கேற்கலாமா?"

 

ஒரு சீசனில் டைட்டில் வென்றவர்கள் மட்டும் மீண்டும் பங்கேற்க முடியாது. மற்றபடி, யார்வேண்டுமானாலும், எத்தனை முறைவேண்டுமானாலும் பங்கேற்கலாம்!


''
உங்கள் நிகழ்ச்சியின் விதிகள்தான் என்ன?"

நாங்கள் கொடுக்கும் விண்ணப்பத்திலேயே, வயது வரம்பு தவிர மற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லி இருந்தோம். எனவே, எங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இன்றுவரை போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதிகளையும் மாற்றவில்லை. மக்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியலாம். எங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை!

 

திருவானந்தப்புரம், மார்ச் 23- பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த மர்மம் நீடிக்கும் வேளையில், சொத்துத் தகராறினால் அவருக்கு விஷம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் சந்தேகிக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு சொத்துத் தகராறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்இதில், கலாபவன் மணியின் மாமனாரை போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்

 

நடிகர் கலாபவன் மணி கடந்த 6ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார்.முதலில் தற்கொலை செய்துகொண்டார் என்றும் பின்னர் அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் சர்ச்சை எழுந்தது

 

இந்நிலையில், உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான இரசாயனப் பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்ததாக  பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

 

இதனால் கலாபவன் மணி விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? என்பதைக் கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஐ.ஜி. அஜீத்குமார் உத்தரவுப்படி 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

போலீசாரின் விசாரணை வளையத்தில் கலாபவன்மணியின் உதவியாளர்கள், அவரின்  பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் பங்கேற்றவர்கள், முக்கிய மலையாள சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், தற்போது கலாபவன் மணி மரணம் சொத்துத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்தக் கோணத்தில் விசாரணை போலீசார் தொடங்கி உள்ளனர். ஏற்கெனவே நடிகர் கலாபவன் மணியின் மனைவி நிம்மியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கலாபவன் மணியின் மரணத்தின் மர்மம் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் நீடிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மார்ச் 22- இளையராஜா இசையுலகின் ஜாம்பவான் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இசை அமைத்த படங்களிலேயே ஆயிரமாவது படம் எது என்பது தான் தற்போது எல்லோருடைய கேள்வியாக உள்ளது.

 

இவர் இசையமைத்து, இயக்குநர் பாஸ்கி இயக்கியஷமிதாப்’ தான் ஆயிரமாவது படம் என்று கூறி மும்பையில் இளையரஜாவுக்கு பிரமாண்ட விழா நடத்தினார். ஆனால்தாரைப் தப்பட்டை’ தான் தமது ஆயிரமாவது படம் என இளையராஜாவே உறுதி செய்துள்ளார்.

 

தற்போது இளையராஜா இசையமைத்துள்ள பல படங்கள் வெளிவரவுள்ளன. எனவே, அவர்களது படம்தான் இசைஞானியின் ஆயிரத்து ஒன்றாவது படம் என கூற ஆரம்பித்துவிட்டனர்.

சென்னை, மார்ச் 22- தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்.

 

இதைகுறித்த சர்ச்சைகளுக்குப் பின்னர், ஆரோகணம் படத்தில் ஆனந்த் அரவிந்தக்ஷன் பாடியது குறித்து படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்துரைத்தார்.

 

‘’ஆனந்த் அரவிந்தக்ஷன் ரொம்ப திறமையானவர்.ரொம்ப சின்சியரானவர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடப் போறதா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.எனக்கும் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுனு அப்ப தெரியாது. அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன்

 

இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.

 

ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சூப்பர் சிங்கர்னு டைட்டில் வாங்குறதுக்கு அவரோட நேரத்தையும் உழைப்பையும் கொட்டியிருக்கார். ஆனா அதெல்லாம் இன்னைக்கு ஒரு நொடியில மறைஞ்சுப் போச்சு. மக்களை மட்டுமில்ல... போட்டியாளர்களும் இப்ப பாதிக்கப்பட்டிருக்குறது வருத்தமா இருக்கு.

 

வெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்திருக்கேன்.ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே கண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

 

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மை தானா?

More Articles ...