நியூயார்க், மே.22- 'தம்' அடிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால், தினமும் மூன்று வேளை கொஞ்சம் பழங்களுடன் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கால் நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைபட்டு அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆய்வு கூறுகிறது.

லட்சக்கணக்கான மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் நமது இரத்த நாளங்களைப் பாதுகாக்க பழங்கள், காய்கறிகள் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள், மற்றும் அதனைக் கைவிட்டவர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும் மூன்றுவேளை பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்களிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.

சராசரியாக 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கால்களில் இரத்த ஓட்டம் குன்றி, கடும் வலி, மற்றும் நடக்க முடியாமல் போகும்நிலை உருவாவதற்கு இதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கால்களிலுள்ள நரம்புகளுக்குள் இரத்தம் இயல்பாக பாயவிடாமல், ஆங்காங்கே திட்டுத்திட்டாய் கட்டிக் கொள்ளும் கொழுப்புகளைக் கரைக்க, பழங்களும் காய்கறிகளும் அவசியமாகிறது என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.

 

 

பெய்ஜிங் , மே.15- ஆண்கள் நேரங்காலமே தூங்கப் போனால், நேரங்காலமே நல்ல ஆரோக்கியமான பிள்ளை பிறக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

இரவு 8 மணிக்கும் 10 மணிக்கும் இடையே ஆண்கள் துங்குவதற்கு பழகிகொள்ள வேண்டும் இதனால் ஆணின் விந்து அணுக்கள் த்ரமான நிலையை எட்ட இந்தத் தூக்கம் அவசியமானது என்று சீனாவிலுள்ள ஹர்பின் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட நேரத்திற்குள் படுக்கைக்கு சென்று விடுபவர்கள் ஆரோக்கியமான விந்து அணுக்களை கொண்ட்டிருப்பர் என்றும் இதன் தன்மை எளிதில் பெண்களின் கருமுட்டை செறிவடையச் செய்யக் கூடியவையாக உள்ளன என்றும் நிபுணர்கள் கூறினர்.

அதேவேளையில் மிக காலதாமதமாக படுக்கைக்குச் செல்பவர்கள், குறிப்பாக, 12 மணிக்குப் பிறகு தூங்கச் செல்பவர்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும். குறிப்பாக, 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தைக் கொண்டிருப்பவர்களின் நிலைமை மோசமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரவு எட்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்குகிற ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறவர்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கிட்டத்தட்ட 981 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க், மே.5- எய்ட்ஸ் நோயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், அதனை எலியின் மூலம் பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். எலியின் உடலில் எய்ட்ஸ் கிருமிகளைச் செலுத்தி, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையைப் பரிசோதித்துப்  பார்த்தனர்.

மனிதனின் மரபணுவில் செய்யப்பட்ட சில மாற்றங்களுக்கான அணுவை எலியின் உடலில் செலுத்தி எலியின் உடலில் பல மாற்றங்களை விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். அப்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எலியின் உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகளை, அவை முற்றாக அழித்துவிட்டன.

மனிதனின் உடலில் புகும் எய்ட்ஸ் கிருமிகள் முதலில் எச்.ஐ.வி. கிருமியாக இருந்து பின்னர் அவை வளர்ந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இந்த மரபணுச் சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். எனவே, எய்ட்ஸ் நோய் உருவாவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் உயிர் இழப்புகளை தடுத்து விடலாம்.

விரைவில் இந்த மருத்துவ முறை மீதான பரிசோதனை மனிதர்களிடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிப்படைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 லண்டன், ஏப்ரல்,5- ஒரு மனிதனை மாரடைப்பின் தாக்கத்திலிருந்து உடனுக்குடன் காப்பாற்றும் நோக்கில், பிரிட்டனின் இருதய ஆய்வுக் கழகம், இரத்தப் பரிசோதனை மூலம் முன்னறிந்து தடுப்பதற்கான புதிய வழிமுறை ஒன்றைக் கண்டறிந்துள்ளது.

உலகில் அதிகமானோரின் உயிரைப் பறிப்பது மாரடைப்புத்தான். இதன் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இருதயத்தின் தசைகளில் ஏற்படும் பிரச்சனை தான் மாரடைப்பை உண்டாக்குகிறது.

ஒருவருக்கு தசையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவருக்கு முன்கூட்டியே மிதமான அளவில் மாரடைப்பு வந்துள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனை வழி கண்டுபிடிக்கும் புதிய மருத்துவ முறையை பிரிட்டீஷ் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நெஞ்சு வலியோடு அல்லது இரு தோள்பட்டைகளிலும் கடுமையான வலியோடு மருத்துவமனைக்கு வருகின்ற ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை உறுதியாக கண்டறிய குறைந்தபட்சம் 24 மணிநேரம் தேவைப்படுகிறது.

ஆனால், தற்போதைய புதிய இரத்தப் பரிசோதனையின் வழி 12 நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று பிரிட்டனின் இருதய பராமரிப்பு அறவாரியத்தின் தலைவர் சர் நீலேஷ் சமானி என்பவர் தெரிவித்தார்.

இவ்வாறு 12 நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்றலாம். இதன்வழி பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

பல உயிர்கள் பலியாவதற்கு காரணமே, "அது மாரடைப்புத் தானா?" என்பதைக் கண்டறிவதற்கு ஏற்படும் தாமதம் என்று டாக்டர் நீலேஷ் சொன்னார்.

இருதயத்தின் தசையில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதை மிகத் துல்லியமாக காட்டக்கூடிய மிக முக்கியமான புரோட்டினை தாங்கள் அடையாளம் கண்டு இருப்பதாகவும் இந்த வகை புரோட்டின் அதிகம் தென்படும் போது அது மாரடைப்பை சுட்டிக்காட்டி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரத்தப் பரிசோதனை முறை சில மாதங்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடும் என்று அவர் கூறினார்.

More Articles ...