அதிகநேர வேலை செய்யும் மருத்துவர்களின்  சிரமத்தை குறைக்க அமைச்சு ஆய்வு!

சுகாதாரம்
Typography

 

கோலாலம்பூர், நவ.3- அதிக நேரம் கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு, சுகாதார அமைச்சு நீண்டகால தீர்வு ஒன்றை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தான் மருத்துவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று விதிமுறை அமலில் இருந்த போதிலும், இது மேலும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில், முறையான அமைப்பு இருந்தால் நல்லது என்று சுகாதார அமைச்சு கருதுவதாக சுப்பிரமணியம் மேலும் கூறினார். 

"அவசர அழைப்புகளின் கீழ் பணியில் அமர்த்தப்படும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான ஓய்வை வழங்கும் அதிகாரத்தை சுகாதார அமைச்சு, அவர்களின் தலைமை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது."

"தற்போதைய சூழ்நிலையில், ஜூனியர் மருத்துவர்கள் வாரம் ஒன்றுக்கு 65 மணி நேரங்களிலிருந்து 75 மணி நேரங்கள் வரை வேலை செய்கிறார்கள். ஆதலால், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது" என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த போது அவர் சொன்னார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற போதிலும், கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் நலனிலும் அக்கறைக் கொண்டுள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்படுவதாக அவர் சொன்னார். 

"ஜூனியர் மருத்துவர்களின் வேலை நேரத்தை குறைத்தால், அவர்களுக்கு தேவையான, முழுமையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியாது."

"சில சமயங்களில், குறிப்பிட்ட மணி நேரத்தை விட, அவர்கள் கூடுதல் நேரம் வேலையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அமைச்சு இறங்கியுள்ளது" என்று சுப்ரா தெரிவித்துக் கொண்டார். 

இதனிடையே, இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 24.59 மில்லியன் நோயாளிகள், நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டனர் என்றும் அவர்களில், 7,90,655 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் சுப்ரா கூறினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS