ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று
கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.
துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.
நவராத்திரி 9 நாள் வழிபாட்டு முறை
முதலாம் நாள்
சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள்
இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.நைவேத்தியம்: தயிர் சாதம்.
மூன்றாம் நாள்
மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.நைவேத்தியம்: வெண் பொங்கல்.
நான்காம் நாள்
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.நைவேத்தியம்: புளியோதரை.
ஆறாம் நாள்
இந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.நைவேத்தியம்: தேங்காய் சாதம்.
ஏழாம் நாள்
அன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.
எட்டாம் நாள்
இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள்
இன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.நைவேத்தியம்: அக்கார வடிசல்.
நவராத்திரி பூஜை பலன்கள்
நவராத்திரி கொலுவில் கீழே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும்.
நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம்.
நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர்.
நவதானிய வகைகள் வருமாறு:
* கோதுமை * பச்சரிசி * துவரை * பச்சைப்பயறு * கடலை * மொச்சை * எள்ளு * உளுந்து * கொள்ளு
ஒரு முறை தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குருவான சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தைச் செய்து, உண்ணாவிரதம் இருந்து வழிபாடு செய்தால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும் என்று குருவான சுதாமா வெற்றியின் ரகசியத்தை கூறியருளினார்.
குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான் சுரதா மன்னன். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புது யுகத்தையே உண்டு பண்ணினான்.
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அதன்படி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களில் இருந்து விடுதலை பெற்றான். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
முதலாம் படி
கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
இரண்டாம் படி
அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளில் கொலுவில் வைக்க வேண்டும்.
மூன்றாம் படி
மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.
நாலாம் படி
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.
ஐந்தாம் படி
ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.
ஆறாம் படி
இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.
ஏழாம் படி
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.
எட்டாம் படி
தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.
ஒன்பதாம் படி
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.