மும்பய், மார்ச் 18- பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை கங்கானா ரனாவத் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வக்கீல், நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் ஒரு பத்திரிகை பேட்டியில், என் முன்னாள் காதலர் ஏன் முட்டாள்தனமான காரியங்களைச் (silly ex) செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக டுவீட் செய்த ஹிருத்திக் ரோஷன், நான் போப்புடன் பழக சாத்தியமுள்ளதே தவிர ஊடகங்கள் சொல்கிற நடிகையைக் காதலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் திடீரென கங்கனாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ஹிருத்திக். கங்கனா அப்பேட்டி தன் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், இருவரும் காதலர்களாக இருந்தது போல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் நடித்தது தவிர இருவருக்குமிடையே வேறு எந்தப் பழக்கமும் கிடையாது. எனவே அந்தப் பேட்டிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதற்கு பதிலடியாக கங்கனாவும் வக்கீல் நோட்டீஸை ஹிருத்திக்குக்கு அனுப்பினார். கங்கனா ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். சில்லி எக்ஸ் என்று சொன்னதை ஏன் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னதாக நினைக்கவேண்டும்? இருவருக்கும் தொழில் ரீதியாக மட்டுமே பழக்கம் என்று ஹிருத்திக் கூறியுள்ளார். ஆனால் ஹிருத்திக்கின் சகோதரியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கங்கனா வருகை புரிந்துள்ளார். கங்கனாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் ஹிருத்திக் குடும்பத்துடன் வந்துள்ளார். பொது இடங்களில் நடந்த சம்பவங்கள் இவை. இருவருக்குமிடையே உள்ள பழக்கத்தை கங்கனா வெளிப்படையாகவே கூறியுள்ளார் என்று பதில் வக்கீல் நோட்டீஸில் வாதங்கள் செய்துள்ளார் கங்கனா.
காதல் விவகாரம் தொடர்பாக ஹிருத்திக்கும் - கங்கனாவும் மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 2000ஆம் ஆண்டில் ஹிருத்திக் ரோஷனும் சுசன்னேவும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. பிறகு கருத்துவேறுபாடு காரணமாக 2013ஆம் ஆண்டில் பிரிந்தார்கள். மே 2014ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். அடுத்தச் சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. கங்கனா ரனாவத்துடன் காதலில் இருந்ததால்தான் இந்த மணமுறிவு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இருவரும் கைட்ஸ், கிரிஸ் 3 என இரு படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
இதற்குப் பிறகு ஹிருத்திக் - கங்கனா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிய நேர்ந்தது. அதற்கு பிறகுதான் இருவரும் மாறி மாறி பத்ரிகைக்கு பேட்டி அளிக்கின்றனர். வக்கீல் நோட்டீஸ் விடுவதும் ஆரம்பமாகி உள்ளது.