பெண்களே கத்திரி வெயிலைச் சமாளிக்கத் தயாரா?

மகளிர்
Typography

நம் நாட்டைத் தற்போது  கடுமையான வெயில் வாட்டி எடுப்பதை  நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். அதிகப்படியான வெயில் சருமத்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது. 

எனினும், மலேசியாவில்  நிலவி வரும் இக்கடும் வெயில், இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. 

கடும் வெயில் என்றாலே பெண்கள் சருமம் வீணாகி விடுமே என்றுதான் பெரிதும் பயப்படுவார்கள்.  ஆனாலும், கவலை வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே    கடும் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். 

வெயில் காலத்தில் நமது முதல்  எதிரி வியர்வை. வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம், வியர்க்குரு, பூஞ்சை   தொற்று போன்றவை   பிறரோடு பழகும் போது, பெரும் தர்மசங்கடத்தை நமக்கு ஏற்படுத்திவிடும். இவ்வாறான உடல் துர்நாற்றத்தைப் போக்க,  சவர்க்காரத்திற்குப் பதில்  கடலை மாவு, பயத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள், வாசனை பொடி, காய்ந்த எலுமிச்சை பழ தோல் அனைத்தையும் சேர்ந்து பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம். 

கடலை மாவு, பன்னீர்

எண்ணை பசை,  சாதாரண சருமம் உள்ளவர்கள், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீரில் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவலாம்.

நீர்ச்சத்து அவசியம் 

கற்றாலை ஜெல் சிறந்த மருந்தாகும். வீட்டின் கொல்லைப்புறத்தில் கற்றாலை இருந்தால் அதை பறித்து அதில் உள்ள கூழ் பகுதியை சருமத்தில் பூசி ஊறவைத்து குளிக்கலாம். அதேபோல் வெள்ளரிக்காய் உடலின் நீர் சத்தினை தக்கவைக்கும். சருமத்திற்கு குளிர்ச்சி தரும். வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து குறையும். அதனால் குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். 

பால் கிளென்சர்

வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கிளென்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சரும ஓட்டையில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும். சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். பால் சிறந்த கிளின்சராக செயல்படுகிறது. குளிர்ந்த பாலை கொஞ்சம் பஞ்சில் மூழ்கி எடுத்து அதை முகத்தில் துடைக்கலாம். அழுக்கு நீங்கி முகம் புத்துணர்ச்சியாகும். தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமையை தவிர்க்கலாம். 

கிருமி தாக்குதல்

வியர்வையால் பங்கல் இன்பக்ஷன் ஏற்படும். மார்பக அடிப்பகுதி அக்குள் போன்ற பகுதியில் வியர்வை தங்கி அதனால் சரும பிரச்னை ஏற்படும். அதை தவிர்க்க வெளியே செல்லும் போது ஆன்டி பங்கல் பவுடர் பயன்படுத்தலாம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே குளிக்கும் போது உடலில் மஞ்சள் பூசி குளிக்கலாம். சரும நோய் ஏற்படாது. முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS