கோலாலம்பூர், பிப்.19- சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான கபாலி மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்யப்படவிருக்கிறது. ஏறக்குறைய 60 மில்லியன் ரிங்கிட் செலவில் தயாராகி கொண்டிருக்கும் கபாலி திரைப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.

 

இப்படம் மலாய் மொழியிலும் மொழி மாற்றம் செய்ய ரஜினி ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது குரல் பதிவிற்காக வேலைக்காக இந்தியாவில் திரும்பியுள்ளனர். தமிழில் குரல் பதிவு வேலைகள் முடிந்த பின் மலாய் மொழியில் குரல் பதிவு செய்யும் வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

கபாலி படத்தில் மலேசிய கலைஞர்களான டத்தோ ரோஸ்யாம் நோர், நோர்மான் ஹகிம் மற்றும் ஷேக் தைபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை, பிப்-19 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பது உறுதியாகிவிட்டது என்று இயக்குநர் சித்திக் தெரிவித்திருக்கிறார்.

 

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கியிருக்கிறார். தமிழ் ரீமேக்கில் ரஜினி மற்றும் அஜித் நடிக்கவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றுக்கு 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சித்திக். அதில், "ரஜினி மற்றும் அஜித் இருவரும் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

 

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. ரஜினி நடிப்பது உறுதி.

 

தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி, அடுத்தாண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.