சென்னை, 22 மார்ச்- இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் விஜய் டி.வி நிகழ்ச்சிகளுள் ஒன்று  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. கடந்த வாரம்  தமிழில் ஒரு பிரமாண்டமான குரல் தேடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கான  இறுதிச் சுற்று கடந்த வாரம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த் அரவிந்த்தாஷன், லட்சுமி   ஆகிய ஐந்து பேரும் போட்டியிட்டனர்.  

 இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்த்தாஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்களாவர்.  

இப்போட்டியில், பலத்த எதிர்ப்பார்ப்புகளிடையே கேரளாவின்   ஆனந்த் அரவிந்த்தாஷன்   முதலிடத்தைப் பெற்று 75 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாக வென்றார்.  

இந்நிலையில், ஆனந்த் அரவிந்த்தாஷன்  ஒரு பின்னணி பாடகர் என்ற விஷயம்   அம்பலமாகியுள்ளது. ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியுள்ளார்.   

புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்ற  பெயரில்  நடத்தப்படும் இப்போட்டியில், ஏற்கெனவே பின்னணி பாடிய  ஆனந்த் அரவிந்த்தாஷனை விஜய் டி.வி தேர்வு செய்திருப்பது எவ்வகையில் நியாயம் என பலரும்  சமூகவலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

கோவை, 22 மார்ச்-  சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் எதிர்வரும்   மே 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இசையமைப்பாளர் அனிருத்துக்கு  கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பெண்களை   ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையில், சிம்பு மற்றும் அனிருத் இயற்றிய பீப் பாடல்  இணையத் தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பீப் பாடலுக்கு எதிர்ப்பு  தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.  அதே போல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.   

 இதனையடுத்து சிம்புவும், அனிருத்தும் மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராஜ அழைப்பாணை அனுப்பப்பட்டது.  இதனையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையில்,   சிம்பு தரப்பில்   அவரது வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் சிம்பு நேரில் வருவதிலிருந்து விலக்கு அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலைச் சமர்ப்பித்தார்.  இதனிடையே ஏற்கெனவே  அனுப்பிய அழைப்பாணையைப் பெற அனிருத் மறுத்துள்ளார். இதனையடுத்து,  அடுத்த விசாரணை மே 12-ஆம் தேதி நடைபெறும் போது, அனிருத் நேரில் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.    

 

சென்னை, மார்ச் 21- ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படம் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 330 கோடி ரூபாய் அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத்தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர். 

எந்திரன்- 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது. இந்தியத் திரைபடத்துறையில் அண்மைய காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

படப்படிப்பில் எதிர்பாராத வகையில் ஏற்படும் இடையூறுகள், கலைஞர்களின் உடல்நலக் குறைவால் உருவாகும் தாமதங்களால் ஏற்படும் நஷ் டங்கள், படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நாளில் அசம்பாவிதங்களால் அது தடைபடுதல் போன்ற பல காரணங்களுக்காகவே திரைப்படங்கள் காப்புறுதி செய்யப்படுகின்றன என்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலான் இயக்குநருமான ஜெகன் நாதன் தெரிவித்தார்.

எனினும் படப்பிடிப்பு காலத்தில் கலைஞர்களின் உயிரிழப்புக்கு இந்தக் காப்புறுதிகள் பொருந்தாது எனவும் அவர் கூறுகிறார்.

 சென்னை, மார்ச் 21- பழங்கால தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாக விளங்கி, பல அரியத் தகவல்களை இன்றைய  தலைமுறை ரசிகர்களுக்கு அளித்து உதவிய பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். 

"பிலிம் நியுஸ் ஆனந்தன்" என பரவலாக அழைக்கப்பட்ட  ஆனந்தன் தமிழ்த்திரைப்படச் செய்திகளை அதிகம் சேகரித்து வைத்திருந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைப்படத்துறையில் வெளியான பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் இவர் வைத்திருந்தார். 

ஊமைப்படம் முதல் நாளை வெளியாகப் போகும்  படங்கள் வரை ஆண்டு, மாதம், தேதி, நடிகர்/நடிகையர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் வரை திரையுலகின் நடமாடும் விக்கிபீடியாவாக பிலிம் நியுஸ் ஆனந்தன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

More Articles ...