சிலாங்கூரில் டிங்கி அதிகரிப்பு: மாநில அரசின் அலட்சியம்! -பிரதமர் சாடினார்

சுகாதாரம்
Typography

ஷாஆலாம், அக்.14- சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாம் ஆச்சரியப்படவில்லை என்று பிரதமர்    டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தெரிவித்தார். 

ஒவ்வொரு வருடமும் அம்மாநிலத்தில் குறைந்தது 40 ஆயிரம் மக்கள் அந்நோயால் பாதிப்படைவதாகவும், ஒரு நாளுக்கு 100 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார். 

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை சிலாங்கூரில், 39,158 பேர் டிங்கி காய்ச்சலுக்கு  உள்ளாகியுள்ளனர். அவர்களில் 59 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். 

"இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், சட்டவிரோத குப்பைத் தளங்கள் மற்றும் வடிகால்கள், ஆகியவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பு மாநில அரசாங்கத்துடையது. அலட்சியமே இதற்குக் காரணம்" என்றார் அவர்.

சவ்ஜானா உத்தாமா என்ற இடத்தில் தேசிய நீல பெருங்கடல் வியூகம்-'என் அழகிய சுற்றுப்புறம்' என்ற ஒன்றுகூடி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கியப் பின்னர் பிரதமர்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் இந்த டெங்கி காய்ச்சலுக்குள்ளவதாக தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு, கூட்டரசு அரசாங்கம் மற்றும் அம்மாநில அரசாங்கம் ஒன்றுகூடி சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. 

இந்த முயற்சி 98 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது என்று நஜிப் கூறினார். 

இதனிடையில், 42 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய இரண்டாவது சவ்ஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி கட்டுமானத்திற்கு 57.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக நஜிப் அறிவித்தார்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS