கோலாலம்பூர், 21 டிசம்பர்- தென்கிழக்காசியாவிலேயே அதிகமான இனிப்பு நீர் நோயாளிகளைக் கொண்ட நாடாக மலேசியா திகழ்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு,நாட்டில்  2.6 மில்லியன் மக்கள் இனிப்பு நீர் எனும்  நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.   இந்த எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டு 17.5 விழுக்காடு அதிகரித்து,  3.5 மில்லியனாக அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். 

நீரிழிவு நோய்  வந்தாலே பல்வேறு நோய்களும் தொற்றிக்கொள்வது குறித்து அறிந்திருப்போம்.  ஆனால்,  இந்த இனிப்பு நீர் வியாதி   பார்வையையும் பாதிக்கும் என்ற விழிப்புணர்வு இன்னமும் மக்களிடையே குறைவாகவே இருப்பதாக அறியப்படுகிறது. 

நீரிழிவு நோயினால் ஏற்படும்  " டயபடிக் ரெட்டினோபதி" எனும் கண் பாதிப்பு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயத்தைக் கொண்டதாகும்.   

நாளுக்கு நாள்  இளையோரிடையே நீரிழிவு நோய்  பாதிப்பு நோய் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கண்பார்வை பரிசோதனை செய்துகொள்வது, நல்லது.  இல்லையேல், கண்பார்வை இழப்பு அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என எச்சரிக்கிறார், கிள்ளான் மணிப்பால் மருத்துவமனையின், கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் நரேந்திரன். 

 

கிரானாடியா, நவ.21- பொதி சுமக்கத்தான் கழுதைகள் என்கிற நிலை மாறுகிறது. இப்போது அவற்றின் அந்தஸ்து  கூடுகிறது  கழுதைக்கும் ஒருகாலம் வந்ததற்குக் காரணம் அதன் பாலுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கிதான்.

மோண்டெநெக்ரோ நாட்டில் இப்போது கழுதைப் பால், ஒரு ஊட்டச் சத்து உணவு. கழுதைகளுக்கு இங்கு ஏகப்பட்ட மதிப்பு. நாளுக்கு நாள் கழுதைப் பால் விலை ஏற ஏற கழுதைக்கான மரியாதையும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஒரு லிட்டர் கழுதைப் பால் 54 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இது மருத்துவக் குணம் கொண்டது என்று கருதப்படுவதால் அதன் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறது.

கழுதையின் பால், மிக ஆரோக்கியமானது. அது தோல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடியது. இதர சில நோய்களையும் இது குணப்ப டுத்துகிறது என்று கழுதைப் பால் அருந்திக்கொண்டே கூறுகிறார் பண்ணை விவசாயி சவெல்ஜிக்.

இவர் தம்முடைய பராமரிப்பில் 30 கழுதைகளை வளர்த்து வருகிறார் பால் விற்பனையும் செய்து வருகிறார். தினமும் கொஞ்சம் கொஞ்சம் கழுதைப் பால் அருந்தினாலும் ஆஸ்துமா, நீடித்த சளி இருமல் ஆகியவை நீங்கும் என்கிறார் இவர்.

கழுதைகள் குட்டிப் போட்ட பின்னர் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பால்தரும். ஒரு நாளைக்கு 400 மில்லி லிட்டர் பால் மட்டுமே அது தரும். பசுவோடு ஒப்பிட்டால் இது பல மடங்கு குறைவாகப் பால் தரக்கூடியது.

கழுதை பால் விலை அதிகம் என்பதால் எனது பண்ணையில் இருந்து கிடைக்கும் பாலில் ஒரு பகுதியை நோய்வாய்ப்பட்ட வசதி குறைந்த வர்களுக்குத் தந்து உதவுகிறேன் என்று சவெல்ஜிக் சொன்னார். 

தாய்ப் பாலில் இருக்கும் அளவுக்கான 'புரோட்டின்' சத்து,  கழுதைப் பாலிலும் இருக்கிறது. நோய் எதிர்ப்புத்தன்மை இதில் அதிகம் என்று கால்நடை த்துறை விஞ்ஞானியும் சைப்ரஸ் பல்கலைக்கழக பேராசிரியருமான போடிஸ் பபாடுமாஸ் கூறுகிறார். மேலும் இது குறித்து கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதனிடையே 'பால்கன்' இனக் கழுதைகளின் இனம் கணிசமாகச் சரிந்து வருவதால் அதனை பாதுகாக்கப்பட்ட இனமாக அந்நாட்டு அரசாங்கம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

 

கோலாலம்பூர், நவ.14- குழந்தைகளுக்கான தடுப்பூசியைப் போடுவதைச் சில பெற்றோர்கள் தடுத்து வருகின்றனர். இதனால், தடுக்ககூடிய நோய்களினால் பாதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறை துணையமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஹில்மி யாஹயா இதனைப் பற்றி கூறுகையில், கடந்த ஆண்டு ஏறக்குறைய 1451 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதைத் தடுத்துள்ளதாக கூறினார். இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு வெறும் 918 ஆக இருந்தது.

தடுப்பூசி போடுவதால் தடுக்கக்கூடிய சில நோய்களின் எண்ணிக்கை, இந்த சிக்கலால் கடந்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். 

'உதாரணத்திற்கு, கடந்த 2015ம் ஆண்டு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,318 பேராக இருந்த நிலையில் இவ்வாண்டு, ஜூன் மாதம் வரை மட்டுமே 1009 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

"தடுப்பூசிகள் குறித்து சில ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளால் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதை எதிர்க்கின்றனர். அது தவறு. இவர்களுக்கு முறையான விளக்கங்கள் தேவை" என டாக்டர் ஹில்மி கூறினார்.

இதற்காகவே அமைச்சின் மைஹெல்த் அகப்பக்கத்தில் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு அவசியம் குறித்த விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும், மாநில அளவில் சுகாதார விழிப்புணர்வு வழங்க ஜாகிம் உடன் இணைந்து அமைச்சு வேலை செய்யும் என அவர் மேலும் கூறினார்.

'உங்களுக்கு ரத்தத்துல கொலஸ்ட்ரால்  அளவு கூடுதலா இருக்கு. அவசியம் குறைக்க வேண்டும் 'என மருத்துவர் சொல்லிவிட்டால்,  நம்மில் பலர்  மனமுடைந்து விடுவார்கள். நாளைக்கே மாரடைப்பு வந்து விடுவது போன்ற உணர்வு ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடும். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா?  இருக்கவே இருக்கிறது கறிவேப்பிலை. கறிவேப்பிலை முடிக்குதானே? என்கிறீர்களா.. 

மேற்கொண்டு படியுங்கள். 

கறிவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே. உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கறிவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன.

சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கறிவேப்பிலையில் உண்டு. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது கறிவேப்பிலை. உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். எனவே கறிவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளை கரைப்பதுடன், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.

இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.

இதில் ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. கறிவேப்பிலையை பேஸ்ட் செய்து, இதனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் இருந்த இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.

குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கறிவேப்பிலையை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

More Articles ...