மும்பை, நவ.17- பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் 'பத்மாவதி' திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதியன்று திரையீடு காணவிருக்கிறது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. நடிகை தீபிகா படுகோன், இப்படத்தில் ராணி பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு,  ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 'பத்மாவதி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தீபிகா படுகோன் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் அபிஷேக் சாம் அறிவித்துள்ளார். 

"இந்தப் படத்தை வெளியிடுவதை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி நிறுத்திவைக்க வேண்டும். மீறி படத்தை வெளியிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ராஜ்புத் பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா, எங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கிறார். ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பொதுவெளியில் நடனம் ஆட மாட்டார். இயக்குநர் சஞ்சய்க்கு, ராஜ்புத்களின் வரலாறு தெரியவில்லை. வரலாற்று உண்மையைச் சிதைத்த அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சர்வ் பிராமின் மகாசபா' என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், ரத்தத்தால் எழுதிய கடிதம் ஒன்றை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளனர். கார்னி சேனா என்ற அமைப்பு, டிசம்பர் 1-ம் தேதி, இந்த படத்தை எதிர்க்கும் வகையல் மறியல் ஒன்றில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது, எதிர்ப்பாளர்கள் பலர் ஷூட்டிங் தளத்தில் போடப்பட்டிருந்த செட்டுகளை உடைத்து, அங்கு பணியில் இருந்த பணியாளர்களையும் தாக்கினர். மேலும் படப்பிடிப்பு உபகரணங்களையும் சேதப்படுத்தினர். அத்தாக்குதலில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் காயம் அடைந்தார். 

இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டின் போதும் அதனை தீ வைத்துக்கொளுத்தி அவர்கள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

சென்னை, நவ.16- இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக படம் வெளிவந்த பிறகு தான் பாலாவின் படங்களுக்கு எதிர்ப்பு வரும். ஆனால் ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய புதிய படமான நாச்சியார் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்ட உடனே சர்ச்சையும் தொடங்கி விட்டது.

பாலாவின் புதிய படம் நாச்சியார். இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து பின் ஆக்கப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இயக்குனர் பாலா இப்படத்தின் டீசரை யூடியூப்பில் வெளியிட்டார். டீசர் வெளியான உடனே சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு காரணம் டீசரின் இறுதியில் 'தே' என்று தொடங்கும் தகாத வார்த்தையை ஒரு இளைஞனை நோக்கி ஜோதிகா பேசுவது போல் காட்சி அமைந்திருப்பதே.

பொதுவாக படங்களின் கெட்ட வார்த்தைகள் சென்சார் போர்ட்டினால் நீக்கப்படும் அல்லது பீப் சத்தம் இணைக்கப்படும். ஆனால் இந்த டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசுவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நவ.15- இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் அசர வைத்த பாகுபலி படத்தின் முதல் பாக கிளைமாக்ஸ் காட்சியை நடன வடிவில் தந்து பார்வையாளர்களைக் கவர்ந்த காணொளி தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

இந்தியில் நடந்து நடன போட்டி தான் டான்ஸ் சேம்பியன்ஸ். இது ஃபுஷன் எனப்படும் புதுவகை நடனங்களும் பாரம்பரிய நடனங்களையும் படைத்து வெற்றியாளர் யார் என்பதை கண்டெடுக்கும் போட்டி. இதில் பாகுபலி முதல் பாகத்தின் இறுதிக் காட்சியினை மையமாக வைத்து நடனம் ஒன்றினை கிங்ஸ் யூனைடெட் எனும் குழு படைப்பு வழங்கியது. 

அதில் பிரபாஸ் போலவும் கட்டப்பா போலவும் மற்றும் படை வீரர்கள் போலவும் நடன கலைஞர்கள் உடையணிந்து மிக வித்தியாசமான முறையில் படைப்பு செய்திருந்தனர். 

கடந்த 12ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த காணொளியை முகநூலில் மட்டும் இதுவரை 2.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் 58,000-க்கும் மேற்பட்டோர் இதனைப் பகிர்ந்துள்ளனர். பாகுபலி படத்தின் காட்சியை இப்படியும் மேடையில் நடன வடிவில் படைக்க முடியுமா என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத், நவ.14- நடிகை சமந்தாவின் மாமனாரான நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் உள்ளது. அந்த ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறை வீரர்கள் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஸ்டுடியோவில் இருந்த 2 படங்களின் செட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. அதில் ஒன்று நாகர்ஜுனா தனது மகன், அப்பாவுடன் சேர்ந்து நடித்த மனம் படத்தின் செட் ஆகும். 

2 செட்டுகள் எரிந்தபோது அங்கு யாரும் இல்லை. அதனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செட்டுகள் எரிந்ததில் நாகர்ஜுனாவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நாகர்ஜூனாவின் அப்பா நாகேஸ்வர ராவ் அகினேனி துவங்கிய அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படங்கள், ரியலிட்டி  ஷோக்கள், டிவி தொடர்கள் என்று ஏதாவது ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தீ சம்பவத்திற்கு சதி செயல் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Articles ...