புத்ராஜெயா, அக்.5- தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைகளுக்காக அதிகமாக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்த மருந்து மற்றும் மருத்துவ செலவுகளை சீராக நிலைநிறுத்துவது சுலபமான காரியம் அல்ல. இதனை எவ்வாறு நிலைநிறுத்துவது? என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. 

அரசாங்கம் கடந்த ஆண்டு, பொதுச் சுகாதார பராமரிப்பிற்கு ரிம. 2,500 கோடி செலவிட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். ஆனால், வழங்கப்பட்ட சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரிம. 60 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

"மருந்து மற்றும் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 95% மானியத்தை வழங்கியுள்ளது என்பது இதன் வாயிலாக தெரியவந்துள்ளது," என்று புத்ராஜெயா மருத்துவமனையின் புதிய சிகிச்சை மையத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது அவர் தெரிவித்தார். 

இதனிடையே, இச்செலவுகளை நிலைநிறுத்தும் வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. பொது மற்றும் தனியார் துறைகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் வாயிலாக, சுகாதார துறைக்கு ஏற்படக்கூடிய சிரமமான சூழ்நிலைகளுக்கு தீர்வு காணலாம் என்றார் அவர்.

மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவுகளையும், சுகாதார பரமாரிப்புக்கான செலவுகளையும் இதன் வாயிலாக நிலைநிறுத்தலாம். இது ஒரு நீண்ட காலத் திட்டம். முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது," என்று கூறிய அவர், மேலும் விவரிக்க மறுத்து விட்டார். 

அந்தப் புதிய சிகிச்சை மையம், ரிம.365 மில்லியன் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இச்சிகிச்சை மையம் 2020-ஆம் ஆண்டில் முழுமைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 கோலாலம்பூர், செப்.26-  நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் உரிமை மருந்தக அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் கொடுக்கப்படவிருக்கும் மருந்தகச் சட்ட மசோதா குறித்து இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்பட்டு அட்டர்னி ஜெனரலின் அனுமதிக்காக காத்திருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். 

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விவாதித்து விட்டோம். அட்டர்னி ஜெனரலின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர் இந்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.

ஈராண்டுகளுக்கும் முன்னர் நோயாளிகளுக்கு மருத்து வழங்கும் உரிமை குறித்து முன்மொழியப்பட்ட புதிய மசோதாவை மலேசிய மருந்துவ சங்கம் நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு இந்த மசோதாவை அமல்படுத்த சில தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

பின்னர், இந்த மசோதாவில் குறிப்பிட்டப் பட்டிருந்ததைப் போல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கும் மருந்து வழங்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது என்று டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

இதனால், நோயாளிகள் யாரிடமிருந்து எங்கு மருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யலாம் என்றார் அவர். மருந்தகங்களில் மருந்தக அதிகாரிகளிடம் இருந்து மருந்து வாங்கி கொள்ளும் சட்டம் தான் இப்போது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜொகூர்பாரு, செப்.23- லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலி சிறுநீர் தொற்று நோய் ஜொகூரில் அதிகரித்து வரும் வேளையில், கடந்தாண்டு 205-ஆக பதிவாகிய இந்த நோய்ச் சம்பவங்கள், இவ்வாண்டு 228 ஆக உயர்வு கண்டுள்ளன என்று மாநில சுகாதார, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் தகவல் துறை ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோ அயூப் ரஹ்மாட் கூறினார்.

இந்த ஆண்டில் அதிக எலி சிறுநீர் தொற்று நோய் சம்பவங்களாக ஜொகூர் பாருவில் 55 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், சிகாமாட்டில் 37 சம்பவங்களும் குளுவாங்கில் 30 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த நோயால் கடந்த ஆண்டு 9 ஆக பதிவாகிய மரண எண்ணிக்கை, இந்த ஆண்டு 13-ஆக உயர்வு கண்டுள்ளது என்று அயூப் தெரிவித்தார். 

சுற்றுலா பகுதிகளான நீர்விழ்ச்சி, குளங்கள் மற்றும் ஏரிகள் போன்றவை அசுத்தமாக இருப்பதால் எலிகளின் சிறுநீர், கழிவுகளால், லெப்டோஸ்பைரோசிஸ் என்ற நோய் மனிதர்களைத் தாக்குகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார். 

மேலும், இது போன்ற சுற்றுலா பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள், உணவக உரிமையாளர்கள், குடியிருப்பவர்கள் அனைவரும் குப்பைகளையும் கழிவுப் பெருட்களையும் கால்வாய்களிலும் நீர்நிலைகளிலும் வீசுவதைத் தவிர்க்க வேண்டும் என அயூப் கேட்டுக் கொண்டார். 

எலிச் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சளிப் பிடித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனை அடையாளம் கண்டு உடனே சிகிச்சை பெறாவிடில், உடல் உறுப்புகள் செயலிழந்து மரணத்தை விளைவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

 

கோலாலம்பூர், ஆக.29- குழந்தைகளின் நோய்த் தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களை சிறிய கையேட்டுக் குறிப்பில் பதிவு செய்து வைப்பதைக் காட்டிலும் ‘மைகிட்’ அடையாள அட்டைக்குள் அந்த விபரங்களைச் சேமித்து வைக்கும் பரிட்சார்ந்த முறையை சுகாதார அமைச்சு கையாளத் திட்டமிட்டிருக்கிறது. 

இந்த முன்னோடித் திட்டம் இவ்வாண்டில் தொடங்கவிருக்கிறது. இத்தகைய தகவல்களை மின்னியல் ரீதியில் சேமிப்பதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து அமைச்சு தீர்மானிக்க இது வாய்ப்பாக அமையும் என்று சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யஹ்யா கூறினார். 

முதலில் இந்த முறையை புத்ராஜெயா கிளினிக்கில் தொடங்கவிருக்கிறது. பின்னர் இது நாடு தழுவிய அளவிலுள்ள கிளினிக்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

குழந்தைகள் நோய்த் தடுப்பூசிகளைப் பதிவு செய்யும் குறிப்புப் புத்தகங்கள் காணாமல் போகும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இத்தகைய குறிப்பு கையேட்டுப் புத்தகத்தைத் தயாரிப்பதற்கும் அதிக அளவில் செலவாகிறது.

இதனால் தடுப்பூசிகள் தொடர்பான விபங்களைச் சுகாதாரத் துறையினர் அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர். 

மருத்துவப் பரிசோதனைகளுக்கு வரும்போது கூட பெற்றோர்கள் இந்தக் குறிப்பு கையேட்டினை எடுத்து வரத் தவறி விடுகின்றனர். சிலர் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம் மாறுபவர்களாக இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

More Articles ...