காசநோய், தொற்று நோய்க் கண்காணிப்பை சுகாதார துறை தீவிரப்படுத்தும்! -அமைச்சர்

சுகாதாரம்
Typography

 

புத்ராஜெயா, ஜூலை.20- காசநோய் மற்றும் இதர தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தும் என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

நோய் தொற்றுக் கிருமிகள் பரவக்கூடிய பகுதிகளில் வசிக்கும் 3 லட்சம் மக்களை இலக்காகக் கொண்டு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஓர் இயக்கமாகும். இது போன்ற மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிந்து கொள்ளமுடியும். 

இந்தச் சோதனைகளின் வழி இத்தகைய தொற்றுக் கிருமிகளுக்கு இலக்கானோர் கூடுதலாக கண்டுபிடிக்கப்படலாம். எண்ணிக்கை ஏற்றம் கண்டாலும் நோய் பரவுவதற்கான தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் உடனே மேற்கொண்டு வருவதால் பயப்படுவதற்கு அவசியம் இல்லை என்றார் அவர். 

முறையான சிகிச்சையால் காசநோய் சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

2015-ஆம் ஆண்டு 24,220 காசநோய் சம்பவங்களில் 1,696 மரணங்கள் பதிவாகியிருந்த வேளையில் கடந்தாண்டு 25,739 காசநோய் சம்பவங்களில் 1,945 மரணங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் 2,268 ஆக பதிவாகிய ‘லெப்டோஸ்பிரோசிஸ்’ என்ற எலி சிறுநீர் நோய் எண்ணிக்கை  2015-ஆம் ஆண்டில் 8,291 ஆக உயர்ந்தது. இது கடந்தாண்டு 5,284 ஆக குறைந்துள்ளது. இது குறித்து, சிறு சிறு உணவுக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்துவோர் தூய்மையை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும். 

மேலும், உணவுக் கடைகள், பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுகளை தூக்கியெறிவதால் அங்கு அதிகளவில் எலிகள் பெருகுகின்றன. இதனால் தொற்றுக்கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS