பேராவிலிருந்து கொண்டு வரப்படும் நாய், பூனைகளுக்கு பினாங்கில் தடை!

சுகாதாரம்
Typography

பட்டர்வொர்த், ஜூலை.19- பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்க் கிருமி பரவாமல் தடுக்க பினாங்கு மாநிலத்திற்குள் பேராவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவிலுள்ள கோலா செபெதாங்கில் வெறிநாய்க் கடி நோய் சம்பவம் ஒன்று பதிவாகியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்க மாநில எல்லைப் பகுதியான செபெராங் பெராயில் கால்நடை சேவைப் பிரிவு சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது என்று மாநில விவசாயம் சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதார பிரிவின் தலைவர் டாக்டர் அபிப் பஹாருடின் கூறினார். 

வெறிநாய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய்களும் பூனைகளும் மாநிலத்தினுள் நுழையாமல் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்.

கடந்த ஈராண்டுகளாக பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்ச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், நாய் வளர்ப்பவர்கள் அந்நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். வளர்ப்புப் பிராணிகள் மற்ற விலங்குகளுடன் தொடர்புக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார்.

விலங்குகள் அதிலும் குறிப்பாக நாய்கள் கடித்தாலோ, தாக்கினாலோ உடனே சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறும் போலீஸில் தகவல் தெரிவிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்குமாறு அஃபிப் கூறினார். 

நாய்கள் அல்லது மற்ற விலங்குகள் வினோதமாக செயல்படுவதை கண்டால் வீஎஸ்டி ரேபிஸ் அமலாக்க பிரிவை 04-504-1047 என்ற எண்ணில் மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS