குழந்தைகள் நோய் தடுப்பூசிகள்;  ‘மைகிட்’ அட்டையிலேயே பதிவு!

சுகாதாரம்
Typography

கோலாலம்பூர், ஆக.29- குழந்தைகளின் நோய்த் தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களை சிறிய கையேட்டுக் குறிப்பில் பதிவு செய்து வைப்பதைக் காட்டிலும் ‘மைகிட்’ அடையாள அட்டைக்குள் அந்த விபரங்களைச் சேமித்து வைக்கும் பரிட்சார்ந்த முறையை சுகாதார அமைச்சு கையாளத் திட்டமிட்டிருக்கிறது. 

இந்த முன்னோடித் திட்டம் இவ்வாண்டில் தொடங்கவிருக்கிறது. இத்தகைய தகவல்களை மின்னியல் ரீதியில் சேமிப்பதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து அமைச்சு தீர்மானிக்க இது வாய்ப்பாக அமையும் என்று சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹ்யா கூறினார். 

முதலில் இந்த முறையை புத்ராஜெயா கிளினிக்கில் தொடங்கவிருக்கிறது. பின்னர் இது நாடு தழுவிய அளவிலுள்ள கிளினிக்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

குழந்தைகள் நோய்த் தடுப்பூசிகளைப் பதிவு செய்யும் குறிப்புப் புத்தகங்கள் காணாமல் போகும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இத்தகைய குறிப்பு கையேட்டுப் புத்தகத்தைத் தயாரிப்பதற்கும் அதிக அளவில் செலவாகிறது.

இதனால் தடுப்பூசிகள் தொடர்பான விபங்களைச் சுகாதாரத் துறையினர் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர். 

மருத்துவப் பரிசோதனைகளுக்கு வரும்போது கூட பெற்றோர்கள் இந்தக் குறிப்பு கையேட்டினை எடுத்து வரத் தவறி விடுகின்றனர். சிலர் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம் மாறுபவர்களாக இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS