கோலாலம்பூர், ஜுலை 21- ரேபிஸ் நோய் கிருமியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்துகள் ஏன் போதிய அளவில் இல்லை என சரவா அரசாங்கம், மலேசிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுகாதார அமைச்சை நோக்கி தாங்கள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைக்காவிடில் இதனை நாடளுமன்றம் வரை எடுத்துச் செல்வேன் என சரவா உள்துறை அமைச்சர் டாக்டர் குய் ஹியான் எச்சரித்தார்.

இதுவரையில் ரேபிஸ் கிருமிகளின் தாக்குதலில் நால்வர் பலியாகியுள்ள வேளையில் ஒருவர் சரவா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"ஒரு வேளை உங்களை நாய் கடித்தால் தயவு செய்து கடித்த பாகத்தை உடனடியாக தண்ணீரைக் கொண்டு கழுவி விட்டு மருத்துவரின் நாடுங்கள். இவ்வாறு செய்தால் ரேபிஸ் கிருமிகள் உடனடியாக மூளையைப் பாதிப்பதை தடுக்க முடியும்" என அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரையில் சுமார் 516 ரேபிஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.20- பினாங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 'ரேபிஸ்' நோய் தாக்கிய போது முன்னெச்சரிக்கை இல்லாதால் ஏமாந்தது போலன்றி, இம்முறை வெறிநாய்க் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளில் பினாங்கு தீவிரமாக இறங்கியுள்ளது.   

குறிப்பாக, பினாங்கு மாநிலத்திற்குள் வரும் வாகனங்களில் நாய்கள் கொண்டு வரப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய சாலைத் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், தடுப்பூசிகள் போட கொண்டுவரப்படும் நாய்களுக்கு ‘மைக்ரோ-ஜிப்’ பொருத்தப்பட்டு வருகிறது. 

கால்நடை சேவைப் பிரிவு விழிப்பு நிலையில் இருப்பதாகவும் தடுப்பூசிகளுக்கு போதுமான அளவு மருந்து கையிருப்பு இருப்பதாகவும் மாநில சுகாதார பிரிவின் தலைவர் டாக்டர் அபிப் பகாருடின் கூறினார். இப்போதைக்குப் போதுமான அளவான 3,800 தடுப்பூசி மருந்துகள் போத்தல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பினாங்கில் ரேபிஸ் நோய் சம்பவம் எதும் பதிவாகாத நிலையில், இனிமேல் வருவதற்கான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பினாங்கில் சுமார் 10 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் வெறிநாய்க் கடி நோய் கிருமி பரவாமல் பாதுகாக்கும் விஷயத்தில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்  இருந்த போதிலும், சுமார் 7,000 நாய்களுக்கு நோய் தடுப்பூசி போட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் பினாங்கில் இந்நோய் தாக்கிய போது தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறைவு ஏற்பட்ட பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, கெடா மற்றும் பெர்லீஸ் மாநிலங்களிலும் வெறிநாய்க் கடி நோய் வராமல் தடுக்க இரு மாநில அரசாங்கமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் ரேபிஸ் நோய் வராமல் தவிர்க்கலாம் என கெடா மாநில சுகாதாரப் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் லீயோங் யோங் கோங் தெரிவித்தார். மாநில எல்லைப் பகுதிகளில் சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெர்லிஸ் மாநில சுகாதாரப் பிரிவு தலைவர் நூருல்ஹிஷாம் கூறினார்.

 

 

புத்ராஜெயா, ஜூலை.20- காசநோய் மற்றும் இதர தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தும் என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

நோய் தொற்றுக் கிருமிகள் பரவக்கூடிய பகுதிகளில் வசிக்கும் 3 லட்சம் மக்களை இலக்காகக் கொண்டு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஓர் இயக்கமாகும். இது போன்ற மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிந்து கொள்ளமுடியும். 

இந்தச் சோதனைகளின் வழி இத்தகைய தொற்றுக் கிருமிகளுக்கு இலக்கானோர் கூடுதலாக கண்டுபிடிக்கப்படலாம். எண்ணிக்கை ஏற்றம் கண்டாலும் நோய் பரவுவதற்கான தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் உடனே மேற்கொண்டு வருவதால் பயப்படுவதற்கு அவசியம் இல்லை என்றார் அவர். 

முறையான சிகிச்சையால் காசநோய் சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

2015-ஆம் ஆண்டு 24,220 காசநோய் சம்பவங்களில் 1,696 மரணங்கள் பதிவாகியிருந்த வேளையில் கடந்தாண்டு 25,739 காசநோய் சம்பவங்களில் 1,945 மரணங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் 2,268 ஆக பதிவாகிய ‘லெப்டோஸ்பிரோசிஸ்’ என்ற எலி சிறுநீர் நோய் எண்ணிக்கை  2015-ஆம் ஆண்டில் 8,291 ஆக உயர்ந்தது. இது கடந்தாண்டு 5,284 ஆக குறைந்துள்ளது. இது குறித்து, சிறு சிறு உணவுக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்துவோர் தூய்மையை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும். 

மேலும், உணவுக் கடைகள், பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுகளை தூக்கியெறிவதால் அங்கு அதிகளவில் எலிகள் பெருகுகின்றன. இதனால் தொற்றுக்கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

 

பட்டர்வொர்த், ஜூலை.19- பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்க் கிருமி பரவாமல் தடுக்க பினாங்கு மாநிலத்திற்குள் பேராவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவிலுள்ள கோலா செபெதாங்கில் வெறிநாய்க் கடி நோய் சம்பவம் ஒன்று பதிவாகியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்க மாநில எல்லைப் பகுதியான செபெராங் பெராயில் கால்நடை சேவைப் பிரிவு சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது என்று மாநில விவசாயம் சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதார பிரிவின் தலைவர் டாக்டர் அபிப் பஹாருடின் கூறினார். 

வெறிநாய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய்களும் பூனைகளும் மாநிலத்தினுள் நுழையாமல் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்.

கடந்த ஈராண்டுகளாக பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்ச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், நாய் வளர்ப்பவர்கள் அந்நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். வளர்ப்புப் பிராணிகள் மற்ற விலங்குகளுடன் தொடர்புக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார்.

விலங்குகள் அதிலும் குறிப்பாக நாய்கள் கடித்தாலோ, தாக்கினாலோ உடனே சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறும் போலீஸில் தகவல் தெரிவிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்குமாறு அஃபிப் கூறினார். 

நாய்கள் அல்லது மற்ற விலங்குகள் வினோதமாக செயல்படுவதை கண்டால் வீஎஸ்டி ரேபிஸ் அமலாக்க பிரிவை 04-504-1047 என்ற எண்ணில் மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.

More Articles ...